என் மலர்
சினிமா செய்திகள்
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் தலைப்பு திடீர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லட்சுமி பாம்’. தமிழில் சூப்பர் ஹிட்டான ’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்காக இந்தபடம் உருவாகி உள்ளது. வரும் தீபாவளி விருந்தாக இந்தபடன் ஓடிடியில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில் ’லட்சுமி பாம்’ என்ற டைட்டில் மதரீதியாக தங்களை வருத்தப்படுத்தியதாக ஒரு குறிப்பிட்ட மத அமைப்புகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதனை அடுத்து இந்த படத்திற்கு ’லட்சுமி’ என்று மாற்றி இருக்கிறார்கள்.
பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான சுசித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அலறியடித்து ஓடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ஒரு பரபரப்பான செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாடகி சுசித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக, கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடியதாகவும், அவரது அறை கதவை சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதை பார்த்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமாகி இயக்குநர், நடிகர் என வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். திரைத்துறையைத் தாண்டி இவர் சமூக சேவைகளும் செய்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு ‘ருத்ரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘ருத்ரன்’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ராகவா லாரன்ஸ் - ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும். ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ருத்ரன்’ பட டைட்டில் லுக் வெளியாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.
காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும், கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.

காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். காஜலின் உறவினர்கள் ஏற்கனவே அவர் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து காஜலின் தங்கை நிஷா அகர்வால் கூறியதாவது, கொரோனா பிரச்சினையால் நாங்கள் திருமணத்தை எளிமையாக நடத்துகிறோம். ஹல்தி மற்றும் மெகந்தி சடங்குகள் வீட்டிலேயே நடக்கும். இரண்டுமே இன்று நடக்கிறது. காஜலை நினைத்து நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவர் புது வாழ்க்கையை தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

காஜலின் திருமணத்தை பார்க்கத் தான் என் தந்தை பல காலமாக காத்துக் கொண்டிருந்தார். அதனால் இது எங்கள் அனைவருக்கும் முக்கியமான தருணம். விரைவில் காஜல் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால் கவலையாகவும் இருக்கிறது. அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு காஜலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
மணமகள் என்பதால் அனைவரும் காஜலுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள். அதனால் என்னால் அக்காவுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமண நாள் அன்றே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால் அன்று ஆட்டம், பாட்டம் என்று செமயாக இருக்கும். கவுதம் நல்லவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் காதல் கதையை நான் சொல்ல மாட்டேன். அதை காஜல் தான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் இணைந்துள்ள படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘புலிமுருகன்’ படத்திற்கு கதை எழுதிய உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் அவர் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாஸ் என்டர்டெய்னராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற இருக்கிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான ‘கோஹினூர்’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக விஷாலுடன் ‘சக்ரா’ படத்தில் நடித்து வருகிறார். மாதவனுடன் ‘மாறா’ படத்திலும் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் `காதலிக்க யாருமில்லை' படத்தின் முன்னோட்டம்.
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் `காதலிக்க யாருமில்லை'. திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, ஆனந்தராஜ், கவுசல்யா, செந்தில், ராமர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். குறும்படம் இயக்கி பிரபலமான கமல் பிரகாஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் தான் உடல் எடையை குறைத்த பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக வருகிறார். பாரதிராஜா, நந்திதா, மனோஜ், பால சரவணன், முனிஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் தான் உடல் எடையை குறைத்த பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மறைந்த டாக்டரும், நடிகருமான சேதுராமன் கட்டிய மருத்துவமனையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 36 வயதே ஆன சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சேதுராமன் உயிருடன் இருக்கும் போது ஈ.சி.ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்ததாகக் தெரிகிறது. அந்த மருத்துவமனையின் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில், சேதுராமனின் பிறந்ததினமான இன்று அந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
திறப்பு விழாவின் போது சேதுராமனின் ஆளுயர கட் அவுட் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை, சந்தானம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் மருத்துவமனையை துவக்கி வைத்த சந்தானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Very happy to launch my Dearest Friend Dr.Sethuraman s ZI CLINIC in ECR on his birth anniversary 😊🙏🏻 @ZI_Clinic#ECRZIClinicpic.twitter.com/OSG0qbKdhI
— Santhanam (@iamsanthanam) October 29, 2020
வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக இது தயாராகி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதமாக தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. இதில் அஜித் தவிர்த்து இதர நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் மெலிந்த தோற்றத்தில் உள்ளார். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தவாரே தீவிரமாக உடற்பயிற்சி செய்து அஜித் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.
விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளது தெரியவந்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு, மீதி படத்தை விஷாலே இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளது தெரியவந்துள்ளது. லண்டனில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் இவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தளபதி 65’ படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதால், அப்படத்தை பிரபல இயக்குனர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு நேரடியாக தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. இது விஜய்க்கு 65-வது படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் படத்தின் பட்ஜெட்டை குறைக்க பட நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும், முருகதாஸ் எதிர்பார்த்த சம்பளத்தை கொடுக்க தயங்கியதால் அவர் விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

எனவே விஜய்யின் புதிய படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பேரரசு, மகிழ் திருமேனி, மோகன் ராஜா, ஹரி உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனாலும் பேரரசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை பேரரசு இயக்கி உள்ளார். இரண்டு படங்களும் நல்ல வசூல் பார்த்தன.
ஏற்கனவே பேரரசு அளித்த பேட்டியில், “நான் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்து இருக்கிறேன் என்பது உண்மை. நானும், எனது கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை” என்று கூறியிருந்தார். இயக்குனர் யார் என்பது விரைவில் வெளியாகும் என்றும், தொடர்ந்து படப்பிடிப்புக்கு விஜய் தயாராவார் என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்தி இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ரெமோ. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கார்த்தியை வைத்து ‘சுல்தான்’ படத்தை இயக்கி வருகிறார் பாக்யராஜ் கண்ணன்.

அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம் செய்துகொண்டுள்ளார். சுல்தான் படப்பிடிப்பின்போதே இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் அட்லீ ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.






