என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஸ்டீபன் ககனின் இயக்கத்தில் ராபர்ட் டவ்னி ஜூனியர், மரியோன் கோடில்லார்ட் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டூ லிட்டில்’ படத்தின் விமர்சனம்.
    மிருகங்களிடம் பேசும் அபூர்வ திறமையை கொண்ட டாக்டர் டூ லிட்டில், தன்னுடைய மனைவியின் மரணத்திற்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதனால் வெளி உலகத்தோடு தொடர்பில்லாமல் தன்னுடைய பிரம்மாண்டமான அரண்மனையில் மிருகங்களுடன் முடங்கி கிடக்கிறார். திடீரென நாட்டுடைய ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வருமாறு டாக்டர் டூ லிட்டிலிற்கு அழைப்பு வருகிறது. 

    டூ லிட்டில்

    பின்னர் ராணியை பரிசோதனை செய்யும் டாக்டர் டூ லிட்டில், அவருடைய உடலில் விஷம் கலந்திருப்பதை அறிகிறார். ஒரு அபூர்வ பழத்தின் மூலம் தான் ராணியை காப்பாற்ற முடியும் என்பதால், அந்த பழத்தை தேடி டாக்டர் டூ லிட்டில், அவருடன் அரண்மனையில் இருக்கும் மிருகங்களுடன் செல்கிறார். இந்த பயணத்தின் போது அவருக்கு அந்த அபூர்வ பழம் கிடைத்ததா? இல்லையா? ராணிக்கு விஷம் வைத்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டூ லிட்டில்

    ராபர்ட் டவ்னி ஜூனியர், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். இதனால் டூ லிட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தில் அவரது நடிப்பு எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் தான். காமெடி காட்சிகள் ஓரிரு இடங்களில் ஒர்க் அவுட் ஆனாலும், பெரும்பாலான இடங்களில் எடுபடாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். படம் பார்ப்பவர்களுக்கு நம்ம அயர்ன் மேன் ஏன் இப்படி பண்ணினார்னு கேட்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

    டூ லிட்டில்

    தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் படம் பலமாக இருந்தாலும், ஸ்டீபன் ககனின் மோசமான திரைக்கதை சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் கதாபாத்திரங்களின் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இப்படத்தில் வரும் டுவிஸ்ட்டுகளும் பார்த்து பழகியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. டேனி எல்ஃப்மேனின் பின்னணி இசையும், குயிலெர்மோ நவாரோவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன. 

    மொத்தத்தில் ’டூ லிட்டில்’ ஏமாற்றம்.
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில், பிரபல இயக்குனர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அரவிந்த் சாமி, எம்ஜிஆர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    சமுத்திரகனி

    இந்நிலையில், தலைவி படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எம்ஜிஆரின் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.
    75 வயது நடிகர் ஒருவர் திருமணமான மறுநாளே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    வங்காள மொழியின் பிரபல நடிகர்களில் ஒருவர் திபாங்கர் டே. இவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின் அவர் நடிகை டோலான் ராய் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நீண்டகாலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இதை அடுத்து இருவரும் கடந்த 16-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். 

    மனைவியுடன் திபாங்கர் டே

    திருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக அந்த திருமண விழா நடந்து முடிந்தது. இந்த திருமணம் மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணம் முடிந்த மறுநாள் திபாங்கர் டே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் பயோபிக்கை, பாலிவுட்டில் அஜித் பட இயக்குனர் இயக்கி வருகிறார்.
    `குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களையும் இயக்கினார். கடைசியாக `யட்சன்' படத்தை இயக்கியிருந்தார். 

    இதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஷேர்ஷா எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். 

    ஷேர்ஷா படத்தின் போஸ்டர்

    அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரன் ஜோகர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். சந்தீப் ஸ்ரீவத்சவா இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார். இப்படம் இந்தாண்டு ஜூலை 3-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
    தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால், அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் என கூறியுள்ளார்.
    தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    தனது டுவிட்டர் பக்கத்தில் 2 பக்க கடிதத்தை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- “நான் 2 ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன். சொந்த வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டன. நானும், எனது மனைவியும் பிரிந்து தனித்தனி வீடுகளில் வாழ்ந்தோம். மனைவி பிரிவால் மதுவுக்கு அடிமையானேன். மன அழுத்தம் ஏற்பட்டது. தூக்கம் வரவில்லை. உடல் பலகீனமானது. நிதி நெருக்கடி ஏற்பட்டது.

    விஷ்ணு விஷாலின் கடிதம்

    இதனால் நான் தயாரித்த படத்தை 21 நாளில் கைவிட்டேன். படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டு படுக்கையில் இருந்தேன். 11 கிலோ எடை கூடியது. நல்ல பட வாய்ப்புகளை இழந்தேன். விவாகரத்து, குழந்தையின் பிரிவு, பண இழப்பு, காயம், குடிப்பழக்கம் ஆகியவற்றால் எனது வாழ்க்கை சீர்குலைந்தது.

    பிறகு மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்தேன். பயிற்சியாளர் வைத்து உடற்பயிற்சி செய்தேன். மது அருந்துவதை குறைத்தேன். யோகா கற்றேன். 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வலுவாக மாறி இருக்கிறேன். என்னைப்போல் நிறைய பேர் இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்வது நேர்மறையாக சிந்தித்து வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி மீண்டு வாருங்கள்.”

    இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
    தமிழில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்த பிறகு, தான் அதற்கு அடிமையானதாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி தெரிவித்துள்ளார்.
    ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்தவர் ஹூமா குரோஷி. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், ரஜினி படத்தில் நடித்த பிறகு உணவு பழக்கத்தை மாற்றியுள்ளதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகைகள் கவர்ச்சிக்கு மட்டுமல்ல, கதைக்கும் முக்கியம் என்ற கருத்து பரவி வருகிறது. கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கஷ்டப்பட கதாநாயகிகள் தயாராகி இருக்கிறார்கள். உழைப்புக்கு பலனும் கிடைக்கிறது. நான் சினிமாவில் நடிக்க குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ஆனாலும் உறுதியாக இருந்து நடிகையானேன்.

    ஹூமா குரோஷி

    நான் வட இந்திய பெண். தென்னிந்திய உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய உணவுகள் இப்போது பிடிக்கவில்லை. பட வாய்ப்புக்காக வலைத்தளத்தில் நான் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கிறார்கள். கவர்ச்சி படங்களை பார்த்து எப்படி பட வாய்ப்புகள் தருவார்கள். சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது. மேலும் பல திறமைகள் வேண்டும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    யூன் வூ பிங் இயக்கத்தில் டோனி ஜா, மேக்ஸ் ஜாங் நடிப்பில் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி படத்தின் விமர்சனம்.
    தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மேக்ஸ் ஜாங், ஒருவரிடம் ஏற்பட்ட தோல்வியால் தற்காப்பு கலையை விட்டுவிட்டு ஒரு கடை வைத்துக் கொண்டு மகனுடன் வாழ்ந்து வருகிறார். இனி யாரிடமும் சண்டை போடக் கூடாது என்று இருக்கும் மேக்ஸ் ஜாங், ஒருநாள் தன் மகனுக்காக பரிசு வாங்கிக் கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு கேங்கிடம் சண்டை ஏற்படுகிறது.

    மாஸ்டர் இசட் விமர்சனம்

    இந்த சண்டையில் அவர்களை அடித்து நொறுக்குகிறார் மேக்ஸ் ஜாங். இதன்பின் கோபமடையும் அந்த கேங், மேக்ஸ் ஜாங்கை பழிவாங்க நினைக்கிறார்கள். மேலும் மேக்ஸ் ஜாங்கிற்கு பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இறுதியில் மேக்ஸ் ஜாங் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? யாரிடமும் சண்டை போடக்கூடாது என்ற முடிவு அவர் மாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் ஜாங், சண்டைக்காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனுக்காக சண்டைப்போடுவது, தயங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். வில்லனாக வரும் பட்டிஸ்டா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் டோனி ஜா.

    மாஸ்டர் இசட் விமர்சனம்

    தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் யூன் வூ பிங். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் பிரம்மாண்டமாகவும் ரசிக்கும் படியாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மேக்ஸ் ஜாங் - டோனி ஜா, மேக்ஸ் ஜாங் - பட்டிஸ்டா சண்டைக்காட்சிகள் சிறப்பு. டே டையின் இசையும், டேவிட்டின் ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி’ அதிரடி.
    இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் வாலி, குஷி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

    ஏற்கனவே திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். பொம்மை படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் இருந்த பிரியா பவானி சங்கர் புகைப்படத்தை பார்த்து கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா போன்று தெரிகிறது இல்லையா என்று எஸ்.ஜே.சூர்யா பாராட்டி இருந்தார்.

    எஸ்ஜே சூர்யா ட்விட்

    இந்த நிலையில் பொம்மை படப்பிடிப்பில் பிரியா பவானி சங்கர் மீது எஸ்.ஜே.சூர்யா காதல் வயப்பட்டு தனது காதலை அவரிடம் சொன்னதாகவும், அந்த காதலை ஏற்க பிரியா பவானி சங்கர் மறுத்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதனை எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில் மறுத்துள்ளார்.

    “பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக நான் அவரிடம் சொன்னதாகவும், காதலை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தவறான தகவல் பரவி உள்ளது. மான்ஸ்டர் படத்தில் இருந்து எனக்கு அவர் சிறந்த தோழியாக இருக்கிறார். அவர் ஒரு திறமையான நடிகை. தயவு செய்து அடிப்படை இல்லாத தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார். 
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
    பாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. 

    அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். 

    பிரபாஸ்

    இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்கம் அன்னபூர்னா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
    ஏஎல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். விஜய் டைரக்டு செய்கிறார்.

    தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்தும் எழுதி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

    அரவிந்த்சாமி

    இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க அரவிந்தசாமியை தேர்வு செய்தனர். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் அணுகியபோது உடனே ஒப்புக்கொண்டார்.

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் அரவிந்த் சாமியின் தோற்றத்தையும் சிறிய வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் பாராட்டி வருகிறார்கள். 
    இயக்குனர் ஒருவர் தன்னுடைய காதலிக்காக செய்திருக்கும் காரியம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறதாம்.
    நம்பர் ஒன் நடிகையும் ரவுடி இயக்குனரும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நடிகை தற்போது ஒரு படத்திற்காக விரதம் இருந்து வருகிறாராம். இதற்காக பல கோயில்களுக்கு சென்று வழிபட்டும் வந்தார்களாம். இந்நிலையில், இயக்குனர் தன்னுடைய காதலிக்காக வேண்டி சாமிக்கு மாலை போட்டிருக்கிறாராம்.

    ஏற்கனவே காதலிக்காக படங்களை இயக்காமல் அவருடனே படப்பிடிப்பு சென்று வரும் இயக்குனர், தற்போது நடிகை நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விரதம் இருந்து மாலை போட்டியிருப்பது, பலரும் காதலிக்காக இப்படியெல்லாம் செய்வாரா இயக்குனர் என்று பேசி வருகிறார்களாம்.
    தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் பட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விபரத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். 

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

    பட்டாஸ் வசூல்

    இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    ×