என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர். நாடக நடிகரான இவர், சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒரு பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

    இதன் பின்னர் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த சில வருடங்களாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளன. பிரித்விராஜ், பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் இவர் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.  

    இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டார்.

    அனில்

     மாலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அனில் தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் ஆழமான பகுதி என்பதால் அவரை காப்பாற்றுவதில் முதலில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் சிறிது நேரத்திற்குப் பின் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடிகர் அனில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பிரபல ஆன்மீக பாடகர் வீரமணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதியில் அரிவராசனம் விருது வழங்கப்பட உள்ளது.
    கேரள அரசின் அரிவராசனம் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் உள்பட பிரபல பாடகர்கள் பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது தமிழகத்தை சேர்ந்த பிரபல ஆன்மீக பாடகர் வீரமணிக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழி களில் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை பாடி உள்ளார்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதியில் ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு நாளில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பணமுடிப்பும், கேடயமும் வழங்கப்படும். பாடகர் வீரமணி தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று கதையாக வெளியாகி இருக்கும் ‘ஷகிலா’ படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் தந்தை, தாய் ஐந்து தங்கைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்து வருகிறார் ஷகிலா. இந்நிலையில், ஷகிலாவின் தந்தை திடீரென இறந்து விடுகிறார். குடும்ப கஷ்டம் காரணமாக சினிமாவில் ஜூனியர் நடிகையாக சேரும் ஷகிலா விரைவில் முன்னணி நடிகையாக ஆகிறார். ஷகிலா படங்களின் வரவால் முன்னணி நடிகரின் திரைப்படங்கள் பாதிக்கப்படுகிறது.

    இதேசமயம் ஊரில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் ஷகிலாவின் படங்கள் தான் என்று முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி, வதந்தியை கிளப்பி விடுகிறார். இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்க, ஷகிலாவின் திரைப்படங்களுக்கு தடை ஏற்படுகிறது. படம் தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் மறுக்கிறார்கள்.

    விமர்சனம்

    பணம் மற்றும் சினிமா வாழ்க்கையை இழக்கும் ஷகிலா, இறுதியில் மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கினாரா? எப்படி வாழ்க்கையை சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ஷகிலா எழுதிய புக்கை மையமாக வைத்து, திரைப்படத்திற்காக சில மாறுதல்களை செய்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ். விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை இறுதியில் மெதுவாக செல்கிறது. பிற்பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம். பங்கஜ் திரிபாதிக்கான காட்சிகளை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் சிந்திக்க வைக்கிறார்.

    விமர்சனம்

    ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சா சத்தாவின் நடிப்பு அதிகம் எடுபடவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பையும், ஒரு சில காட்சிகளில் மட்டும் அழகையும் ரசிக்க முடிகிறது. முன்னணி நடிகராக சலீம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அளவான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    வீர சம்ர்த் மற்றும் மீட் ப்ரோஸ் ஆகியோரின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சந்தோஷ் ராய் பதாஜேயின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் ‘ஷகிலா’ சுவாரஸ்யம் குறைவு.
    நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

    இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலமடைந்து விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்த்ல் வெளியிட்டுள்ள பதிவில்,

    ’நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth (ரஜினிகாந்த்)’  

    என பதிவிட்டுள்ளார்.


    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். காஜல் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ படத்திலும் தமிழில் ’இந்தியன் 2’ மற்றும் பேய் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்போது மீண்டும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

    இந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து வீட்டு உள் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேட் பிசினஸ் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மூலம் வீட்டை அலங்கரித்து தருவதுடன். வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்கிறார்கள். அதோடு, இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல். 

    காஜல் அகர்வால்

    பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருக்கிறார்கள். உதாரணமாக அசின், ஜெனிலியா போன்றவர்களைச் சொல்லலாம். தற்போது காஜல் புது தொழில் தொடங்கியிருப்பதைப் பார்த்து, ரசிகர்கள் இவரும் நடிப்பை விட்டு விலகப்போகிறாரா என சந்தேகித்து வருகின்றனர்.
    கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ரஜினி படத்தில் நடித்த நடிகை, வெளிநாடு செல்ல முடியாமல் வருத்தத்தில் இருக்கிறார்.
    மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்மா உள்ளிட்டோர் நடித்த ”பேட்ட” திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுக நாயகியாக நடித்திருந்தார். 

    இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதற்குள் மாளவிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். இவர் அடுத்ததாக நடிகர் தனுஷுடன் இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியானது. இப்படி பிசியாக இருக்கும் மாளவிகா, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

    மாளவிகா மோகனன்

    குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அவர் நியூயார்க் நகரத்திற்கு நிச்சயம் போய்விடுவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக நியூயார்க் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கிறார். நியூயார்க் செல்வதற்கு பதிலாக நியூயார்க்கில் இருப்பது போன்ற உடையாவது அணிந்து கொள்வோம் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு குளிர்கால உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.

    அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

    இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லை.
    ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

    * ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

    * ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமாக உள்ளார்

    * அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

    * அவர் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார்

    * ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை சந்திக்க மருத்துவமனைக்கு வரவேண்டாம்.

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று ரஜினி விரைவில் குணமடைவார் என்று பிரபல நடிகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியது.

    இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

    பவன் கல்யாண்

    அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திரு.ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியமுள்ளவர், அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார். அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜியின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ஆரி, தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படத்தில் நடிக்கிறார்.
    கமல் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' 4-ல் போட்டியாளராக இருக்கிறார் நடிகர் ஆரி. அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என ஒரே சேர சமூக வலைதளத்தில் எதிரொலித்து வருகிறது. இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வரும் பகவான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பகவான் படத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

    பகவான்

    பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஆரி திரும்பியவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
    “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. 

    இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ரஞ்சித்

    முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா. இரஞ்சித் பேசியதாவது, ”மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. நான் கருப்பினத்தவர்களின் கலை அரசியலை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறேன். அது போன்று இங்கே இருக்கின்ற மக்களை கலை, பண்பாட்டு ரீதியாக அரசியல் படுத்த வேண்டும் எனும் நோக்கத்தோடு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏன் என்றால், இந்த நிகழ்ச்சி மக்களிடையே ஓர் எதிர்ப்புரட்சியை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தற்போது திரையிசையில், பறையிசை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. இந்த இசையை நாம் மேடை ஏற்றி, அதன் மூலம் மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதன் பிரதிபலிப்பு தான் இந்த நிகழ்ச்சி. மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’” என்று கூறினார். 
    அறிமுக இயக்குனர் விஜய் தமிழ்செல்வன் இயக்கத்தில் சி.எஸ்.கிஷன், ஷ்ரிதா சிவதாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘அஷ்டகர்மா’ படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ படத்தை தயாரித்த பட நிறுவனம், எஸ்.செயின்ராஜ் ஜெயினின் மிஸ்ரி என்டெர்பிரைசஸ். இந்த பட நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி உள்ளது. பைனான்சும் வழங்குகிறது.

    மெர்சல், பாகுபலி, விவேகம் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகமும் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து செயின்ராஜ் ஜெயினின் மகன் சி.எஸ்.கிஷன், ‘அஷ்டகர்மா’ என்ற படத்தை தயாரித்து, கதாநாயகனாகவும் நடிக்கிறார். படத்தில் அவர் மனோதத்துவ டாக்டராக வருகிறார். ஷ்ரிதா சிவதாஸ், நந்தினி ராய் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    அறிமுக இயக்குனர் விஜய் தமிழ்செல்வன் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கிறார். இது, மாயாஜாலங்கள் நிறைந்த கதை. படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.
    எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வரும் ஆர்யா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். 

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    புஷ்பா

    இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×