என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    நடிகர் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, உள்ளிட்ட படங்களிலும், `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநனயின் மனைவியும் மருத்துவர் தான்.

    இவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    பிரபல இந்தி நடிகை மவுனிராய் 4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் சிக்கி தவித்து வருகிறார்.
    பிரபல இந்தி நடிகை மவுனிராய். இவர் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக அபுதாபி சென்று இருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மவுனிராயால் இந்தியா திரும்ப முடியவில்லை. கடந்த 2 மாதங்களாக அபுதாபியிலேயே சிக்கி தவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விளம்பர படப்பிடிப்பை சில நாட்களில் முடித்து விடலாம் என்று சொல்லி என்னை அழைத்து வந்தனர். இதனால் 4 நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டுமே எடுத்து வந்தேன். ஊரடங்கினால் என்னால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. 4 நாள் உடைகளோடு 2 மாதங்களாக அபுதாபியில் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.

    இப்படி ஒரு கஷ்ட நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் விமானம் எப்போது கிளம்பும் என்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். தெரிந்த சில நண்பர்கள் இருப்பதால் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன்.

    இந்தியா திரும்பும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் நல்ல படிப்பினையை கொடுத்து இருக்கிறது.

    இவ்வாறு மவுனிராய் கூறினார்.
    தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவன் இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். சமீபத்தில் இவர் இயக்கிய என்ஜிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவு செய்யும் செல்வராகவன், தற்போது இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. 'நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்' என்று கூறியுள்ளார்.
    கமல் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் ஏற்கனவே அவருடன் நடித்த இரண்டு நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.
    இந்தியன்-2 படத்துக்கு பிறகு கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்கிறார். இது தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் என்று கூறப்படுகிறது.

    இப்படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் கசிந்தது. முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கமல்ஹாசன் கையால் கொல்லப்படும் நாசரின் மகனாக விஜய்சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. நகைச்சுவை வேடத்துக்கு வடிவேல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆண்ட்ரியா - கமல் - பூஜா குமார்

    இந்த நிலையில் படத்தில் 2 கதாநாயகிகள் உள்ளதாகவும், அதற்கு பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
    பிருத்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.

    பாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் பிருத்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது.

    இந்த நிலையில் ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேரும் டெல்லி திரும்பி, அங்கிருந்து கொச்சி வந்து சேர்ந்தார்கள். பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் கேரள சுகாதாரத் துறை 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளது.
    டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்மேன் குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார். 

     இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  

    இந்த வெப் தொடர் ஜூன் 12ம் தேதி ஜி 5 தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் இதன் டீசர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  குறிப்பாக டேனியல் பாலாஜியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    பி.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். 

    கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

    இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ராணா நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை என்று அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராணா அதிகமாக பேசப்பட்டார். இவரது திருமணம் குறித்து திரையுலகு மட்டும் அல்லாது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் நடிகர் ராணா கடந்த 12-ம் தேதி தனது காதலி மிஹீகா பஜாஜை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். 

    ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர். இந்நிலையில் நேற்று மிஹீகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் ராணா வெளியிட அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை அவரது தந்தை சுரேஷ் பாபு மறுத்துள்ளார். 

    இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் ராணாவின் தந்தை சுரேஷ்பாபு, நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை. திருமணத்துக்கு பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இன்று விவாதித்தன. இது தெலுங்கு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான்’ என்று கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகர் தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.
    இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

    சோலங்கி திவாகர்

    மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் தன் மனைவியுடன் மருத்துவமனைக்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
    அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

    கொரோனா ஊரடங்கின்போது அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று விசாரித்தபோது, அவரது அப்பா கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே அஜித் மருத்துவமனை சென்றதாக கூறப்படுகிறது.


    பலமுறை விழுந்து விட்டேன்... யாரும் தனியாக செய்ய வேண்டாம் என்று நடிகை தமன்னா வீடியோ வெளியிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
    கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்

    இந்த நிலையில் நடிகை தமன்னா  தலைகீழாக நிற்க முயற்சிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளரின் உதவியுடன் தலையை தரையில் வைத்து, காலை தானாகவே மேலே தூக்குகிறார். எந்தவித உதவியும் இன்றி அவர் தலைகீழாக நிற்கும் அந்த வீடியோ பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    தலைகீழாக நிற்கும் தமன்னா

    இந்த வீடியோ குறித்து அவர் கூறியபோது ‘ஒரு சில தோல்விகள் மற்றும் வீழ்ச்சிகளுக்கு அப்புறமே வெற்றி கிடைக்கும் என்பது இதன் மூலம் தெரிந்து கொண்டேன். தலைகீழா நிற்பதற்கு முன் நானும் பலமுறை விழுந்து விட்டேன். ஆனாலும் விடாமுயற்சியால் ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் தயவுசெய்து இதனை யாரும் பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்ய வேண்டாம் என்று தமன்னா கேட்டுக்கொண்டுள்ளார்.
    நடிகர் கமலை ‘பட்டாம் பூச்சி’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ரகுநாதன் காலமானார்.
    கமல்ஹாசன் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘பட்டாம் பூச்சி’. இந்த படத்தை தயாரித்தவர் ஆர்.ரகுநாதன். இவர் தனது ஆர்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவர் தயாரிப்பில் மரகதக்காடு படம் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் நேற்று இரவு உடல்நலக் குறைபாடு காரணமாக ரகுநாதன் காலமானார். அவருக்கு வயது 79. அவரது மகன் நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். சித்ரா என்ற மகளும் இருக்கிறார்.
    ×