என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரெளபதி படத்தின் விமர்சனம்.
    ரிச்சர்ட் விழுப்புரம் அருகே இருக்கும் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு செல்கிறார். பின்னர் ஜாமினில் வெளியே வரும் ரிச்சர்டு, சென்னையில் தனது நண்பருடன் தங்குகிறார். ராயபுரத்தில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் டீ விற்று வருகிறார். அங்கே திருமண பதிவு விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதையும் போலி திருமணங்கள் நடத்தப்படுவதையும் கண்டுபிடிக்கிறார். 

    இதற்கு அரசு அதிகாரியான பதிவாளரும் உடந்தை என்பதால் இந்த குற்றத்தை பொறி வைத்து பிடிக்க ரிச்சர்டு திட்டமிடுகிறார். இந்த சூழலில் போலி திருமணங்கள் செய்து வைக்கும் நபர்களை கொன்று அதன் வீடியோக்களை கமிஷனருக்கே அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ரிச்சர்ட் என்ன செய்தார்? அவர் மனைவி திரெளபதிக்கு என்ன ஆனது? திருமண மோசடிகளுக்கு அவர் தீர்வு கண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    திரெளபதி படக்குழு

    ரிச்சர்டுக்கு படத்தையே தாங்கும் கதாபாத்திரம். பொறுமை, ஆக்ரோஷம் இரண்டையும் காட்டும் கதாபாத்திரம். நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார். அவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமார் சிறப்பான நடிப்பு. சமூகத்துக்காக அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்கள் வாங்குகின்றன. சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் கருணாசுக்கு நிறைவான வேடம். மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். 

    பொய்யான காதலை எதிர்க்கிறேன் என்று ஒட்டுமொத்த காதலர்களையும் காதலையும் கொச்சைப்படுத்தி இருக்கவேண்டாம். படம் முழுக்க லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. அதேபோல் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணங்கள் நடக்கவேண்டும் என்பது கற்காலத்துக்கே நம்மை அழைத்து செல்வதுடன் நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது. 

    திரெளபதி படக்குழு

    குறைகள் இருந்தாலும் திருமண மோசடிகளை விளக்கும் படமாக திரெளபதி அமைந்துள்ளது. விழிப்புணர்வு படமாக மோகன்.ஜி கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டுள்ளார். 

    மனோஜ் நாராயணனின் நேர்த்தியான ஒளிப்பதிவும், ஜூபினின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. 

    மொத்தத்தில் ‘திரெளபதி’ பலம்.
    இந்தியன் 2 விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
    ஜென்டில்மேன், முதல்வன், ஐ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் ‌ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் கடந்த 19-ந்தேதி நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ‌ஷங்கர் இந்த சம்பவம் குறித்து நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன். 

    ஷங்கர்

    எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

    அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்‌ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இதேபோல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வசூல் பார்த்தது.  

    அஜய் தேவ்கன்

    இதனிடையே டிரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியில் கைதி படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 12-ந் தேதி ரிலீசாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா, கஞ்சா கருப்பு, மதுசூதனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இரும்பு மனிதன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் சந்தோஷ் பிரதாப் ஓட்டல் தொழில் மீது ஆர்வம் கொண்டவர். நன்றாக சமைக்கவும் தெரிந்தவர். ஒரு சின்ன ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். அனாதைகளாக இருக்கும் 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். மனநலம் பாதித்த பிச்சைக்கார பெண்மணி ஒருவருக்கு பிறக்கும் குழந்தையும் அனாதையாகிவிட அதையும் எடுத்து மூவரையும் தன் சொந்த மகன்கள் போல வளர்க்கிறார். 

    இந்த சூழலில் திருட வரும் கஞ்சா கருப்புவை தன் கடையிலேயே உதவியாளராகவும் வைத்துக்கொள்கிறார் சந்தோஷ். இந்நிலையில் இடங்களை மிரட்டி பிடுங்கும் தாதா மதுசூதனன் கண்களில் சந்தோஷின் கடை படுகிறது. சந்தோஷை மிரட்டி பணிய வைக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் தொழிலில் அபார வளர்ச்சி அடையும் சந்தோஷ் பல ஓட்டல்களுக்கு முதலாளியாகிறார். 

    இரும்பு மனிதன் படக்குழு

    மகன்களை பிரித்துவிடுவார் என்பதால் காதலில் அர்ச்சனாவை ஒதுக்கும் சந்தோஷ், அதன் பின்னர் கல்யாணம் செய்துகொள்ளாமல் மகன்களுக்காகவே வாழ்கிறார். ஆனால் மகன்களோ சொத்துகளை பிடுங்கிக்கொண்டு சந்தோஷை நடுத்தெருவில் விடுகின்றனர். மகன்களின் துரோகத்தில் இருந்து சந்தோஷ் மீண்டு ஜெயித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் சந்தோஷ் பிரதாப் இதுவரை பார்த்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தையே தன் நடிப்பால் தான் தாங்கவேண்டும் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். இளவயது துடிதுடிப்பையும் முதுமையில் வரும் பொறுமையையும் அனுபவத்தையும் ஒருசேர காட்டி இருக்கிறார். 

    இரும்பு மனிதன் படக்குழு

    அர்ச்சனா சந்தோஷை துரத்தி துரத்தி காதலிக்கிறார். திடீர் என்று அவர் மாறுவதை தான் நம்ப முடியவில்லை. கஞ்சா கருப்பு கலகலப்பாக கதையை நகர்த்துகிறார். இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். வழக்கமான வில்லன் தான் என்றாலும் மதுசூதனன் தோற்றங்களிலும் உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டுகிறார். மகன்களாக வரும் நிஷாந்த், அகில், திலீப் மூவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

    இளைஞர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும் வகையில், தயாரிப்பாளர் ஜோசப் பேபியின் கதையை கையில் எடுத்து அதை ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக தர முயன்று இருக்கிறார் இயக்குனர் டிஸ்னி. சில காட்சிகள் மட்டும் பழைய படங்களை நினைவுபடுத்துவது பலவீனம். இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன. 

    இரும்பு மனிதன் படக்குழு

    பிள்ளைகளை முழுமையாக நம்பினால் என்ன நிலை ஏற்படும் என்பதையும் காட்டி இருக்கிறார். சமூகத்துக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமான படமாக இரும்பு மனிதன் அமைந்துள்ளது.

    கேஎஸ்.மனோஜின் இசையும் கே.கோகுலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. எஸ்பி.அகமதுவின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி விறுவிறுவென நகர்கிறது.

    மொத்தத்தில் ‘இரும்பு மனிதன்’ வலிமை.
    சுந்தர்.சியின் அரண்மனை 3-ம் பாகத்தில் நடித்து வரும் ராஷி கன்னா, கவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
    தமிழில் அடங்க மறு, அயோக்யா படங்களில் நடித்துள்ளவர் ராஷி கன்னா. தற்போது சுந்தர்.சியின் அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் கூறியதாவது:- “கதாநாயகியாக ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டேன். இனிமேல் எனது படங்களின் வசூல் கணக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது எல்லோரும் வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தை பார்த்து கவர்ச்சியில் எல்லை மீறி இருக்கிறீர்களே இது உங்களுக்கு தேவையா என்று கேட்கின்றனர்.

    கதாநாயகியாக முக்கிய இடத்துக்கு போய் விட்டேன். இந்த நிலையில் நான் நடிக்கிற படங்கள் எனது கதாபாத்திரம் மூலமாக எனக்கு ஒரு மரியாதையை கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமான இருக்கிறேன். கவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன். பெண்கள் கதாபாத்திரங்களை இழிவுபடுத்தி காட்டினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

    ராஷி கன்னா

    அந்த மாதிரி காட்சிகள் வைத்தால் பெண்களை இழிவுபடுத்தும் இந்த காட்சி தேவையா, என்று இயக்குனர்களிடம் நேரடியாகவே கேட்டு விடுவேன். சில நேரம் எனது கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். சில நேரம் கதைக்கு தேவை என்று வாக்குவாதம் செய்வார்கள். எது எப்படி இருந்தாலும் எனது கருத்தை சொல்லாமல் இருக்க மாட்டேன்.”

    இவ்வாறு ராஷி கன்னா கூறினார்.
    ஹரி உத்ரா இயக்கத்தில் சிவா நிஷாந்த், ஐரா, ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கல்தா’ படத்தின் விமர்சனம்.
    தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கிராமத்தில் பணத்திற்காக அரசியல்வாதிகள் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொட்டி குவிக்கிறார்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சிவா நிஷாந்தின் அப்பா கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த கழிவு பொருட்களின் பாதிப்பால் ஆண்டனியின் மனைவி உட்பட ஊரில் பலர் இறக்கிறார்கள். இதனால் கோபமடையும் ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி ஊர் கவுன்சிலரிடம் சண்டை போடுகிறார். கவுன்சிலரோ ஆண்டனியை கொலை செய்து விடுகிறார்.

    கல்தா படக்குழு

    இறுதியில் ஊர் மக்கள் இதை எதிர்த்து போராடினார்களா? கவுன்சிலர் என்ன ஆனார்? மருத்து கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவா நிஷாந்த் அறிமுக நடிகர் என்று தெரியாதளவிற்கு நடனம், சண்டைக்காட்சிகளில் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ஐரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்த ஆண்டனி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் கஜராஜ்.

    கல்தா படக்குழு

    கழிவுகள் கொட்டப்படுவதால் கிராமங்கள் எப்படி பாதிக்கப்படுகிறது. பணத்திற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள். கழிவுகளால் சுகாதாரம் எப்படி கெடுகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. இவரின் முயற்சிக்கு பெரிய பாராட்டுகள். லாஜிக் மீறல்களும் திரைக்கதையில் கொஞ்சம் கவனமும் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    கல்தா படக்குழு

    ஜெய் கிரிஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக அப்பா பாடல் ரசிக்க வைக்கிறது. வாசுவின் ஒளிப்பதிவு கவனிக்க வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கல்தா’ அரசியல் பழகு.
    “நறுவி” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
    செல்லா நடிப்பில் உருவாகி இருக்கும் “நறுவி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.  

    இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,“பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம்.இந்த படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன்.

    நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழா

    இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். 

    இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.
    கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் ‘ராபின் ஹுட்’ படத்தின் முன்னோட்டம்.
    இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின் ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

    லூமியெர்ஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ராபின் ஹுட்.

    இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின் ஹுட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - இக்பால் அஸ்மி, இசை - ஸ்ரீநாத் விஜய், பாடல்கள் - கபிலன், வசனம் - ஜோதி அருணாச்சலம், எடிட்டிங் - ஜோமின், கலை - கே.எஸ்.வேணுகோபால், நடனம் - நந்தா, தயாரிப்பு மேற்பார்வை - சார்ல்ஸ், தயாரிப்பு - ஜூட் மேய்னி, ஜனார்திக் சின்னராசா, ரமணா பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் - கார்த்திக் பழனியப்பன். 
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண், தற்போது நடித்து வரும் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
    தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

    படப்பிடிப்பு நிறைவு நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். நாயகன் ஹரீஷ் கல்யாண், மொத்த படகுழுவிற்கும் வீட்டில் தயாரான பிரியாணியுடன் விருந்தளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    படக்குழுவினர்

    இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இதன் பின்னணி வேலைகளை படக்குழுவினர் தொடங்க இருக்கிறார்கள்.
    திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    திரிஷா

    இப்படம் பிப்ரவரி 28ம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக கிடைத்ததால் தற்போது இப்படத்தை மார்ச் மாதம் மாதம் வெளியிட இருப்பதாக இயக்குனர் திருஞானம் தெரிவித்திருக்கிறார்.
    தமிழில் சிங்கம் புலி, கந்தர்வன் படங்களில் நடித்த ஹனி ரோஸ், பாலியல் பிரச்சனைகளை எதிர்கொண்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.
    சிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டது பற்றி அவர் சமீபத்தில் பேட்டி அளித்தார். 

    அதில், ‘சினிமாவில் நடிக்க வந்த பிறகுதான் நிறைய விஷயங்களை கற்கத் தொடங்கினேன். சினிமா என்பது இளம் பெண்களின் கனவு. ஆனால் சினிமாவில் நான் எதிர்பார்த்தபடி என்னால் பிரகாசிக்க முடியாத நிலை இருந்தது. அதுவும் ஒருவகையில் நல்லாதாகவே இருந்தது. அப்போதுதான் நல்ல கதைகளை தேர்வு செய்யத் தொடங்கினேன். 

    ஹனி ரோஸ்

    'திருவனந்தபுரம் லாட்ஜ்' படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நிறைய படங்கள் வந்தன. நான் பட வாய்ப்பில்லாமல் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் பெற்றோர் எப்போதும் என்னுடன் இருந்ததால் அதில் சிக்கவில்லை. 

    அதுபோன்ற பிரச்னையான படங்களை ஏற்காமல் தவிர்த்துவிட்டேன். அதன்பிறகு பிரச்னைகள் வரவில்லை. உடல் ரீதியாக என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை. ஆனால் திரையுலகில் இப்போதுள்ள நிலைமை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. புதுமுக நடிகைகள் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். பிரபலமான நடிகை என்பதால் எனக்கு அதுபோன்ற பிரச்னைகள் வருவதில்லை. அதேசமயம் திரையுலகில் தற்போது ஒரு பாசிடிவ் சூழல் நிலவுகிறது’. இவ்வாறு அவர் கூறினார். 
    சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பேசிய இயக்குனர் கவுதம் மேனன், சிம்பு தலையாட்டினால் விடிவி 2 உருவாகும் என்று கூறியிருக்கிறார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இதில் சிம்பு கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

    இப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்து விட்டது. சமந்தா தமிழ் திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் கடந்ததையும், விண்ணைத்தாண்டி வருவாயா 10 ஆண்டுகள் ஆனதையும், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினார்கள்.

    விண்ணைத்தாண்டி வருவாயா படக்குழு

    இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனனிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் வருமா என்று கேட்டார். இதற்கு கவுதம் மேனன், சிம்பு தலையாட்டினால் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.
    ×