என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகிவரும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. 

    கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார்.

    டப்பிங் பணிகள்

    மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜான் மகேந்திரனுடன் இணைந்து தனஞ்செயன் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். 

    கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது பின்னணி வேலைகளுக்கு அரசு தளர்வு அளிக்கப்பட்டதால் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது. 


    உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
    தற்போது காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

    "காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் எங்களுடைய நல்லதுக்குத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல் எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது.  நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    டிரம்ப் மீது மக்களுக்கு அதிருப்தி என்று கலிபோர்னியாவில் இருந்து நடிகை தீபா ராமானுஜம் பேட்டி அளித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடிப்பவர்களுக்கு கவனம் ஈர்க்க வாய்ப்பு கிடைப்பது குறைவு. ஆனால் தான் நடித்த பிச்சைக்காரன், பசங்க 2, ரஜினி முருகன், ஸ்பைடர், சிவப்பு மஞ்சள் பச்சை உள்பட அனைத்து படங்களிலும் தனியாக தெரிந்து கவனம் ஈர்த்தவர் தீபா ராமானுஜம். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தீபா பேசிய பெண்களின் உடை தொடர்பான வசனம் தனியாகவே சமூகவலைதளங்களில் பிரபலம்.

    கணவருடன் அமெரிக்காவில் வசிக்கும் இவர் அடிப்படையில் நாடக இயக்குனர், நாடக நடிகை, தொழில் முனைவோர். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் இந்த சமயத்தில் அது குறித்து மாலை மலருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

    அமெரிக்கா எப்படி இருக்கிறது?
    கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கிறேன். மார்ச் 21 ஆம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தேன். கொரோனா காரணமாக ஊரடங்கை முதலில் அறிவித்தது கலிபோர்னியாதான். அந்த அறிவிப்பு வெளியானதும் எனது திட்டத்தை ரத்து செய்து இங்கேயே இருந்துவிட்டேன். அந்த முடிவு நல்லதாக போய்விட்டது. இந்தியா வந்து இருந்தால் தனியாக சிரமப்பட்டு இருப்பேன். இங்கே அனைவருக்கும் கொரோனா பயம்தான். எங்களுக்கு வீட்டிலேயே இருப்பது இப்போது பழகி விட்டது. ஆனால் இந்த அளவுக்கு உலக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

    அங்கு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறதே?
    ஆமாம். நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உலகம் முழுக்கவே அதிகரித்தாலும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவுகிறது.

    ஊரடங்கு அங்கு எப்படி இருந்தது?
    நான் இருக்கும் கலிபோர்னியாவில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. நாங்கள் மார்ச் 19 லிருந்து வீட்டுக்குள்ளேயேதான் முடங்கி இருக்கிறோம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றாலும் தெளிவாக திட்டமிட்டு வாங்க வேண்டியதை எழுதி எடுத்து சென்று வாங்கி முடித்த உடனே திரும்பி விடுகிறோம். வாங்கும் பொருட்களையும் சுகாதாரமான முறையில் சுத்தப்படுத்தியே பயன்படுத்துகிறோம். ஒரு கடிதம் வந்தால் கூட அதை தொடுவதற்கு தயங்குகிறோம். அந்த அளவுக்கு கவனமாக இருக்கிறோம். இனி இந்த வாழ்க்கையை பழகிக்கொள்ள தான் வேண்டும். இத்தனை கவனமாக இருந்தாலும் கலிபோர்னியா கொரோனா பாதிப்பில் 5 வது இடத்தில் இருக்கிறது.

    அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
    கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். கொரோனா தந்த உயிர் பயத்தை விட வேலை பறி போவதால் எழும் மன அழுத்தமும் முக்கிய காரணம். நிறைய துறைகள் இழுத்து மூடிவிட்டார்கள். இதனால் பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். கொரோனாவுக்கு பின்னும் இந்த பாதிப்புகள் தொடருமே என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அரசும், மருத்துவர்களும் அதை போக்க முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

    கொரோனாவை வைத்து அமெரிக்காவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக டிரம்பின் பேச்சு, நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன சொல்கிறார்கள்?
    அவர் கட்சியை சார்ந்த பலர் அவர் சொல்வதைதான் நம்புகிறார்கள். ஆனால் எங்கள் நண்பர்கள் அனைவருக்குமே அவர் இதை கையாளும் முறையில் அதிருப்தி இருக்கிறது. ஆனால் அமெரிக்க அரசியல் அமைப்பில் மாகாணங்களை பொறுத்த வரை கவர்னர்களுக்கு தனி அதிகாரம் உண்டு. அந்த வகையில் எங்கள் கவர்னர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தான் முன்னெடுக்கிறார்.

    அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் நிலையில் எதுவும் மாற்றம்?
    இங்கே இருக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் வேலையை இழந்து விட்டால்தான் கடும் சிரமத்துக்கு ஆளாவார்கள். 60 நாட்களுக்குள் அவர்கள் புது வேலை தேடிக் கொள்ள வேண்டும், அல்லது அவர்களது விசா ஸ்டேடஸை மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த 2 மாதங்களில் அமெரிக்காவில் 3 கோடிக்கும்  (33.5 மில்லியன்) அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளார்கள். இதில் இந்தியர்களும் அடக்கம். இப்போது எதிலுமே ஒரு நிலை இல்லாத தன்மை இருப்பதால் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்குமே ஒரு பயம் இருக்கிறது.

    ஊரடங்கை தளர்த்திய பிறகு நிலைமை எப்படி இருக்கும்?
    ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பது குறையும் என்று நினைக்கிறேன். ஜூம் போன்ற செயலிகள் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இங்கே பள்ளி, கல்லூரிகள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றி விட்டனர். அமெரிக்காவில் இருக்கும் பாடல், நடன வகுப்பு ஆசிரியர்கள் ஆன்லைனில் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டார்கள். மருத்துவர்களும் வீடியோ கால் மூலமாக ஆலோசனை வழங்குகின்றனர். நண்பர்களை சந்திப்பதும் ஆன்லைன் மூலமாக தான் என்று மாறிவிட்டது. இனி இதுபோலத் தான் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

    சினிமாத்துறை என்ன ஆகும்?
    நமது துறை மக்கள் அதிக அளவில் கூடி பணிபுரிய வேண்டிய துறை. இதில் சமூக விலகலை கடைபிடிப்பது சிரமமான ஒன்று. மாஸ்க் அணிந்து படங்களில் நடிக்கவும் முடியாது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பிரச்சினை இல்லை. அதுவரை எல்லோருக்குமே மனதுக்குள் பயம் இருந்துகொண்டே இருக்கும். மக்கள் பயமில்லாமல் தியேட்டருக்கு போய் படம் பார்க்க எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் திரைத்துறையில் அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தான்இதனால் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் மட்டுமல்ல... ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட எல்லா தொழிலாளர்களுமே சிரமத்தில் தான் இருக்கிறார்கள்.

    அம்மா வேடமாக இருந்தாலும் தனியாக தெரிவது எப்படி?
    சினிமா என்பது சம்பளத்தை தாண்டி என்னுடைய பேஷன். எனவே கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சசி போன்ற ஒருசில இயக்குனர்களே பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். சசி சார் என்றால் கதை கேட்கமால் நடிக்கும் அளவுக்கு நம்பிக்கை உண்டு.

    டைரக்‌ஷன் எப்போது?
    இங்கே "கிரியா" என்ற நாடக குழவை கடந்த 20 வருடங்களாக நடத்தி வருகிறேன். இந்தியாவுக்கும் வந்து நாடகம் போட்டுள்ளோம். எங்களது நாடகங்களை K.பாலசந்தர், கமல்ஹாசன், சிவ கார்த்திகேயன், இயக்குனர் சசி உள்பட பலர் நேரில் பார்த்து பாராட்டியுள்ளனர். சினிமா டைரக்‌ஷன் என்னுடைய கனவு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை உட்பட, பல கதைகள் தயாராக இருக்கிறது. விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.
    இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும் என்று நடிகை இனியா கூறியுள்ளார்.
    ஊரடங்கு குறித்து நடிகை இனியா அளித்த பேட்டியில் கூறியதாவது: பள்ளிகளில் ஏப்ரல், மே மாதம் விடுமுறை விட்டால் ஒரு சந்தோஷம் இருக்கும்ல, அந்த மாதிரி இருக்கு. என்னோட பள்ளி நண்பர்கள் கூட அதிகம் பேசுறேன். இதெல்லாம் இந்த ஊரடங்கில் ரொம்ப ஜாலிதான். தவிர, எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் தெரியும். இந்தக் கடுமையான நேரத்துல கேரளா அரசாங்கம் எடுக்கிற முடிவுகள், அவங்களோட விதிமுறைகள் எல்லாம் நல்லா இருக்கு. சீக்கிரமே இந்தச் சூழல் மாறிடும்னு நம்பிக்கை தருது.

    ``என் வீடு திருவனந்தபுரத்துல இருக்கு. ஒரு நிகழ்ச்சிக்காக கொச்சின் வந்திருந்தேன். அப்பதான் ஒருநாள் ஊரடங்கு அறிவித்தார்கள். அதுக்குப் பிறகு, என்னால திருவனந்தபுரத்துக்கும் போக முடியாமல் சென்னைக்கும் வர முடியாமல் கொச்சின்ல மாட்டிக்கிட்டேன். அக்கா வீட்ல இருக்கேன். இந்த ஊரடங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. நிறைய பேருக்கு இது ரொம்ப ரொம்ப சவாலான சூழல்.  

    நம்ம இயற்கைக்கு என்ன செய்றோமோ அதைத்தான் இயற்கை நமக்கு திருப்பிக்கொடுக்கும். அப்படி நம்ம அனுபவிக்கிற காலம் இது. அதனால இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும்“ இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமாக இருக்கும் தமன்னா தாய் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதால் அதை கற்று வருகிறார்.
    ‘கேடி’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தமன்னா.
    இதைத் தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. தனுஷின் படிக்காதவன், சூர்யாவின் அயன், கார்த்தியின் பையா, விஜயின் சுறா, அஜித்தின் வீரம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

    தமிழ் வெப்சீரிசில்லும் நடித்து அவரே டப்பிங்கும்  பேசி வருகிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார்.

    தமன்னாவின் தாய் மொழி சிந்தி. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் பேசும் நடிகை தமன்னாவுக்கு தனது தாய்மொழியில் பேசத் தெரியாது. சில வார்த்தைகள் புரியும் என்றாலும் சரளமாகப் பேச வராது என்பதால், இந்த ஊரடங்கில் தனது அம்மாவிடம் சிந்தி மொழியை கற்கிறார்.

    மற்ற மொழிகள் தெரிந்திருந்தாலும் தாய் மொழி தெரிந்திருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
    கொரோனாவை விட கொடிய நோய் கோரத்தாண்டவத்தை நிகழ்த்துகிறது என்று இயக்குனர் பா.இரஞ்சித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    இயக்குனர் பா.இரஞ்சித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.

    நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

    பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த
    நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.

    இந்த கொரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள். ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

    இந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம்  டி. கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது  எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    உலகமே துவண்டு கிடக்கக் கூடிய இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு தலித்துக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடக்க முடியாத பொழுதுகளுடன்...

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பின்னணி பாடகர் வேல்முருகன், அன்னையர் தினத்தை முன்னிட்டு1500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.
    தமிழில் பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். பாடகராக ரசிகர்களை கவர்ந்த இவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு அயனாவரத்தில் இருக்கும் மக்கள் 1,500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.

    இவருடன் டெப்டி செகரெட்டரி பிரகாஷ் IAS, ஐகோர்ட் செகரட்டரி மோகன், அடிஷனல் செகரிடி நாகப்பன் ஆகியோர் இணைந்து 1500 பேருக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள்.

    வேல் முருகன் உணவு வழங்கிய காட்சி


    அம்மா என்று சொல்லி பாருங்க... அந்த வார்த்தை கூட தெய்வமாகுங்க... கடவுளிடம் கேட்டு பாருங்க... தாயின் கருவறையே கோயில்தானங்க... என்ற பாடலையும் உருவாகி வெளியிட்டிருக்கிறார்.
    நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி காரில் சுற்றிய பிரபல கவர்ச்சி நடிகையை போலீசார் கைது செய்தனர்.
    சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், தற்போது ஊரடங்கை மீறியதாக பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.  

    பூனம் பாண்டே

    நேற்று அவர் தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றுள்ளார். ஊரடங்கு சமயத்தில் காரணமின்றி பொதுவெளியில் சுற்றித்திரிந்த காரணத்தால் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவருடைய காரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை எச்சரித்து விடுவித்தனர். மேலும் இவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் முன்னோட்டம்.
    ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள். எஸ்.எழில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். திகில் கலந்த காமெடி படமாக இது உருவாகி உள்ளது. கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    மாமதுரையின் அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
    மதுரையில் உணவின்றி தவிப்பவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதிய உணவு தருகிற முயற்சியினை கடந்த மே 1-ம் தேதி `மாமதுரையின் அன்னவாசல்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மதிய உணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது. நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

    இந்நிலையில், 'மாமதுரை அன்னவாசல்' திட்டத்துக்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ரூ. 5 லட்சம் நன்கொடையாக  வழங்கி உள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். 

    சூர்யா

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். 

    நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 லட்ச ரூபாயை நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார் திரைக்கலைஞர் சூர்யா. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
    இயக்குனர் கவுதம் மேனன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார்.
    சிம்பு - திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை. 

    இந்நிலையில் நடிகை திரிஷா, வீட்டில் இருந்தபடியே கவுதம் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக தான் இந்த குறும்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். 'கார்த்திக் டயல் செய்த எண்' என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா துறை முடங்கியதால் சோகத்தில் இருக்கும் கார்த்திக்கிற்கு ஜெஸ்சி ஆறுதல் கூறுவது போல இந்த குறும்படத்தின் டீசர் அமைந்துள்ளது.

    அந்த டீசரில் திரிஷா பேசுவது மட்டுமே காட்டப்பட்டுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகத்தின் கதையை தயார் செய்துவைத்துள்ள கவுதம் மேனன், அதன் ஒரு பகுதியை தான் இந்த குறும்படமாக எடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இந்த குறும்படத்தில் சிம்பு நடித்துள்ளாரா, இல்லையா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
    நடிகர் சிரஞ்சீவி செய்த உதவியால் தான் கஷ்டத்தில் இருந்து மீண்டதாக நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு ஊடகம் நடத்திய நேரடி நிகழ்ச்சியில் வீட்டில் இருந்தபடியே கலந்துகொண்ட நடிகர் சரத்குமார், சிரஞ்சீவி குறித்து பேசும்போது கண்கலங்கினார். 

    அதில் அவர் பேசியதாவது: சிரஞ்சீவி குறித்து பேச மேடைகள் கிடைப்பதில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியுள்ளார். ஒரு முறை நான் பண பிரச்சினையில் இருந்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர், சிரஞ்சீவியிடம் கால்ஷீட் வாங்கி கொடுங்கள், அவரை வைத்து படம் எடுப்போம். அதன் மூலம் வரும் லாபத்தை உங்களுக்குத் தருகிறேன். உங்கள் பிரச்சனையை தீர்க்க அது உதவும் என்றார். 

    பின்னர் சிரஞ்சீவியிடம் போனில் பேசி நேரில் சந்திக்க நேரம் கேட்டேன். அவரும் வர சொன்னார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரை நேரில் சென்று பார்த்து, பெர்சனலா பேசனும்னு சொன்னேன். அப்போது சண்டைக் காட்சி எடுக்க தயாராகிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் சிரஞ்சீவி அப்படத்தின் இயக்குநரை அழைத்து, நான் சரத்குமாரிடம் பேச வேண்டும், நீங்கள் அந்த சீனை நாளை எடுத்துக்கோங்கனு சொல்லிட்டு என்னை அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். எனக்காக சிரஞ்சீவி படப்பிடிப்பை ரத்து செய்ததே ஆச்சரியமாக இருந்தது.

    சரத்குமார், சிரஞ்சீவி

    வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்தார். என்ன பிரச்சினைனு கேட்டார். நான் விவரத்தை சொன்னேன். உங்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டேன். சரி இந்த படத்தை முடித்துவிட்டுத் தருகிறேன் என்றார்.

    சம்பளம் குறித்து கேட்டேன், "ஏய், எனக்கு சம்பளமா? நீயே பிரச்சினையில் இருக்கிறாய். எனக்கு சம்பளம் வேண்டாம். நான் கால்ஷீட் தருகிறேன். உன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்" என்றார். இத்தகைய உதவி செய்த அவரை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என கூறி கண்கலங்கினார் சரத்குமார்.
    ×