என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது யார் என்பது குறித்த ரகசியம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி உள்ளது.
    ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்ததோடு பிரம்மாண்ட வெற்றியும் பெற்றது. இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார்.

    இதில் வசீகரன், சிட்டி இருவரும் வரும் காட்சிகளில் பாடி டபுள் என்கிற வகையிலான டூப் போட்டு நடித்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ். எந்திரன் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், மனோஜ் தற்போது அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனோஜ் எந்திரன் படத்தில் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கிய பிரபல இந்தி தயாரிப்பாளரின் மகள் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
    பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கரீம் மொரானி. இவர் ரா ஒன், தில்வாலே உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். இவரது மகள் சாஷா கடந்த மார்ச் முதல் வாரத்தில் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பினார். இவருக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோகிலா பென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து சகோதரி சோயா, தந்தை கரீம் மொரானிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

    இந்தநிலையில் சாஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்து சாஷாவின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘சாஷா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்’’ என்றனர். 

    கரீம் மோரானி, சாஷா

    மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது குறித்து சாஷா சமூகவலைதளத்தில் கூறும்போது, ‘‘ஆஸ்பத்திரிக்கு சென்ற பிறகு நிம்மதியாக உணர்ந்தேன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2-வது நாள் முதல் உடல் நலம் தேறினேன். ஆஸ்பத்திரிக்கு சென்றது நான் எடுத்த சிறந்த முடிவாக அமைந்தது. உடனடியாக குணமாகியதாக உணர்கிறேன்’’ என்றார்.
    பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார்.
    சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிலா விமல். பின்னர் கிடாரி படத்திலும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்தானதால் நடிகை நிகிலா விமல் சமூக நலப்பணிகளில் இறங்கியுள்ளார்.

    அந்த வகையில் ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுப்பதை ஒருங்கிணைக்க கேரள மாநிலம் கண்ணூரில் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் வேலை பார்க்க தன்னார்வலர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

    நிகிலா விமல்

    இதனை அறிந்த நடிகை நிகிலா விமல் உடனே அந்த கால் சென்டரில் சேர்ந்து வேலை பார்க்கிறார். இது போன்ற இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ கால் சென்டரில் பணியாற்றுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார். நிகிலாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக மீ-டூவில் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். தற்போது இன்னொரு நடிகையும் பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் மான்வி கக்ரூ. இவர் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், போர் மோர் ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் போன்ற வெப் தொடர்கள் இவரது நடிப்பில் வந்தன.

    மான்வி கக்ரூ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னை போனில் ஒருவர் அழைத்து, தன்னை இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார். ஒரு வெப் தொடர் எடுக்கிறோம், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கதையை சொல்லுங்கள், எனக்கு பிடித்து இருந்தால் சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம் என்றேன். அவர் எனது சம்பளத்தை கூறினார். அது குறைவாக இருக்கிறது என்றேன். உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த தொகைக்கு சம்மதமா? என்றார். 

    மான்வி கக்ரூ

    ஒரேயடியாக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரே! என்று வியந்தேன். அதன்பிறகு இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க முடியும், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் நடிகர்சங்க உறுப்பினர்களுக்கும், திருநங்கைகளுக்கும் நடிகர் விஷால் உதவி செய்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி சங்கம் நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து சங்கத்தின் தனி அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதனை ஏற்று நடிகர்-நடிகைகள் பலர் நிதி அளித்து வருகிறார்கள். நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் 2 ஆயிரம் பேர் வங்கி கணக்கில் நடிகர் சங்கம் சார்பில் தலா ரூ.500 போடப்பட்டு உள்ளது.

    உதவி பொருட்களை வழங்கிய நடிகர் தினேஷ்

    இந்த நிலையில் சென்னையில் உள்ள நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் 1,500 பேருக்கு நடிகர் விஷால் ஒரு மாதத்துக்கான மளிகை சாமான்களை வழங்கினார். மேலும் 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான்களை வழங்கினார். இந்த உதவி பொருட்களை நடிகர் ஸ்ரீமன், தினேஷ் ஆகியோர் நேரில் வழங்கினர். வெளியூரில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி பொருட்கள் வழங்க விஷால் ஏற்பாடு செய்துள்ளார்.
    விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கிய அட்லீ, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 ஆண்டு இடைவேளைக்கு பின் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அட்லீ வெளியிட்டுள்ளார். அதன்படி, 'அந்தகாரம்'என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார்.
    விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அந்தகாரம் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிடப்படும் என அட்லீ தெரிவித்துள்ளார்.
    கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்கி உள்ள ராகவா லாரன்ஸ், தமிழ் புத்தாண்டில் மேலும் உதவிகளை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.3 கோடி வழங்கி இருந்தார். இந்த தொகை போதாது என்றும், மேலும் உதவிகள் வழங்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: “நிவாரண நிதிக்கு நான் அளித்த நன்கொடைக்கு பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். 

    பொதுமக்களிடம் இருந்தும் கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் பார்க்கும்போது இதயமே நொறுங்கி விடும்போல இருந்தது. அவை அனைத்துக்கும் நான் தந்த ரூ.3 கோடி போதாது. பொதுமக்கள் அழுவது பற்றிய வீடியோக்கள் என்னை மிகவும் பாதித்தது. அனைத்து கோயில்களும் தற்போது மூடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் பசியில் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன். 

    ராகவா லாரன்ஸ்

    கடவுள் எனக்கு சேவை செய்வதற்கான வேலையை கொடுத்து இருக்கிறார். சேவை செய்ய இதுதான் சரியான தருணம். எனவே மக்களுக்கும், அரசுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளேன். இப்போது நான் கொடுத்துள்ள ரூ.3 கோடி இல்லாமல் மேலும் நான் என்ன செய்யபோகிறேன் என்பதை அறிவிக்க இருக்கிறேன். ஆடிட்டரிடம் கலந்து பேசி அடுத்த உதவிகள் குறித்து 14-ந்தேதி தமிழ் புத்தாண்டில் அறிவிப்பேன்.”

    இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.
    கொரோனா பயத்தில் நாய், பூனைகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கடுமையாக சாடியுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, தினமும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வன விலங்கு பூங்காவில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 புலிகளுக்கும், 3 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிவதாகவும் வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்த நிலையில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் பயந்துபோன பலர் தங்கள் வீடுகளில் வளர்த்த நாய், பூனைகளை சாலைகளில் விரட்டி விடுவதாக சமூக வலைத்தளத்தில் பலர் புகைப்படங்களோடு வெளியிட்டனர். இதனை ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா கண்டித்துள்ளார்.  

    சோனாக்சி சின்கா

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செல்லப்பிராணிகளால் கொரோனா பரவுகிறது என்ற தகவலை நம்பி தங்கள் நாய், பூனைகளை வெளியேற்றுபவர்கள் முட்டாள்கள். உங்கள் அறியாமையையும், மனிதநேயமற்ற இதுபோன்ற செயல்களையும் கைவிடுங்கள். கொரோனாவை நாய்கள் பரப்புவது இல்லை. விலங்குகளிடம் அன்பு காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.
    சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். பல்வேறு திரைப்பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பெப்சிக்கு ரூ.50 லட்சத்தை வழங்கினார்.

    இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம் முன்பு நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தியுள்ளனர். திருநங்கைகளின் இந்த திடீர் போராட்டத்தால் ரஜினியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    பின்னர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் காவலாளி மூலம் ரூ.5 ஆயிரத்தை திருநங்கைகளிடம் வழங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய்குமார், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளனர். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி வருகின்றன. அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் நிதி வழங்கி வருகிறார்கள்.

    இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார். இதற்காக சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டினர். தற்போது மும்பை மாநகராட்சிக்கும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கி உள்ளார்.

    அக்‌ஷய்குமார்

    மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க இரவு-பகலாக வேலை செய்துவரும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஹன்சிகா

    இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், "கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு தான் உள்ளது" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் மோகன் தாஸ் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடித்துள்ள காடன், ஜகஜால கில்லாடி ஆகிய படங்களின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளன.

    இதையடுத்து எப்.ஐ.ஆர். எனும் படத்தை தயாரித்து நடிக்கிறார். அவரது அடுத்தப் பட வேலையை ஏப்ரல் 11ல் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். கொரோனா ஊரடங்கால் அது நடக்காமல் போனது. இருப்பினும் அப்படத்தின் டைட்டிலை வெளியிட்டு ரசிகர்களை திருப்தி படுத்தினார். அதன்படி அவர் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு மோகன் தாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 

    இப்படத்தை முரளி கார்த்திக் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே களவு எனும் படத்தை இயக்கி உள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க உள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். உண்மைக்கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. 
    நேற்று வெளியாகிய இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் உடல் முழுவதும் ரத்தக்கறையுடன் விஷ்ணு விஷால் இருப்பதுபோல் அப்போஸ்டர் அமைந்துள்ளது. 
    ×