என் மலர்
சினிமா செய்திகள்
ஹீரோ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கல்யாணி பிரியதர்ஷன், என்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடித்த 'ஹலோ' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் மூலம் கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமானார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'வரனே ஆவஷ்யமுண்டு' படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும், பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மரைக்காயர்' படத்தில் மோகன்லாலுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். அந்த அனுபவம் குறித்து கூறும்போது, "அப்பாவுடன் பணியாற்றினால் நான் அதிகம் பயப்படுவேன் என்று அவருக்குத் தெரியும். அவரது படத்தில் நான் சில நாட்கள் கவுரவ வேடத்தில் நடித்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சில வசனங்களே எனக்குக் கஷ்டமாக இருந்தன.
என்னை எப்படி இயக்குவது என்பது அவருக்கும் பிடிபடவில்லை. அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படி நடிப்பது என்பது எனக்கும் புரியவில்லை. நான் வசனங்களை மறந்துவிட்டேன் என்று சத்தம் போட்டார். ஆனால் நான் வசனங்களை மறக்கவில்லை. பதற்றம்தான். 'உன் முதல் ஐந்து படங்கள் வரை நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றக் கூடாது. ஏனென்றால் அது உனக்கு அதிக அழுத்தத்தைத் தரும்' என்றார். அவர் சொன்னது இப்போது எனக்குப் புரிகிறது" என்றார் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினி, தமிழ், மலையாளம் மொழிகளில் பிரபலமாகி இருக்கும் மஞ்சு வாரியரை பாராட்டி இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். இந்த படத்தில் இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார்.
மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார்.

அதில் பரதநாட்டியம் சம்பந்தமான ஒரு சில காட்சிகளில் மஞ்சுவாரியர் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன ரஜினி, அவரது நடிப்பை சந்தோஷ் சிவனிடம் பாராட்டி இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவல் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ்சிவன்.
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படமாகிறது.
விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), சாய்னா நேவல் (பாட்மின்டன்), கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கங்குலி வேடத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷும், விஷாலும் பட வெளியீட்டில் மோத உள்ளனர்.
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் சக்ரா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலே இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

சக்ரா படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சில தினங்களில் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இப்படத்தை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படமும் அதே தினத்தன்று ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கும் படம் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். பப்பி படத்தில் நடித்த வருண் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ராஹே இப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா தான், ஜோஷ்வா படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல பாடகர் கார்த்திக், ஜோஷ்வா படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே அரவான், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்.
'உயிர்', 'மிருகம்' 'சிந்து சமவெளி' போன்ற படங்களை இயக்கியவர் சாமி. இவர் அடுத்ததாக 'அக்கா குருவி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது பெர்சியன் மொழியில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியாகி பல உயரிய விருதுகளை வென்ற 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படம் குறித்து இயக்குனர் சாமி கூறுகையில், இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிறப்பு விருந்தினராக 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தை இயக்கிய இயக்குனர் மஜீத் மஜிதியை அழைக்கவிருக்கிறேன். இப்படத்தை என் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீரெட்டி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- தற்போது 2 படங்களில் நடித்து வருகிறேன். தமிழக மக்கள் எனக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள்.
இந்தநிலையில் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தெலுங்கு துணை நடிகை ஒருவரும், 50 வயது நிரம்பிய டான்ஸ் மாஸ்டர் ஒருவரும் என்னைப்பற்றி தரக்குறைவான தகவல்களை வெளியிடுகிறார்கள்.

நான் வீடு வாங்கியது, கார் வாங்கியது எப்படி? எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளனர்? என்பது பற்றியெல்லாம் அவதூறு தகவல்களை வெளியிடுகிறார்கள். அது எனது தனிப்பட்ட விஷயம். மேலும் என்னை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளேன். சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. புகார் தொடர்பான உரிய ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவன், தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார். சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே. படம் கடந்த வருடம் மே மாதம் திரைக்கு வந்தது.
அதன்பிறகு புதிய பட வேலைகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் சில வருடங்களுக்கு முன்பே முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன.

இந்நிலையில் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. அதுபோல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமும் செல்வராகவனிடம் இருக்கிறது. எனவே இந்த இரண்டில் எந்த படத்தை அவர் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, மீம்ஸில் தன்னை விட வடிவேலு தான் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், தேவதாஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் நிதினுடன் ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் தற்போது திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்த ராஷ்மிகா விதவிதமான உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தினார். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்து போஸ் கொடுத்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், அதே தோற்றத்தில் உள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை ராஷ்மிகா படத்துடன் இணைத்து சிலர் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டனர்.
ராஷ்மிகாவின் அனைத்து புகைப்படங்களும் வடிவேலு கதாபாத்திரங்களின் சாயலில் இருந்ததால் இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. மீம்ஸ்களை ராஷ்மிகாவும் பார்த்து ரசித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், “என்னால் இதனை ஒப்புக்கொள்ள முடியாது. வடிவேலு ரொம்பவும் அழகாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் மதராச பட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமான எமி ஜாக்சனை, தற்கொலை சம்பவம் ஒன்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் படம் மூலம் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன் அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், ஐ, கெத்து, தங்க மகன், தெறி, தேவி, 2.0 என சில படங்களில் நடித்திருந்தார்.
சூப்பர் கேர்ள்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் இவர் நடித்து வந்தார். அண்மையில் தன் காதலரை திருமணம் செய்துகொண்டவர் குழந்தையும் பெற்றெடுத்தார். கர்ப்ப காலத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் தற்போது உருக்கமான பதிவை சோகத்துடன் வெளியிட்டுள்ளார்.

இதில் விசயம் என்னவென்றால் பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரோலின் காதலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் வருத்தம் தெரிவித்ததோடு, மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் டிவி சானல்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ரூ.15 கோடி வரை நஷ்டம் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் 2018ம் ஆண்டு வெளிவந்த ‘96’ படத்தை தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்டார்கள். முதல் நாளில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படம் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது.
படம் தோல்வியை நோக்கிப் போவதாக கடந்த வாரமே சொன்னார்கள். அதன்படியே படம் எதிர்பாராத பெரும் தோல்வியைக் கொடுத்து தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் ‘96’ படம் வெளியாகும் முன்பே படத்தைப் பார்த்து தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜு.

அவருடைய இருபது வருட திரையுலக வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமான தோல்வி இது என டோலிவுட்டில் சொல்கிறார்கள். இப்படத்தை அவர் ரீமேக் செய்ய ஆரம்பிக்கும் முன்பே, தெலுங்கில் இப்படம் ஓடாது என நண்பர்கள் எச்சரித்தார்களாம். அதையும் மீறி அவர் தயாரித்து தோல்வியடைந்துவிட்டார் என்கிறார்கள். இப்படம் மூலம் சுமார் ரூ.15 கோடி வரை நஷ்டம் வரலாம் என்பது தகவல்.






