என் மலர்
சினிமா செய்திகள்
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பேசிய இயக்குனர் கவுதம் மேனன், சிம்பு தலையாட்டினால் விடிவி 2 உருவாகும் என்று கூறியிருக்கிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இதில் சிம்பு கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.
இப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்து விட்டது. சமந்தா தமிழ் திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் கடந்ததையும், விண்ணைத்தாண்டி வருவாயா 10 ஆண்டுகள் ஆனதையும், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினார்கள்.

இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனனிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் வருமா என்று கேட்டார். இதற்கு கவுதம் மேனன், சிம்பு தலையாட்டினால் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை என்று ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்க் தமன்னா என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு ரசிகர், 'எங்க தலயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?' என்று கேட்டிருக்கிறார். அதேபோல் சூர்யா ரசிகர் ஒருவரும் மீண்டும் சூர்யாவுடன் இணைவது எப்போது என்று கேட்டார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித்துடன் வீரம் படத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா, 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...' என்று பாடி மீண்டும் வாய்ப்பு வந்தால் யார் வேண்டாம் என்பார்கள் என்பது போன்ற பதிலும் அளித்திருக்கிறார். அதேபோல் 'சூர்யாவுடன் நடிப்பது என்பது எனது கனவு' என குறிப்பிட்டிருக்கிறார். சூர்யாவுடன் ஏற்கனவே அயன் படத்தில் தமன்னா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறாக போய்விட்டது என்று பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா படுக்கையறை காட்சியில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் லீக்கானது. அதனை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா தற்போது மாளிகை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டியளித்த அவர் கூறியதாவது, வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தது தவறாக போய்விட்டது.
அதன்பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே பெருமளவில் வருகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். 1970-80களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி, ‘ஆடு புலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத விளக்கும், 16 வயதினிலே’ போன்ற பல படங்கள் வெற்றிப்படங்களாகவும் காலம் கடந்து நிற்கும் படங்களாகவும் அமைந்தன.
ஒரு கட்டத்தில், ‘இருவரும் இணைந்து நடித்தால் சம்பளம் போதுமானதாக கிடைக்காது; இனி தனித்தனியாகவே நடிப்போம்‘ என, இருவரும் முடிவு செய்தனர். இதன்படி, தனித்தனியாக நடிக்க துவங்கிய இருவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
தற்போது, 40 ஆண்டுகள் கழித்து, ரஜினியும் கமலும் சினிமாவில் இணைய உள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் முடிவடைந்ததும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ‘தில்லுமுல்லு’ படப்பாணியில் இந்த படத்தில் கமல் கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கான அறிவிப்பை மார்ச் 5ம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அப்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருக்கும் படம் உறுதியாகும். மார்ச் மாதமே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டதாகவும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத விபத்தால் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் மூலமாக, மறைந்த பாலச்சந்தர் குடும்பத்தினருக்கு உதவ, கமலும், ரஜினியும் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது ரஜினி நடித்து வரும், ‘அண்ணாத்த’ படம் இறுதி கட்டத்தில் உள்ளது. முழுநேர அரசியலுக்கு ரஜினி வரும்போது, ரஜினி, கமல் இணையும் படம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழக அரசியலில் ரஜினி, கமல் கூட்டணியும் உருவாக வாய்ப்புள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்தது. கடந்த 19-ந்தேதி படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை ஏற்று ஷங்கர் இன்று வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

ஷங்கரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு அதனை வாக்குமூலமாக பதிவு செய்தனர். இந்த படப்பிடிப்புக்கு அனுமதி எப்படி பெறப்பட்டது. யாரிடம் வாங்கப்பட்டது. முறையான பாதுகாப்பு வசதி செய்யாதது ஏன்? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஷங்கர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் கமலும் விரைவில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய துல்கர் சல்மான், கண்டிப்பாக கவுதம் மேனன் படத்தில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகி இருக்கிறது `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கவுதம் மேனன், தொலைக்காட்சி பிரபலம் ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் துல்கர் சல்மான் பேசியதாவது: இந்தப்படத்தின் விளம்பரத்தை ஆரம்பித்தபோது எல்லோரும் என்னிடம் “ஏன் இந்த இடைவெளி” என கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. என்னை மறக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தக்கதை கேட்டவுடனே மிக உற்சாகமாக இருந்தது. எப்போது இந்தப்படம் செய்யலாம் எனக் காத்திருந்தேன்.

நான் முதலில் பயந்திருந்தேன் படக்குழு புதிது எப்படி இருக்கும் என நினைத்தேன். என் மீது எல்லோரும் அன்பாக இருந்தார்கள். ரீத்து வர்மாவின் பெல்லி சூப்புலு பார்த்துள்ளேன் அவர் மிகத்திறமை வாய்ந்தவர். அவர் ஒரு தமிழ்பெண் போலவே இப்படத்தில் இருப்பார். படப்பிப்பிடிப்பில் பெரும் ஒத்துழைப்பு தந்தார். கவுதம் மேனன் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.
அவர் இல்லாவிட்டால் இந்தப்படம் காமெடியாக இருந்திருக்கும். இந்தப்படத்தின் சூப்பர்ஸ்டார் அவர் தான். அவர் விசிறியாக படப்பிடிப்பில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அவருடன் கண்டிப்பாக ஒரு காதல் படம் நடிப்பேன். இயக்குநர் தேசிங்கு பயங்கர தெளிவானவர், அவரது கனவு இந்தப்படம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இந்தப்படம் கண்டிப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரஜினி பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்றுள்ளனர்.
Gear up to venture into the wilderness of India with survival expert @BearGrylls and the ultimate superstar @Rajinikanth in an action packed adventure. Premieres 23 March at 8 PM, only on Discovery #ThalaivaOnDiscoverypic.twitter.com/zSS4GsSCL4
— Discovery Channel IN (@DiscoveryIN) February 27, 2020
அந்த வரிசையில் ரஜினியும் கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஜனவரி இறுதியில் நடைபெற்றது. பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் மார்ச் 23-ல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை டிஸ்கவரி சேனல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ், வில்லி வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “கதாநாயகியாக நடித்துக்கொண்டு இன்னொரு புறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன். நிவேதா என்றால் அழகான பெண் என்று நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க ஆசையாக உள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால் ஆகிய மூன்று பேருக்கும் மகளாக நடித்து இருக்கிறேன். மூன்று பேரும் சினிமாவில் ஜாம்பவான்கள். அப்படிப்பட்ட பெரிய நடிகர்களுக்கு மகளாக நடித்த வாய்ப்பு எனக்கு தான் கிடைத்துள்ளது. அவர்களிடம் நடிக்கும்போது நிறைய அனுபவங்களை கற்றேன்.
ரஜினி நடிப்பு பற்றி மட்டும் இன்றி மதத்தை சாராத மனிதனுக்கு சம்பந்தப்பட்ட ஆன்மிக விஷயங்கள் பற்றி நிறைய பேசுவார். திருமணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. ஆண்களில் பொய் பேசுபவர்களை பிடிக்காது. உண்மை பேசுபவர்களை மட்டுமே பிடிக்கும். எனக்கு கணவராக வருபவர் பயணங்களை விரும்புகிறவராக இருக்க வேண்டும். எனக்கு பயணம் செய்வது பிடிக்கும்.”
இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ரீமேக் குறித்து விசு கூறிய புகாருக்கு, நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் தெரிவித்திருந்தார். இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார். நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நெற்றிக்கண் ரீமேக் பணிகளை தொடங்கவில்லை என நடிகர் தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசு கூறியிருப்பதாவது:- “நடிகர் தனுஷ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நெற்றிக்கண் படத்தை நான் ரீமேக் செய்ய இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது இல்லை. நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த படம் என்று கேட்டார். அதற்கு நெற்றிக்கண் என்று பதில் அளித்தேன்.

அந்த படத்தின் உரிமையை நான் யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதல் கட்ட பணிகளை தொடங்கியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார். கீர்த்தி சுரேஷின் தாய் மேனகாவும் என்னை தொடர்பு கொண்டு நெற்றிக்கண் ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேசை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றார்”. இவ்வாறு விசு கூறியுள்ளார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
காசோலை மோசடி வழக்கில், ஏப்ரல் 2ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த உன் சமையல் அறையில் படம் தமிழில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இந்தியில் அப்படத்தை ரீமேக் செய்தார். இந்தியில் தடிகா என்ற பெயரில் வெளியான அந்த படத்தை தயாரிப்பதற்காக, பைனான்சியர் ஒருவரிடம் இருந்து கடனாக பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை பெருநகர 3-வது விரைவு குற்றவியல் கோர்ட்டில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது இந்தி திரைப்பட பைனான்சியர் ஒருவர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் அவர், ‘‘இந்தி படத்தை தயாரிக்க நடிகர் பிரகாஷ்ராஜ் ரூ.5 கோடிக்கு வழங்கிய காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாக’’ கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பெருநகர 3-வது விரைவு குற்றவியல் மாஜிஸ்திரேட்டு, வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கிறார்.
இவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: ’நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை. எப்போது வாய்ப்புகள் இருக்கும், எப்போது இல்லாமல் போகும் என்று தெரியாது. நல்ல படங்கள் அமைந்தால் நடிகையாக இன்னும் கொஞ்ச காலம் எங்களை ஞாபகம் வைத்து இருப்பார்கள். அந்த மாதிரி படங்கள் அமையாவிட்டால் மறந்து விடுவார்கள். நான் சினிமா துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.
இந்த காலகட்டத்தில் சினிமா, தொடர்கள், சர்வதேச படங்களில் எனது திறமையை வெளிப்படுத்தி நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன். ஆனாலும் தொழில் ரீதியாக எப்போதும் பயந்து கொண்டேதான் இருக்கிறேன். நாளை எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என்ற சந்தேகத்திலேயே நாட்களை கடத்துகிறேன்.

வாய்ப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத துறை எங்களுடையது. எப்போது எங்கள் கதை முடியும் என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் புதிய கதைகள் கதாபாத்திரங்கள் கிடைத்து அவற்றில் நடிப்பது என்பது கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி நல்ல கதைகளுக்காகத்தான் காத்து இருக்கிறேன்.
நல்ல கதைகள் கிடைக்காவிட்டால் என்னை மறந்து விடுவார்கள் என்ற பயமும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது”
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
ரஜினி நடிப்பில் இமான் இசையில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசையை வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். மேலும் டைட்டில் லுக் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது டைட்டில் லுக் வீடியோவின் பின்னணி இசையை இமான் வாசிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#ANNAATTHE#DImmanMusical
— D.IMMAN (@immancomposer) February 26, 2020
Title Motion Poster BGM!
Praise God! pic.twitter.com/JfrmW0NGTU
கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.






