என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பிரபல நடிகர் தனது சொந்த செலவில் 10 பஸ்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவிகள் வழங்கி வருகிறார்கள். தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து உதவியுள்ளார். 

    இதற்காக இரண்டு மாநில அரசுகளிடமும் முறையான அனுமதி பெற்று தனது சொந்த செலவில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார். சோனு சூட்டின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    சோனு சூட்

    சோனு சூட் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி நர்சுகளை, நடிகர் மோகன்லால் செல்போனில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்ட பலரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

    இதையொட்டி அபுதாபி, துபாய், சார்ஜா மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ‘கொரோனா’ சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் நர்சுகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றும் நர்சுகளின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு நடிகர் மோகன்லாலிடம் தரப்பட்டது. 

    மோகன்லாலுடன் பேசிய செவிலியர்கள்

    திட்டமிட்டபடி அந்த செல்போன் எண்களில் ஒவ்வொரு நர்சையும் நடிகர் மோகன்லால் தொடர்பு கொண்டு பேசினார். இதனை சற்றும் எதிர்பாராத நர்சுகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இந்த அவசர நேரத்தில் பணியாற்றும் நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என பாராட்டு தெரிவித்தார். சர்வதேச செவிலியர் தினத்தில் நெருக்கடியான நிலையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே தனியார் மருத்துவமனைகள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளன.
    ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் நடிகை பூனம் பாண்டே கைதானதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கடந்த ஞாயிறன்று தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றதாகவும், ஊரடங்கு சமயத்தில் காரணமின்றி பொதுவெளியில் சுற்றித்திரிந்த காரணத்தால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததாகவும் செய்திகள் பரவின. மேலும் அவரது விலை உயர்ந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: நான் ஞாயிற்றுக்கிழமை இரவு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து மூன்று படங்கள் பார்த்தேன். இந்நிலையில் நான் கைது செய்யப்பட்டதாகக் நினைத்து அன்று இரவில் இருந்து எனக்கு நிறைய நண்பர்கள் போன் செய்து வருகிறார்கள். நானும் அது தொடர்பான செய்திகளை பார்த்தேன். தயவு செய்து என்னை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    திருவல்லிக்கேணியில் உள்ள டி 1 காவல்நிலையத்துக்கு நேரில் சென்ற நடிகர் சூரி போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி நெகிழ வைத்துள்ளார்.
    கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவரும் இரவு பகல் பாராமல் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. 

    காவல்துறையினருடன் சூரி

    கொரோனா தடுப்பு பணிகளில் சூப்பர் ஹீரோவாக செயல்படும் காவலர்களை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சென்று பாராட்டியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டி 1 காவல்நிலையத்துக்கு சென்ற அவர் போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி நெகிழ வைத்தார். 

    காவல்துறையினருடன் சூரி

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா என்கிற கொடூரமான வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து  வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு, இரவு பகல் பாராமல், தன்னுடைய குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் வேலை செய்து வருகிறார்கள். நடமாடும் தெய்வமாக, காக்கி சட்டை போட்ட அய்யனாராக காவல்துறையினர் நம்மை பாதுகாத்து வருகிறார்கள். 

    காவல்துறையினருடன் சூரி

    இன்று காவல்துறையினரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. 50 பேருக்கு மேல் பாதித்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினர் பதறிப்போய் இருக்கிறார்கள். தன்னலமின்றி செயல்படும் இவர்கள் தான் ரியல் ஹீரோ. வழக்கமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவோம். ஆனால் எனக்கு இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கணும்னு தோணுச்சு. இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என கூறினார்.
    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பிரியாணி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, இண்டூர் மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் என 250 பேருக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவாக பிரியாணி, முககவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    கொரோனா அச்சத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் மக்கள் தியேட்டருக்கு வர பயப்படுவார்கள் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினை திரையுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர் அதிபர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சினிமா உலகமே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஊரடங்கு நிலை வாபசானால், இந்த பாதிப்பு நீங்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

    இதுபற்றி பட அதிபர், இயக்குனர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர், தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கேயார் கூறியதாவது: “ஊரடங்கு சட்டம் வாபஸ் ஆன பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய அளவில் வசூல் ஆகாது. தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வர பயப்படுவார்கள். அவர்களுக்கு முழுமையாக பயம் நீங்குவதற்கு ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள். தியேட்டர்களில் வசூல் குறைந்தால், அது தயாரிப்பாளர்களையும் பாதிக்கும்.

    கேயார்

    உதாரணத்துக்கு, ரூ.75 கோடி வசூல் செய்யும் ஒரு பெரிய கதாநாயகனின் படம், ரூ.45 கோடிதான் வசூல் செய்யும். தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்கும் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இணையதளங்களில் படம் பார்ப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். சினிமா, இன்னொரு பெரிய சவாலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது”.

    இவ்வாறு கேயார் கூறினார்.
    கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் ஜோர்டானில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ் கடத்தப்பட்டதாக பயந்ததாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
    தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிருத்விராஜ், ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். 

    அவரை மீட்டு வரும்படி திரையுலகினர் விடுத்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டது. பாலைவன பகுதியில் நல்ல உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக பிருத்விராஜ் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் பிருத்விராஜ் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவரது தாய் மல்லிகா சுகுமாரன் கவலை தெரிவித்துள்ளார்.

    மல்லிகா சுகுமாரன், பிருத்விராஜ்

    கொரோனா ஊரடங்கால் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் மல்லிகா சுகுமாரன் இதுபற்றி கூறியதாவது: “எனது மகன் பிருத்விராஜை யாரோ கடத்தி விட்டார்களோ என்று பயந்தேன். தனியாக இருக்கும் போதெல்லாம் இந்த பயம் வருகிறது. எனது மகன் சம்பந்தமான உண்மை தகவல்களை மற்றவர்கள் எனக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

    நடிகர் மோகன்லாலிடம் எனது பயம் பற்றி சொன்னேன். அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். சுரேஷ் கோபியிடமும் பேசினேன். இருவரும் ஜோர்டான் நிலவரத்தை என்னிடம் சொன்னார்கள். மத்திய மந்திரி முரளிதரன், ஜோர்டானில் இந்திய தூதரகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி ஆகியோரும் பயப்பட வேண்டாம் என்று என்னிடம் தெரிவித்தனர்”.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், லாக்டவுனால் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் வீட்டில் அதிக நாட்கள் இருந்தது இதுதான் முதல் தடவையாகும். குடும்பத்தோடு நேரத்தை கழித்துக்கொண்டு இருக்கிறேன். அம்மா, அப்பாவுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நேரத்தை வீணாக்கவில்லை. 

    எல்லோரும் கொரோனா கஷ்ட காலத்தில் பயத்துடன் மூச்சை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து எப்படியாவது மீள வேண்டும். மீள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் அம்மாவுக்கு நெருக்கம். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் எனது அம்மாதான். என்னை சரியான பாதையில் வழி நடத்தினார். எனக்கு சமையல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆண்டுகளாக அவர் முயற்சி செய்து கொண்டே இருந்தார். 

    காஜல் அகர்வால்

    ஆனால் எனக்கு நேரம் இல்லை. எப்போதுதான் கற்றுக்கொள்ள போகிறாயோ? என்று கூறிக்கொண்டே இருப்பார். இப்போது கொரோனா ஊரடங்கில் அம்மாவிடம் சமையல் கற்றுக்கொள்கிறேன். சமையல் அறை பொறுப்பையும் எடுத்துக்கொண்டேன். இதை பார்த்து அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். கொரோனா ஊரடங்கில் 2 மாதமாக அம்மாவுடன் சேர்ந்து இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது”.

    இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல மலையாள நடிகர் கலாபவன் ஜயேஷ். பல குரல் கலைஞரும் ஆவார். இதன்மூலமே அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் ‘முல்லா’ என்ற படத்தில் அறிமுகமானார். இதில் அவரது நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து பாசஞ்சர், கிரேசி கோபாலன், எல்சம்மா என்ன ஆண்குட்டி, சால்ட் அண்ட் பெப்பர், சுதி வத்மீகம், பிரேதம்-2 உள்பட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். கேரள ரசிகர்கள் மத்தியில் இவரது நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு இருந்தது.

    இந்த நிலையில் ஜயேசுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக திருச்சூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இரு தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கலாபவன் ஜயேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44. மரணம் அடைந்த கலாபவன் ஜயேசுக்கு, சுனஜா என்ற மனைவியும், சிவானி என்ற மகளும் உள்ளனர். இவரது மறைவுக்கு மலையாள நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    விஜய் சேதுபதி யதார்த்தமா சொன்னதை எடிட் செய்து சிலர் வதந்தி பரப்பி வருவதாக ரசிகர் மன்றத்தினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் இடத்தை பிடித்துள்ள விஜய் சேதுபதி, சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, கோவில்களில் அபிஷேகம் செய்வது குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை தற்போது சிலர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து இந்து கடவுள்களுக்கு எதிராக அவர் பேசி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. 

    விஜய் சேதுபதி மீது இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “விஜய்சேதுபதி ஒரு வருடத்துக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது கிரேசி மோகன் சொன்ன நகைச்சுவை துணுக்கை மறுபதிவு செய்திருந்தார். 

    விஜய் சேதுபதி

    அப்படி யதார்த்தமாக சொன்னதை மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியதாக அந்த காணொலியை எடிட் செய்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறாக பதிவிடுகிறார்கள். அந்த பதிவுகளையும், காணொலியையும் நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா ஊரடங்கால் 52 நாட்கள் முடங்கி இருந்த சினிமா துறைக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடங்கின.
    கொரோனா ஊரடங்கால் திரைப்பட தொழில் முற்றிலுமாக முடங்கியது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தியேட்டர்களை மூடினர். இந்தநிலையில் ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்கு பிந்தைய டப்பிங், ரீ ரிக்கார்டிங், எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி அரசுக்கு திரையுலக சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். 

    அதை ஏற்று படத்தொகுப்பு (எடிட்டிங்), குரல் பதிவு (டப்பிங்), ‘டி.ஐ’ எனப்படும் நிற ‘கிரேடிங்’, பின்னணி இசை, ஒளிக்கலவை ஆகிய தொழில்நுட்ப பணிகளை தலா 5 பேரை வைத்து மேற்கொள்ளவும், ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’ மற்றும் ‘விசுவல் கிராபிக்ஸ்’ பணிகளை 10 முதல் 15 பேரை வைத்து நடத்தவும் அரசு அனுமதி வழங்கியது. இந்த தொழில்நுட்ப பணிகள் நேற்று தொடங்கின.

    கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2, விஷால் நடிக்கும் சக்ரா, திரிஷா நடிக்கும் ராங்கி ஆகிய படங்களின் எடிட்டிங், கபடதாரி மற்றும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தின் டப்பிங் பணிகள் நடந்தன. 3 டெலிவிஷன் தொடர்களின் தொழில்நுட்ப பணிகளும் தொடங்கின. மேற்கண்ட தகவலை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

    ஸ்டூடியோக்களில் இந்த பணிகள் அனைத்தும் அரசு அறிவுறுத்தல்படி சமூக இடைவெளியுடன் நடந்தன. இதில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். இன்று முதல் மேலும் பல படங்களின் தொழில்நுட்ப பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தெலுங்கு படவுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
    தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் பலர் நடித்த திரைப்படங்களை தயாரித்தவர் தில் ராஜு. இவர் நேற்று  ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்

    49 வயதான தில் ராஜு முதல் மனைவி அனிதா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது மகள், தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.

    தில் ராஜு மற்றும் அவரது மனைவி

    இந்த நிலையில் மகளின் வற்புறுத்தல் காரணமாக நேற்று நிஜாமாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடுத்தர வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 

    ஊரடங்கு நேரத்தில் இந்தத் திருமணம் நடந்ததால் இருவீட்டாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
    ×