என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வேய்ன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் விமர்சனம்.
    ஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது. 

    சீனியர் என்னும் ஜீவாவை வளர்த்தவரும் சே என்னும் குதிரையும் தான் அவருக்கு எல்லாமே... சீனியர் மறைவுக்கு பின் தனியாகிறார். நாகூரில் தங்கி இருக்கும்போது அங்கு கட்டுப்பாடான முஸ்லீம் குடும்பத்தில் இருக்கும் நடாஷாவுக்கு ஜீவா மீது காதல் ஏற்பட்டு அவருடன் வந்துவிடுகிறார். இருவரும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடாஷாவுக்காக வீடு எடுத்து வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் ஏற்படும் மதக்கலவரம் அவர்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஜிப்ஸி விமர்சனம்

    கர்நாடக எல்லையில் காவேரியை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கலவர காட்சியில் தொடங்கும் படம், முடியும் வரை உண்மைகளின் குவியல்களாகவே இருக்கிறது. மதக்கலவரம், விசாரணைக்கைதி, நாடோடிகளான ஜிப்ஸிக்களின் வாழ்க்கை என செய்திகளாக நாம் கடக்கும் சம்பவங்களை நிஜத்துக்கு வெகு நெருக்கமாக படம் பிடித்து காட்டி நம்மை நிலைகுலைய செய்கிறார் ராஜூமுருகன். அதிலும் சென்சார் பிரச்சினையால் கறுப்பு வெள்ளையாக்கப்பட்ட அந்த இடைவேளை காட்சி நம்மை கலவர இடத்துக்கே கூட்டி செல்கிறது. இறுதி காட்சியில் வன்முறைக்கும் மனிதத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை காட்சிப்படுத்தி இருப்பது கலங்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மையாக இருந்து படத்தை எழுதி இயக்கிய ராஜூமுருகனுக்கு பாராட்டுகள். 

    ஜீவாவின் சினிமா வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான படம். எந்த காட்சியிலும் ஜீவா தெரியாமல் ஜிப்ஸியாக வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் கலகலப்பாக ரசிக்க வைக்கும் ஜீவா இரண்டாம் பாதியில் நம்மை உருகி நெகிழ வைக்கிறார். கதாபாத்திரத்தின் மனநிலை, கதையோட்டம் இரண்டையும் தனது நடிப்பாலும் உடல்மொழிகளாலும் காட்டி அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை பார்க்கும்போது அவர் கண்களில் தெரியும் பாசம் கலங்க வைக்கிறது. 

    ஜிப்ஸி விமர்சனம்

    நடாஷா சிங் அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். இனி வாய்ப்புகள் குவியும். அவரது தந்தையாக வரும் லால் ஜோஸ் கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியரை கண் முன் கொண்டு வந்துள்ளார். கேரள கம்யூனிஸ்டாக சன்னி வேய்ன், கலவரத்தை நடத்தும் வன்முறையாளராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள். 

    படத்தின் மிகப்பெரிய பலம் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும். நாடோடிகளின் வாழ்க்கைக்காக இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு நிலப்பரப்புகளின் அழகை அள்ளிக்கொண்டு வரும் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் கலவர காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்து பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் கதையோட்டத்தை நமக்கு கடத்துகிறது. ரேமண்டின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி மட்டும் சற்று தொய்வு தருகிறது. 

    நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்தின் இரண்டு முகங்கள் சம்பவத்தை மையமாக எடுத்துக்கொண்டு அதில் அழகான காதல் கதையையும், நாடோடி வாழ்க்கையையும் சேர்த்து மனிதத்தின் முக்கியத்துவத்தை படைப்பாக்கி இருக்கிறார் ராஜூ முருகன். இன்றைய காலகட்டத்துக்கு மிக மிக அத்தியாவசியமான படமாக வெளியாகி இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘ஜிப்ஸி’ கனமான காதல்.
    நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார் என்று பாரதிராஜா பேட்டியளித்துள்ளார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

    சங்கத்துக்கு தேர்தல் நடத்த விருந்த நிலையில், அதில் முறை கேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 30ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது: -

    பாரதிராஜா

    ‘தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்.

    ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.

    பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும். தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். விஷால் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன.

    எனவே நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும்.

    இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
    அருண்காந்த் இயக்கத்தில் ராம்குமார், அஷ்வின் குமார், சாம்ஸ், ஒய்ஜி.மகேந்திரன், சந்தானபாரதி, டெல்லி கணேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த நிலை மாறும் படத்தின் விமர்சனம்.
    ஐடி துறையில் இருக்கும் அழுத்தம் தொடர்பாக பணியை விடும் இளைஞர் ஒருவர் நண்பனுடன் சேர்ந்து ஒரு இணைய வானொலி தொடங்குகிறார். அதன் மூலம் மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கும் நபர்களை போன் செய்து கிண்டல் செய்கிறார்கள். இதனால் மேட்ரிமோனியில் விளம்பரம் வெளியிடும் பத்திரிகைக்கு நஷ்டமாகிறது. இந்த விவகாரம் கோர்ட்டுக்கு வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

    பேராசையால் அதீத எதிர்பார்ப்புகளுடன் கொடுக்கப்படும் மேட்ரிமோனியல் விளம்பரங்களை படம் முழுக்க கிண்டலடித்துள்ளனர். சுவாரசியமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு சமூக கருத்தும் இதில் அடங்கி இருக்கிறது. 

    இளைஞர்களான ராம்குமார், அஷ்வின் குமார், அருண் காந்த் மூவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளார்கள். சாம்ஸ் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். அவரது மைக்கேல் ஜாக்சன் தோற்றமும் அவரது குறும்புகளும் சிரிப்பை வரவைக்கிறது. ஒய்.ஜி. மகேந்திரனின் வில்லத்தனத்திலும் நகைச்சுவை சேர்த்தது சாமர்த்தியம். 

    இந்த நிலை மாறும் விமர்சனம்

    கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படங்களுக்கு மத்தியில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியாகும் இண்டிபெண்டண்ட் மூவி எனப்படும் சுயாதீன படங்கள் வரிசையில் இந்த நிலை மாறும் படம் வெளியாகி இருக்கிறது. அருண் காந்த் என்ற இளைஞர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை, படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு, உடைகள், கிராபிக்ஸ் என பல துறைகளை கையாண்டு படத்தை எடுத்துள்ளார். 

    சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நல்ல சுவாரசியமான படமாகவும் வித்தியாசமான முயற்சியாகவும் அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் ‘இந்த நிலை மாறும்’ மாற்றம் வரும்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அமீர்கான் படத்திற்காக உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாதவனுடன் விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். வேறு மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகின்றன.

    சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடனும், மார்கோனி மதாய் என்ற மலையாள படத்தில் ஜெயராமுடனும் நடித்துள்ளார். அமீர்கானுடன் ‘லால் சிங் சத்தா’ என்ற இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. 

    பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘பாரஸ்ட் கம்’ படத்தின் இந்தி ரீமேக்காக லால் சிங் சத்தா தயாராகிறது.

    அமீர்கான் - விஜய் சேதுபதி

    இந்த படத்தில் அமீர்கான் உடல் எடையை 21 கிலோ குறைத்து நடிக்கிறார். அவரது தோற்றம் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் விஜய் சேதுபதியும், லால் சிங் சத்தா படத்தில் 25 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதுபதி கைவசம் தற்போது லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட 6 படங்கள் உள்ளன.
    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், நடிக்கும் படத்தில் பிரபல தயாரிப்பாளர் இணைந்திருக்கிறார்.
    கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். 

    ஜே.எஸ்.கே.சதீஷ்

    இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 
    மெட்ராஸ் படம் மூலம் பிரபலமான நடிகர் கலையரசன், அடுத்ததாக புதிய முகம் என்ற திகில் கதையில் நடித்து வருகிறார்.
    ‘ஐரா’ படத்துக்கு பிறகு பிரபல நடிகர் கலையரசன் கைவசம் ‘சைனா, டைட்டானிக், புதிய முகம், லாபம்’, தனுஷ் படம், ஆர்யா படம், ஜோதிகா படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. இதில் ‘புதிய முகம்’ படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம்.டி.பிரசாத் என்பவர் இயக்கி கொண்டிருக்கிறார். 

    இந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அருந்ததி நடித்துள்ளார். மேலும், ஜெகன், ஆர்.கே.சுரேஷ், மைம் கோபி, மனோ சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையமைத்து கொண்டிருக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், புவன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். 

    கலையரசன் - அருந்ததி

    சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் ரெடியாகும் இதனை ‘ஸ்ரீ கிருஷ்ணா மீடியா & எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. கலையரசனை பயன்படுத்தி முகம் தெரியாத ஒருவன் குற்றங்கள் செய்ய வைக்கிறான். அவனது திட்டங்களை கலையரசன் எப்படி முறியடித்தார் என்பதை திகிலுடன் சொல்கிறது புதிய முகம்.
    பெண்களை மையப்படுத்தி நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி வரும் IPC 376 திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    நந்திதா ஸ்வேதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் IPC 376. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் இது உருவாகி வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதா டூப் இல்லாமலே நடித்திருக்கிறார்.

    ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை, திரைக்கதை, எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. 

    IPC 376 படக்குழுவினர்

    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டமாக பின்னணி வேலைகளை படக்குழுவினர் கவனம் செலுத்த இருக்கிறார்கள்.
    வைபவ் நடிப்பில் டீகே இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். 

    காட்டேரி பட போஸ்டர்

    காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இயக்குனர் டீகே உருவாக்கி இருக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 17ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நிகிஷா படேல், பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் 'புலி'. இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிகிஷா படேல். குஜராத்தை பூர்விகமாக கொண்ட இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அழகுடன் கிளாமராகவும் நடிக்கத் தயங்காதவர். அதன் காரணமாக, தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். 

    தமிழில் 'தலைவன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சில கன்னடப் படங்களிலும் நடித்தார். தொடக்க காலத்தைத் தவிர அதன்பின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடியாக அவர் நடிக்கவே இல்லை. கதாபாத்திரங்களை விடவும் கிளாமருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 

    நிகிஷா படேல்

    ஆகவே, அவரால் இங்கு ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்து இருக்கிறார். மீண்டும் லண்டனுக்கே சென்று தங்க போகிறார். இதற்கு முன் கைவசம் ஏழு படங்களை வைத்திருக்கிறார். அதை முடிக்கும் வரை லண்டனுக்கும் சென்னைக்கும் போய் வருவாராம். அதன்பின் நிரந்தரமாக லண்டனிலேயே செட்டிலாகி அங்கு படங்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கவும் தீர்மானித்துள்ளார்.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன் மாணிக்கவேல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பிரபுதேவா

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் நாளை (மார்ச் 6) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏற்கனவே இருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
    கீரா இயக்கத்தில் சமுத்திரகனி, சாந்தினி, நித்தீஸ் வீரா நடிப்பில் உருவாகி இருக்கும் எட்டுத்திக்கும் பற படத்தின் முன்னோட்டம்.
    கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "எட்டுத்திக்கும் பற". வர்ணாலயா சினி கிரியேசன், வி5 மீடியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    எட்டுத்திக்கும் பற படக்குழு

    படம் குறித்து இயக்குனர் கீரா கூறியதாவது: "எட்டுத்திக்கும் பற" சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது. 'பற' என்பதைப் பலரும் சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். அது சாதியத்தின் குறியீடு அல்ல. 'பற' என்றால் பறத்தல். விடுதலையின் குறியீடாகவே இந்தத் தலைப்பை வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.
    ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் 'நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது. 

    ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக 'நோ டைம் டூ டை’ தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கும் இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார். 

    டேனியல் கிரேக்

    இந்தப் படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 25-ந் தேதி அமெரிக்காவிலும் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×