என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன என்று ஜோதிகாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
    ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் வரும்  29-ந் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் சொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன? என்று  ஜோதிகாவிடம் கேட்டதற்கு, இது எனக்கு வசதியாக இருக்கிறது. குடும்பம், குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்புகளில் எனக்கு சில தளர்வுகள் வேண்டும். அதற்கு சொந்த தயாரிப்பு தானே வசதி? என்று பதில் அளித்துள்ளார்.
    ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தை புதிய நிறுவனம் தயாரித்து வருகிறது.
    இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

    இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

    ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், மதிமாறன்

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

    ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

    விரைவில் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.
    ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தின் முன்னோட்டம்.
    மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும்  இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாராகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். 

    என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகர் சசிகுமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சின்ன வயசுல இருந்தே பாக்யராஜ் சாரின் படங்கள் பார்த்துப் பழகினவன் நான். அவரோட மூணு படங்கள் எப்பவும் எனக்கு ஆல்டைம் ஃபேவரிட். அதுல ஒண்ணு ‘முந்தானை முடிச்சு.’

    இந்த நேரத்துல தான் தயாரிப்பாளர் ஜேஎஸ்பி.சதீஷூக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கு. அப்போ தான் பாக்யராஜ் சாரை நேர்ல மீட் பண்ணிப் பேசினோம். அவரும் உடனே, ஓகே சொல்லிட்டார். ‘முந்தானை முடிச்சு’ படத்தை அப்படியே ரீமேக் பண்றோம். அதனால, சார் பண்ணுன வாத்தியார் கேரக்டர்ல நான் நடிக்குறேன். 

    சசிகுமார், பாக்யராஜ்

    இப்போ இருக்குற யங் ஜெனரே‌ஷன் யாரும் இந்தப் படத்தைப் பார்த்து இருப்பாங்களானு தெரியல. அதனால, இப்போ இருக்குற பசங்களும் ரசிக்கிற மாதிரி படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கோம். தவிர இது ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்தான் பார்ட் 2 இல்லை. அதனால படத்தோட டைட்டிலும் ‘முந்தானை முடிச்சு’தான். இதைவிட பொருத்தமான டைட்டில் இந்தப் படத்துக்குக் கிடைக்காது.’ இவ்வாறு அவர் கூறினார்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு மே மாதம் தொடங்குவதாக இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் போனது. 

    இந்நிலையில், இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதுபற்றி அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர தங்கள் நிறுவனம் தயாரித்துவரும் படங்கள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

    கொரோனா அச்சுறுத்தலால் நாடு திரும்ப முடியாமல் பாலைவனத்தில் சிக்கித்தவித்த நடிகர் பிருத்விராஜ் இன்று கேரளா வந்தடைந்தார்.
    மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தமிழிலும் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஜோர்டான் சென்றிருந்தார். பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஜோர்டானிலேயே படக்குழுவினருடன் சிக்கிக்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.

    பிருத்விராஜ்


    இதனிடையே வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அவரும் படக்குழுவினர் 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஜோர்டானில் இருந்து டெல்லி வந்த அவர்கள், பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் இன்று காலை கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
    பி.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட உள்ளது.
    பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

    அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
    பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனிகபூர். இவர் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தார். தற்போது அவர் நடிக்கும் ‘வலிமை’ படத்தையும் தயாரிக்கிறார். போனிகபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஜான்வி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். போனிகபூரின் இல்லம் மும்பை அந்தேரியில் உள்ள லோகந்த் வாலா பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போனிகபூர் வீட்டில் வேலை பார்த்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போனிகபூர் வீட்டில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    போனிகபூர்

    இந்நிலையில், அதன் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் மேலும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் போனிகபூர் மற்றும் அவரது இரு மகள்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
    எல்லை பிரச்சனை குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட இந்தியன் பட நடிகைக்கு, டுவிட்டரில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    நேபாளத்தை சேர்ந்த மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2010-ல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேபாள அரசு, தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

    மனிஷா கொய்ராலா

    நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு நடிகை மனிஷா கொய்ராலா ஆதரவு தெரிவித்து புதிய வரைபடத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்ததுடன், ‘நமது சிறிய நாட்டின் கவுரவத்தை காத்ததற்கு நன்றி’ என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதனால் மனிஷா கொய்ராலாவுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    “இந்தியாவில் சம்பாதித்து சாப்பிட்டு விட்டு எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கம் இல்லையா? எல்லை பிரச்சினையில் நாடுகள் பேசி தீர்வு காணட்டும். தனிநபர் பேசக்கூடாது. நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நேபாளம் சென்று விடுங்கள்” என்றெல்லாம் கண்டன பதிவுகள் வெளியிடுகின்றனர்.
    கொரோனாவால் வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை படமாக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
    நடிகர் சிரஞ்சீவி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திரைப்படங்களின் டூயட் பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்தன. பல படங்களின் வசன காட்சிகளை முடித்து விட்டு வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை படமாக்க காத்து இருக்கின்றனர். கொரோனாவால் அது நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே நமது நாட்டிலேயே வெளிநாடுகளின் அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தலாம். இதுதான் இப்போதுள்ள தீர்வு. முன்புபோல் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த செல்ல முடியாது. இந்தியாவுக்குள்ளேயே ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    சிரஞ்சீவி

    ஊட்டி அல்லது மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். சினிமா நிறைய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தாலும் பிரச்சினை தீர்ந்து விடாது. கதாநாயகர்கள் ஒரு படத்தில்தான் நடிப்பார்கள். ஆனால் கதாநாயகிகள் பல படங்கள் வைத்து இருப்பார்கள். 

    அதற்கு கால்ஷீட்டை அவர்கள் பிரித்து கொடுப்பதில் சிக்கல் வரும். தியேட்டர்கள் திறந்த பிறகு ரசிகர்கள் வருகிறார்களா? இல்லையா? என்பது பிறகு பார்க்க வேண்டியது. அதற்கு முன்பு படப்பிடிப்பை முடிப்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது. இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.
    சினிமா துறை இயல்புநிலைக்கு திரும்ப தான் அதை செய்ய தயாராக இருப்பதாக நடிகை டாப்சி அதிரடியாக அறிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உளளனர். தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடு கட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்து உள்ளார். இதுபோல் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், நாசர், உதயா, அருள்தாஸ், நடிகை ஆர்த்தி ஆகியோரும் சம்பளத்தை குறைத்துள்ளனர்.

    டாப்சி

    இந்த நிலையில் நடிகை டாப்சியும் சம்பளத்தை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவுதற்காக சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். சினிமா துறை மீண்டும் சகஜ நிலை திரும்புவதற்காக சம்பளம் குறைக்கப்படுவதை தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணாவின் நிச்சயதார்த்தம் நேற்று எளிமையான முறையில் நடைபெற்றது.
    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார். 

    அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார்.

    ராணா, மிஹீகா பஜாஜ்

    இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படத்தை டுவிட்டரில் ராணா வெளியிட்டார். இந்த வருடம் இறுதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். ராணாவுக்கு நடிகர்-நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
    ×