என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரேஸிங் செய்ய சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அஜித் நடிக்கும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா பேமிலி மேன் என்ற வெப் தொடரிலும் நடித்து இருக்கிறார். வெப் தொடருக்கு மாறியது குறித்து சமந்தா கூறும்போது, “டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். வெப் தொடர்கள் இந்தியா முழுவதும் பிரலமாகி வருகின்றன. ரசிகர்களின் வரவேற்பும் கிடைக்கிறது. எனவேதான் வெப் தொடரில் நடித்தேன். இதில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தது” என்றார்.
சமந்தா மேலும் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சில நேரம் கதாபாத்திரங்கள் கடினமாக இருக்கும். நினைத்த மாதிரி திரையில் வராமல் போனால் அதில் நடித்தவர்களை விமர்சிப்பார்கள். நினைத்த மாதிரி நடிப்பு அமைந்துவிட்டால் பாராட்டுகள் குவியும். சூப்பர் டீலக்ஸ் படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்னால் இப்படித்தான் யோசித்தேன்.

அந்த கதாபாத்திரத்தை ஏற்கும்போதே கொஞ்சம் துணிச்சலாகவும், எதிர்மறை தன்மையோடும் இருப்பதை உணர்ந்தேன். அதில் சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. நடிப்பு சரியாக இல்லை என்றால் ரசிகர்கள் திட்டுவார்கள் எனவே நடிக்கலாமா? வேண்டாமா? என்று பயந்தேன். இறுதியில் நடிப்பது என்று முடிவு செய்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. மாறாக சிறந்த நடிகை விருது கிடைத்தது. இந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்.
இவ்வாறு சமந்தா கூறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட சினிமா படமாக தயாராகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா குந்தவையாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதுபோல் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை என்பதால் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா நடிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. குந்தவைதான் வந்தியத்தேவனுக்கு ஜோடி. எனவே கார்த்திக்கு ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(கில்டு) சார்பில் பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

அதில், ‘தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சில நாட்களிலேயே தங்களது இணையதளத்தில் திருட்டுதனமாக வெளியிடுகிறது. இதன்காரணமாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மேக்கிங் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நிறைவடைந்த நிலையில், படம் குறித்த ருசீகர தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் தம்மிடம் காட்டியதாகவும், அந்த புகைப்படங்கள் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தி படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.
இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இந்த ரீமேக் படத்தை மோகன் ராஜா இயக்குவது உறுதியாகியுள்ளது.

'அந்தாதூன்' படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது தபுவின் கதாபாத்திரம்தான். அதில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவரின் பட வாய்ப்பை தடுத்த நடிகருக்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறாராம்.
சங்க நடிகரை காதலித்து வந்த வரமான நடிகை, வேறு பெண்ணுடன் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து, நடிகரை பகைத்துக் கொண்டாராம். மேலும் நடிகரை பல இடங்களில் வசைப்பாடி வந்தாராம்.
இதனால், கடுப்பான நடிகர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, அம்மணிக்கு வர இருந்த புதிய படங்களை தடுத்து நிறுத்தி, அவரது மார்க்கெட்டையே ஆட்டம் காண வைத்து விட்டாராம். இதற்கெல்லாம் அசராத நடிகை, நடிகரின் எதிரி நடிகர்களை சந்தித்து பட வேட்டை நடத்தி சில படங்களை கைப்பற்றியிருக்கிறாராம்.
பிரபல நடிகை ஒருவர் 20 வயதில் தான் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை ஒரே ஆண்டில் முழுவதுமாக இழந்திருக்கிறார்.
ஜோகனஸ்பெர்க்கை சேர்ந்தவர் மின்னி ஜோன்ஸ். தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என்னுடைய 20 வயதில் லிஜிட் என்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதில் எனக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்தது. ஆனால் அடுத்த வருடமே என்னுடைய 21-வது வயதில் என்னுடைய ஆடம்பர செலவுகளால் அனைத்து பணத்தையும் இழந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பாடத்தை கற்று தந்துள்ளது.

அதன் பிறகு உடல் பராமரிப்பு தொடர்பான தொழிலை தொடங்கினேன், நடித்து கொண்டே தொழிலை கவனித்து வருகிறேன். தற்போது எனது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனியே தன்னந்தனியே, வாடிமச்சினியே என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜெனிபர், தற்போது வில்லியாக களமிறங்கி இருக்கிறார்.
அர்ஜுன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘ரிதம்’. இதில் தனியே என்ற பாடலும் நடனம் ஆடி மிகவும் பிரபலமானவர் ஜெனிபர். இப்படத்தை தொடர்ந்து, பல படங்களில் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் ‘குடிமகன்’ என்ற திரைப்படம் வெளியானது.

நடனத்தாலும், நடிகையாகவும் கவனத்தை ஈர்த்த ஜெனிபர், தற்போது வில்லியாக களமிறங்கி ரசிகர்களை கவர இருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும், அம்மன் என்னும் தொடரில் வில்லியாக ஜெனிபர் தற்போது நடித்து வருகிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் ஜானியும் நடித்து வருகிறார். இந்த தொடரை ரவி பிரியன் இயக்கி வருகிறார்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பன்னிகுட்டி படத்தின் டிரைலரை மாதவன் வெளியிட்டிருக்கிறார்.
பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் கருணாகரன், யோகிபாபு இருவரும் ‘பன்னிகுட்டி’ என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கிறார். காமெடி கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
The fantastic trailer of #Pannikutty starring @iYogiBabu & #Karunakaran
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 27, 2020
Directed by #Anucharan of #Kirumi produced by @lycaproductions@supertalkies@sameerbrhttps://t.co/HB2AE6ITDY.. A BIG salute to @LycaProductions@Subhaskaran for supporting such films.
அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை தமன்னா, தன்னுடைய வாழ்க்கையை புத்தகங்கள் மாற்றியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழில் புதிய படங்கள் இல்லாத தமன்னா, தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா, தனது வாழ்க்கையை மாற்றிய இரண்டு புத்தகங்களைப்பற்றி கூறினார்.
அதாவது, நான் அதிகமாக புத்தகங்களை படிக்க மாட்டேன். ஆனபோதும் நான் படித்த இரண்டு புத்தகங்கள்தான் எனது வாழ்க்கையே மாற்றின. ஓஷோவின் உண்மையான பெயர் என்ற புத்தகத்தை பிடித்தபிறகு ஆன்மீகத்தில் எனக்கு ஈடுபாட்டையும், புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதையடுத்து, ரோரி ப்ரீட்மேன் மற்றும் கிம் பர்னூயின் எழுதிய ஸ்கின்னி பிட்ச் என்ற புத்தகத்தை படித்த பிறகு அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவத்துக்கு மாறினேன். இப்படி இந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்க்கை முறையையே மாற்றி விட்டன என்கிறார் தமன்னா.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, என் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாங்கள் வீட்டில் எப்போதுமே இந்து, முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை. ஏனென்றால் என் மனைவி இந்து. நான் முஸ்லிம். என் குழந்தைகள் இந்தியர்கள். என் மகள் ஒருமுறை என்னிடம் அவளது பள்ளி படிவங்களில் மதம் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக மதம் குறித்து என்னிடம் கேட்டாள்.

அப்போது அவளிடம், ‘நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள்’ என நான் எளிமையாக அந்தப் படிவத்தில் எழுதினேன். இஸ்லாமிய மத கடமைகளின்படி நான் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில்லை. ஆனால் நான் இஸ்லாமியன்.
நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.






