என் மலர்
சினிமா செய்திகள்
தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளாராம்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளாராம். கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளதால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், சம்பள குறைப்பு செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் ரஜினி, விஜய், தனுஷ் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
அண்மையில் நடிகர் சூர்யா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த மீரா மிதுன், அதில் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது. சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார். ஆக்டிங்கிற்கு என்ன ஸ்பெல்லிங் என கேட்பவர் என சூர்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து போனில் மிரட்டி வருவதாக மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது: சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான மெசேஜ்கள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன.
உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா. 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என் மொபைல் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பு. இது என்னை உறுதியற்ற நிலைக்கு துாண்டுகிறது. என அவர் கூறியுள்ளார்.
நடிகை மீரா மிதுன், சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், லாரன்ஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தினார். பின்னர் சிம்ரன் சந்திரமுகியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அவரும் இதனை திட்டவட்டமாக மறுத்தார். சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் பெயர் அடிபட்டது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லாரன்ஸ், “சந்திரமுகி 2-வில் ஹீரோயினாக ஜோதிகா, சிம்ரன் அல்லது கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வலம் வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான். தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பிறகு ஹீரோயின் யார் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது.
மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.
படப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால் பொங்கலுக்கு படம் ரிலீசாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இது தான் எனக் கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினியின் முறைப் பெண்களான குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இருவரின் மனதையும் புண்புடுத்த வேண்டாம் என ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம்.
நயன்தாரா, ரஜினி தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகளாக்க குஷ்புவும், மீனாவும் பின்னர் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் வழக்கறிஞராக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற இப்படம் தியேட்டர்களில் வசூலையும் குவித்தது. இந்நிலையில், டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட கைதி திரைப்படம் தேர்வாகி உள்ளது.

ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை திரையிடப்படும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இமைக்கா நொடிகள் படத்தின் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் இமைக்கா நொடிகள். இதில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி இருந்தார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் இவருடன் நயன்தாரா ‘நீயும் நானும் அன்பே...’ என்ற பாடலில் ரொமான்ஸ் செய்யும் பாடல் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இப்பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை அள்ளியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழில் பல படங்களுக்கு பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம், இளையராஜாவை பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
‘விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் முருகன் மந்திரம். இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் மூலம் வசன கர்த்தாவாக மாறி இருக்கும் இவர், தற்போது இளையராஜா பாடல்கள் குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளார்.
"ஒரே ஒரு ராஜா, ஒரு கோடி கதைகள்" என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த புத்தகம் வாசிப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக வாசித்தவர்கள் கூறுகின்றனர். இளையராஜா, இளையராஜாவின் இசை, பாடல்கள் குறித்து நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும் இது அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது என்கிறார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில்,

"40 ஆண்டு காலமாக தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இளையராஜா இருக்கிறார். இளையராஜா இல்லாமல் தமிழர் வரலாற்றையோ, தமிழ் இசையின் வரலாற்றையோ எழுத முடியாது. இளையராஜா உருவான கதையும், அவரது இசையும் பாடல்களும் உருவானது பற்றியும் நாம் நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இளையராஜா பாடல்கள் நம் வாழ்க்கையில் உருவாக்கிய கதைகளையும், நம் வாழ்க்கையின் பல கதைகளில் இளையராஜா பாடல்கள் இருந்தததையும் நாம் யாரும் கூறக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
ஏனெனில் அந்த கதைகள் எல்லாம், அவரவர் மனதுக்குள் இருக்கிறது. அப்படி, இளையராஜாவின் பாடல்கள் என் வாழ்க்கையில் இருந்த சில கதைகளை இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். இது முதல் பாகம். இளையராஜாவோடும் அவரது பாடல்களோடும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாதவர்கள் வாழ்க்கையில் இசைஞானி பாடல்கள் இருக்கும் ஒரு நூறு கதைகளையாவது எழுத வேண்டும் என்று ஆவல் இருக்கிறது. இந்த முதல் பாகத்தை வாசித்தவர்கள், அவரவர்கள் வாழ்க்கையில் இளையராஜா பாடல்கள் இருந்த கதைகளை ஞாபகப்படுத்தி பேசுவது மிகுந்த மகிழ்ச்சியையும் அடுத்தடுத்த பாகங்கள் எழுதும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது, என்கிறார், முருகன் மந்திரம்.
தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்த மிருணாளினி வீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள் என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார்.
தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்தவர் மிருணாளினி. தற்போது விக்ரமுடன் கோப்ரா, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். கொரோனா நோயாளிகளை வீடியோ எடுத்து வெளியிட்டு அவமதிப்பதை கண்டித்து மிருணாளினி கூறியிருப்பதாவது:-
“பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவரை ஆம்புலன்சில் அழைத்துச்செல்லும்போது அதனை வீடியோவோ புகைப்படமோ எடுக்காதீர்கள். அப்படி யாரேனும் செய்தால் தடுத்து நிறுத்துங்கள். மாறாக பால்கனியிலோ, வீட்டின் கதவுக்கு அருகிலோ நின்று கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை பார்த்து கட்டை விரலை உயர்த்தி விரைவில் குணமடைந்து திரும்புவீர்கள் என்று வாழ்த்து சொல்லுங்கள்.

கொரோனா பரவுவதை பார்த்தால் உங்களுக்கும் ஆன்புலன்ஸ் காத்திருக்கிறது என்ற நிலைமைதான் உள்ளது. எனவே கொரோனா நோயாளிகளை மதியுங்கள். அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாதீர்கள். அவதூறு செய்யாதீர்கள். தொற்று ஏற்பட்டவர் குற்றவாளி இல்லை. குணமடைந்து திரும்பி விடுவார். அவர்கள் மீது அன்பை செலுத்துவோம். பாதுகாப்பாகவும் நம்பிக்கையோடும் வீட்டிலேயே இருங்கள்” என மிருணாளினி கூறியுள்ளார்.
பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகியான ஆஷாபோஸ்லே, தன்னுடைய வீட்டின் மின் கட்டணம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேலாக வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷாபோஸ்லே. இவரது வீடு மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது. இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது. இதைப்பார்த்த ஆஷா போஸ்லே அதிர்ச்சியடைந்து, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின் கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் என கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மகாடிஸ்காம் -ன் செய்தி தொடர்பாளர் ஆஷாவின் புகாரை அடுத்து புனே வட்டத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று மின்மீட்டரை சரி பார்த்துள்ளார். அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான் பதிவு செய்துள்ளதாக அந்த மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளதாக கூறினார்.

இதனிடையே பாடகி ஆஷா போஸ்லே உயர்த்தப்பட்ட மின் கட்டணங்கள் குறித்து புகார் அளிப்பது இது முதல் முறை அல்ல எனவும், கடந்த 2016 ம் ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது புகார் கூறினார். அப்போதைய மாநில எரிசக்திதுறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே புகார் குறித்து ஆராயப்படும் என உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் பிரபல நடிகர் பிரசன்னா தனது தந்தையின் வீட்டிற்கு மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வந்துள்ளது என்று புகார் கூறினார். அதற்கு தமிழக மின்வாரியம் மற்றும் அத்துறை அமைச்சரும் விளக்கம் அளித்தனர்.
பிஜி.முத்தையா தயாரிப்பில், எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தின் விமர்சனம்.
தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நிலையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.
கொலையாளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில், வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது. இறுதியில் அந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் மொத்த பளுவையும் தூக்கி சுமக்கிறார் நடிகை வரலட்சுமி. மிடுக்கான தோற்றத்துடனும் ரப்பான முகத்துடனும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். தங்கை மீது பாசம், கொலையாலிகளை பிடிக்க வேண்டும் என்ற வெறி என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
களவாணி 2 படத்தில் நடித்த துரை சுதாகர் இந்த படத்தில் போலீசாக வருகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் வினோத் கிஷன் இதற்கும் முன் இது போன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் பெரியதாக தெரியவில்லை.

சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார் அனிதா சம்பத். வேலா ராமமூர்த்தி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். துப்பறிவாளனாக வரும் டேனி சிறப்பு. இன்னும் நிறைய காட்சிகள் டேனிக்கு வைத்திருக்கலாம்.
கிரைம் திரில்லர் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.சி.சந்தானமூர்த்தி. தேவையற்ற காட்சிகளை வைக்காமல் 1 மணி நேரம் 35 நிமிடத்தில் படத்தை முடித்திருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘டேனி’ மிதமான வேகம்.
ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என்று நடித்து வரும் துரை சுதாகர், டேனி படத்தில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் துரை சுதாகர். முதல் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து களவாணி 2 படத்தில் கலக்கினார். தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தில் மிடுக்கான தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டேனி திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், கொலை குறித்து தனது கோணத்தில் புலனாய்வு செய்து வழக்கை முடிக்க, வரலட்சுமி அதே வழக்கில் இருக்கும் பல மர்மங்களை தனது விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் போது படத்தில் பல எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது. பிறகு வரலட்சுமியும், துரை சுதாகரும் இணைந்து தொடர் கொலைகளின் பின்னணி குறித்தும் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டு பிடிக்கிறார்கள்.

வரலட்சுமி அளவிற்கு நிகரான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாக செய்திருக்கிறார் துரை சுதாகர். இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இவரிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிரபல நடிகர் சோனு சூட், புலம்பெயர்ந்த 3 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த வில்லன் நடிகர் சோனுசூட், அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்து நாடுமுழுவதும் கவனம் பெற்றுள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். மாடுவாங்க பணமில்லாமல் தனது 2 மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். சோனு சூட் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தனது பிறந்த நாளையொட்டி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறி உள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய அனுபவத்தை புத்தகமாகவும் எழுதுகிறார்.






