என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த நாகேஷ்வர்ராவ் காலமானார்.
ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் நாகேஷ்வர்ராவ் என்கிற ஆதீஷ். உடல்நலக்குறைவால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் தீனா, இசையமைப்பாளர் கண்மணிராஜா, இயக்குநர் ஆனந்த் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன.
இதுதவிர, ராகவா லாரன்சின் காஞ்சனா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகமும் வந்துள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே 2 பாகங்களாக வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடமும், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவிடமும் பேசி வருகின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், திடீரென அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படமான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ், அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.
இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார்.

இந்த நிலையில் ‘மைதான்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேசை திடீரென்று நீக்கி விட்டு பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். மைதான் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தார். இதுவே அவர் நீக்கத்துக்கு காரணம் என்கின்றனர்.
இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார். ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுசி ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தேடு' படத்தின் விமர்சனம்.
நாயகன் சஞ்சயும், நாயகி மேக்னாவும் காதலித்து வருகிறார். இவர்களின் காதல் மேக்னாவின் வளர்ப்பு தந்தைக்கு பிடிக்காமல் போகிறது. இதனால், சஞ்சயை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். இதே சமயம், மேக்னாவை மற்றொரு இளைஞர் காதலிக்கிறார். அவரின் காதலை ஏற்காததால் மேக்னாவை கடத்த திட்டமிடுகிறார்.
இறுதியில் சஞ்சய், மேக்னா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சஞ்சயை மேக்னாவின் வளர்ப்பு தந்தை தீர்த்து கட்டினாரா? மேக்னாவை ஒருதலையாக காதலிப்பவரின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சய், தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மேக்னா ஏற்கனவே படங்களில் நடித்திருப்பதால், இதில் கொஞ்சம் ஆறுதலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாகவும், நாயகியின் வளர்ப்பு தந்தையாகவும் வரும் சிவகாசி முருகேசன், பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் சுசி.ஈஸ்வர், அதில் செல்பி மோகத்தால் ஏற்படும் விளைவுகளையும், ஒரு தலை காதலால் ஏற்படும் விளைவுகளையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை தெளிவு இல்லாததால் அது பெரியதாக எடுபட வில்லை.

டி.ஜே.கோபிநாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். சபரியின் ஒளிப்பதிவு பெரியதாக கவரவில்லை.
மொத்தத்தில் ‘தேடு’ தேட முடியவில்லை.
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில் நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்று நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகரான எஸ்.வி.சேகர் பட விழாவில் கூறியிருக்கிறார்.
அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இவ்விழாவில் எஸ்.வி.சேகர் பேசும்போது, ‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும். இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகிறது. சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

முதலில் சினிமாவை தெரிந்துகொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப்படத்தில் பெரிய பிளஸ் அமலாபால். அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன். சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற. சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என்றார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவை வரி ஏய்ப்பு புகார் காரணமாக நேரில் ஆஜராக உத்தரவு விடப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குக்குலூரு கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புக்காக சென்னை சென்று இருந்தார்.
பின்னர் அதிகாரிகள் ராஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதேபோல் நடிகை ராஷ்மிகாவுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை ராஷ்மிகாவுக்கு வீடு, திருமண மண்டபம் தவிர சொந்தமாக விளம்பர நிறுவனமும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகளும் உள்ளதாக தெரிகிறது.

மேலும் ராஷ்மிகாவின் தந்தை மதன் மஞ்சண்ணா, தாய் சுமன் ஆகியோரின் பெயர்களிலும் கடந்த ஒரு வருடத்திற்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பதிவாகி உள்ளன. சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக இதுதொடர்பான விசாரணைக்கு பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ராஷ்மிகாவும், அவருடைய பெற்றோரும் விரைவில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதோ அந்த பறவை போல படத்தின் விழாவில் பேசிய அமலாபால், கிராமகா எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது என்று கூறினார்.
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நடிகை அமலாபால் பேசும்போது, ‘இந்த படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும். கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. இயக்குனர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும். எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்’ என்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
அதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.

பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும். மீ டூவில் புகார் சொன்னவர்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். எண்ணெய் உணவுகளை தள்ளிவைக்க வேண்டும். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது புதிய படத்தை தமிழகத்தில் விளம்பரம் செய்ய பேட்டியளித்திருந்தார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மகேஷ் பாபு தனது கல்லூரி காலத்தை சென்னையில் தான் கழித்தார். சூர்யா, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலருடன் சென்னை லயோலா கல்லூரியில் படித்த அனுபவத்தையும் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
பேட்டியின் இடையே ஸ்பைடர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ், விஜய், மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரிய சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு உங்கள் பதில் என்ன என தொகுப்பாளர் கேட்க, தளபதி விஜய்யுடன் இணைந்து பணி புரிவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். நல்ல இயக்குநர், சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் பண்ணலாம் என்றார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தை முன்னதாக விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால், கால்ஷீட் காரணங்களுக்காக அந்த கூட்டணி உருவாகவில்லை. அந்த பேட்டியில் மகேஷ் பாபுவுக்கு பிடித்த தமிழ் இயக்குநர் யார் என்ற கேள்விக்கு சட்டென்று ஷங்கர் சார் என பதிலளித்தார்.
ஸ்டீபன் ககனின் இயக்கத்தில் ராபர்ட் டவ்னி ஜூனியர், மரியோன் கோடில்லார்ட் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டூ லிட்டில்’ படத்தின் விமர்சனம்.
மிருகங்களிடம் பேசும் அபூர்வ திறமையை கொண்ட டாக்டர் டூ லிட்டில், தன்னுடைய மனைவியின் மரணத்திற்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதனால் வெளி உலகத்தோடு தொடர்பில்லாமல் தன்னுடைய பிரம்மாண்டமான அரண்மனையில் மிருகங்களுடன் முடங்கி கிடக்கிறார். திடீரென நாட்டுடைய ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வருமாறு டாக்டர் டூ லிட்டிலிற்கு அழைப்பு வருகிறது.

பின்னர் ராணியை பரிசோதனை செய்யும் டாக்டர் டூ லிட்டில், அவருடைய உடலில் விஷம் கலந்திருப்பதை அறிகிறார். ஒரு அபூர்வ பழத்தின் மூலம் தான் ராணியை காப்பாற்ற முடியும் என்பதால், அந்த பழத்தை தேடி டாக்டர் டூ லிட்டில், அவருடன் அரண்மனையில் இருக்கும் மிருகங்களுடன் செல்கிறார். இந்த பயணத்தின் போது அவருக்கு அந்த அபூர்வ பழம் கிடைத்ததா? இல்லையா? ராணிக்கு விஷம் வைத்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராபர்ட் டவ்னி ஜூனியர், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். இதனால் டூ லிட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தில் அவரது நடிப்பு எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் தான். காமெடி காட்சிகள் ஓரிரு இடங்களில் ஒர்க் அவுட் ஆனாலும், பெரும்பாலான இடங்களில் எடுபடாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். படம் பார்ப்பவர்களுக்கு நம்ம அயர்ன் மேன் ஏன் இப்படி பண்ணினார்னு கேட்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் படம் பலமாக இருந்தாலும், ஸ்டீபன் ககனின் மோசமான திரைக்கதை சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் கதாபாத்திரங்களின் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இப்படத்தில் வரும் டுவிஸ்ட்டுகளும் பார்த்து பழகியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. டேனி எல்ஃப்மேனின் பின்னணி இசையும், குயிலெர்மோ நவாரோவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன.
மொத்தத்தில் ’டூ லிட்டில்’ ஏமாற்றம்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில், பிரபல இயக்குனர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அரவிந்த் சாமி, எம்ஜிஆர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தலைவி படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எம்ஜிஆரின் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.






