என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனா ஊரடங்கால் சினிமா தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை குறைத்துள்ளார்.
கொரோனாவால் திரையுலகம் பாதித்துள்ளது. படப்பிடிப்புகள் நின்று போனதால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டர்களுக்கு முன்புபோல் ரசிகர்கள் வருவார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட சில நடிகர்கள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்துள்ளனர். அந்தவகையில், நடிகை கீர்த்தி சுரேஷும் சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என எனது தந்தை தயாரிப்பாளர் என்ற முறையில் கருத்து தெரிவித்தார். ஒரு நடிகையாக அதை நான் வரவேற்கிறேன். நான் நடிக்கும் படங்களுக்காக வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் குறைத்து கொள்வேன். நான் மட்டுமல்ல சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் வருகிற 19-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்கின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியுள்ளதாவது: ‘ பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.

அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? அவர் இறுதியாக நடித்த சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்?
அதே போல் என்னுடைய படைப்புகளையும் ஆதரிக்க மறுப்பது ஏன்? சமூக வலைதளங்களில் சுஷாந்த் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களை முன்வைக்கப்பட்டு வந்தன. திறமை இல்லை என தன்னைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு’ என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் அட்லீயின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், அட்லீ தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அட்லீ தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஆஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், 93 ஆவது ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவதாக இருந்ததது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆஸ்கர் வரலாற்றிலேயே நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது இது 4-வது முறையாகும்.
இதற்கு முன்னதாக 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட வெள்ளம், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டது, 1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரோனல்டு ரேகன் கொல்லப்பட்டது ஆகிய மூன்று
காரணங்களுக்காக மட்டுமே ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
தற்போது வரலாற்றிலேயே நான்காவது முறையாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பல படங்களில் நடித்த நடிகர் நகுல் தனது பிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இந்நிலையில் நகுல் தனது 35-வது பிறந்தநாளான இன்று தன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதாகவும், இந்த பிறந்தநாள் தனக்கும் தன் மனைவிக்கும் ஸ்பெஷலான ஒரு நாள் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்தை வைத்து சூப்பர் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு புதிய பதவி கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் நடித்த ‘மூன்றாம் பிறை’ என்ற படம் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். இவர் சமீபத்தில் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகி உலகம் முழுவதும் பெரும் வசூலை வாரி குவித்தது.

இந்த நிலையில் சத்யஜோதி தியாகராஜன் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக தேர்வாகியுள்ளார். முன்னதாக இவர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி குறித்து டி.ஜி.தியாகராஜன் கூறியபோது, இந்த பதவி கிடைத்தது எனக்கு எதிர்பாராத ஒன்றாகவும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கிறது. சவாலான பொறுப்பை சரியாக செய்து முடிப்பேன். என்னைத் தேர்வு செய்து இந்த பதவியை அளித்த இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
சூர்யா ஜோதிகா இணைத்து நடித்த படத்தில் அவர்களுக்கு குழந்தையாக நடித்தவர் தற்போது வக்கீலாக மாறியுள்ளார்.
சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த படம் ’சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யா-ஜோதிகா தம்பதிகளின் மகளாக ஸ்ரேயா சர்மா என்ற அந்த குழந்தை நட்சத்திரம் செய்யும் சேட்டைகளும் குழந்தைத்தனமான இருந்ததாகவும் விமர்சகர்கள் தெரிவித்ததுண்டு.


இந்த நிலையில் இந்த படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘சில்லுன்னு ஒரு காதல்’ குட்டி பாப்பா ஸ்ரேயா சர்மா, தற்போது வளர்ந்து வழக்கறிஞராக மாறியுள்ளார். ஒரு பக்கம் வழக்கறிஞர் படிப்பு, இன்னொரு பக்கம் திரை உலகம் என மாறி மாறி இயங்கி வந்த ஸ்ரேயா சர்மா தற்போது முழுநேர வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் குயின் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது.
இப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி
புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க காரணம்?
இப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் புதுமுக இயக்குனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. என்னிடம் கதையை 4.30 மணி நேரம் சொன்னார். கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் நினைத்ததை முடித்து காட்டினார். 10 படங்களுக்கு ஒர்க் பண்ண அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

அம்மா வேடத்தில் நடிக்க காரணம்?
கதை கேட்கும் போது எனக்கு அம்மா வேடம் பற்றி எதுவும் தோன்றவில்லை. இப்போது எல்லாரும் கேட்கும் போதுதான் அம்மா வேடம் பற்றி தோன்றுகிறது. கதை கேட்கும் போது ஏன் பண்ண கூடாது என்றுதான் மனதில் ஓடியது. நான் 10, 15 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சின்ன குழந்தைக்கு தான் அம்மா வேடமாக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், நடிகை அமலாபால் இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது திரை உலகை சேர்ந்தவர்களும் கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுஷாந்த்சிங் மறைவு குறித்து ஏராளமான பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர். ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அமலாபாலின் இந்த பதிவில் சுஷாந்த்சிங் பெயர் இல்லை என்றாலும் சுஷாந்த்சிங் மரணமடைந்த ஒரு சில மணி நேரத்தில் அவர் இந்த பதிவை பதிவு செய்துள்ளதால் சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து தனது எண்ணத்தை அவர் தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் 'நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக 'நோ டைம் டூ டை’ தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கும் இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா உள்பட உலகின் மற்ற நாடுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 25-ந் தேதி அமெரிக்காவிலும் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 25-ந் தேதிக்கு பதிலாக நவம்பர் 20-ந் தேதி அமெரிக்க உள்பட உலகின் மற்ற நாடுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் திட்டமிட்டபடி நவம்பர் 12-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The return of old friends in NO TIME TO DIE.
— James Bond (@007) June 13, 2020
In cinemas 12th November UK, 20th November US. pic.twitter.com/GkXugGEAba
வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் வாலு. சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் பின்னர் விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், சங்கத் தமிழன் போன்ற படங்கள் வெளியாகின. தற்போது அவர் மீண்டும் சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு - விஜய் சந்தர் கூட்டணி டெம்பர் எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைவதாக இருந்து, சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. சிம்பு கைவசம் வெங்கட் பிரபுவின் மாநாடு, மிஷ்கின் இயக்கும் பெயரிடப்படாத படம், மஹா போன்ற படங்கள் உள்ளன.
அறிமுக இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்கப் படத்தின் முன்னோட்டம்.
ஷ்வேத் புரடெக்ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.






