என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் படப்பிடிப்புக்கு சென்ற நடிகையின் பொறுப்பற்ற செயலை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் கவுஹர் கான். தற்போது படங்களில் நடித்து வரும் இவர் மும்பையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கவுஹர் கானுக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் நடிகை கவுஹர் கான், அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதையடுத்து கொரோனா தடுப்பு விதிகளை மீறிய நடிகை கவுஹர் கான் மீது ஓஷிவாரா காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் படப்பிடிப்புக்கு சென்ற நடிகையின் பொறுப்பற்ற செயலை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டு உள்ளதாம்.
விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மேரி கோம், மில்கா சிங், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் ஆவார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனை அறிக்கை அடிப்படையில், அவருக்கு பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு, அவர் வென்ற வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. தடகளப் போட்டிகளில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறு சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டு அவரிடம் ஒப்புதல் பெற்று இந்த படம் தயாராவதாக படத்தின் இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சாந்தி சவுந்தரராஜன் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி சவுந்தரராஜனின் கிராமத்தில் படப்பிடிப்பை தொடங்கி பஞ்சாப், கத்தார். ஓமன் ஆகிய இடங்களில் நடத்துகின்றனர்.
தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
சிவகுமாரின் முதல் படம் 1965-ல் வெளிவந்தது. அவருடைய கலை உலகப்பயணம் தொடங்கி, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் வருமாறு:-
கேள்வி:- உங்கள் மகன் சூர்யா, இப்போது முன்னணி நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிகர் ஆவார் என்று நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தீர்களா?
பதில்:- சூர்யா நடிகனான அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்'' படித்தவன் அவன். காலையில் கல்லூரி சென்றால் மாலை வரை அவன் வகுப்பில் நாலு வார்த்தை பேசினால் பெரிய விஷயம். மவுனமாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் சுபாவமுள்ளவன்.
சென்னையில் பிறந்து 22 வருடம் வளர்ந்த ஒரு நடிகனின் மகன், இங்குள்ள எந்த ஸ்டூடியோவிலும் அப்பாவின் ஷூட்டிங்கை பார்த்ததே இல்லை. விளையாட்டாகக் கூட அவனை ஒரு சினிமா ஹீரோவாக நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை.
டைரக்டர் வசந்தும், மணிரத்னமும் அவனை திரை உலகுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு இனிய விபத்து. `வீடியோ டெஸ்ட்' என்று அவனை அழைத்துப் போனார்கள். நான் மணிரத்னத்திற்குப் போன் செய்தேன். "சார்! அவனுக்குச் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாது. அப்படி அவனை நாங்கள் வளர்க்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்து நீங்கள் `டெஸ்ட்' செய்து ஏமாந்து விடக்கூடாது.
`கார்மென்ட் எக்ஸ்போர்ட்' (ஆடை ஏற்றுமதி) கம்பெனியில் இப்போது பயிற்சி பெறுகிறான். நாளைக்குச் சொந்தமாக அவன் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது எங்காவது வேலை பார்த்து மாதம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.
"நீங்கள் `டெஸ்ட்' செய்து ஒதுக்கிவிட்டால், அது அவன் எதிர்கால வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கும். இப்போதுகூட `லேட்' இல்லை. அவனை அனுப்பி விடுங்கள்'' என்றேன்.
`அவர் மீது 200 சதவீதம் நமëபிக்கை இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரைப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார், மணிரத்னம்.
டைரக்டர் வசந்தும், மணிரத்னம் அவர்களும் "நேருக்கு நேர்'' படத்தில், `சூர்யா' என்று பெயரிட்டு அவனை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலைஞர்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்.
அமெரிக்காவில் 3 ஆண்டு "இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்'' படித்து எம்.எஸ். பட்டம் பெற்று இந்தியா வந்த என் இளைய மகன் கார்த்திக், ஒராண்டுக்கும் மேலாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றான். தற்போது `பருத்தி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான்.
கேள்வி:- காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதை நீங்கள் விரும்பவில்லை. தாயாரும், குடும்பத்தினரும் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகன் சூர்யா, காதல் திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?
பதில்:- தூய காதலுக்கு நான் எதிரி அல்ல. தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மணக்கமாட்டேன் என்ற கொள்கையில் சூர்யா உறுதியாக இருந்தால், அவர் விரும்பியபடி திருமணம் செய்ய அனுமதிப்பேன்.
கேள்வி:- நீங்கள் நடித்த சினிமாப்படங்களில் முதன் முதலாக உங்கள் தாயார் பார்த்த படம் எது? பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்?
பதில்:- கந்தன் கருணை. "முருகனையே நினைத்து வாழ்ந்து, பழனி மலைக்கு கிருத்திகை தவறாமல் போய், திருப்புகழ் - மொத்த பாட்டையும் பாடி, சாமி கும்பிட்டவரு உங்கப்பா. ஒரு கிருத்திகை அன்னிக்கு பழனிலே பாடும்போதே நாவு விழுந்து போச்சு! வந்து பத்து நாள்ளே இறந்துட்டாரு.' அவரு செஞ்ச பிரார்த்தனை, உனக்கு அந்த முருகன் வேஷம் கிடைச்சிருக்கு'' என்றார், என் தாயார்.
கேள்வி:- 193 படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்கள் எவை?
பதில்:- கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன், புதுவெள்ளம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், சிந்துபைரவி.
கேள்வி:- நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனைவிக்குப் பிடித்தமான படம் எது?
பதில்:- ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி.
இவ்வாறு பதிலளித்தார், சிவகுமார்.
193 திரைப்படங்களில் நடித்து விட்ட சிவகுமாரின் கலைப்பயணம், இப்போது சின்னத்திரையில் தொடருகிறது.
"சித்தி'', "அண்ணாமலை'', "அபிராமி'' உள்பட ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரைக்கு போனது பற்றி அவர் கூறியதாவது:-
"ஓவியக் கலைஞனாக வாழ்க்கையைத் தொடர நினைத்த என்னை `சிவகுமார்' ஆக்கி, உலகளாவிய தமிழ் மக்கள் அறிந்திடச் செய்தது, திரை உலகம்தான். இன்றைய புகழ், பொருள், வாழ்வு எல்லாம் திரை உலகம் இட்ட பிச்சை.
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கி, நூற்றி இருபது படங்களை முடிக்கும் காலங்கள் வரை கூட நான் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டவில்லை. தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி அதிகம் கேட்டதில்லை. காரணம், திரை உலகம் என்னைக் கைவிடாது என்ற அசாத்திய நம்பிக்கை.
இரண்டரை மணி நேர சினிமா ஏற்படுத்துகிற தாக்கத்தை 25 வார டெலிவிஷன் தொடரில் ஏற்படுத்த முடியாது. காரணம் தொடர்ச்சி விட்டுப் போவதுதான்.
மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படைப்பாளி திறமைசாலியாகவும், டெலிவிஷன் மீடியத்தை திறம்படக் கையாளத் தெரிந்தவராகவும் இருந்தால் பெயர் பெறமுடியும் என்பதற்கு கே.பாலசந்தர் உருவாக்கிய `ரயில் சிநேகம்', `கையளவு மனசு', `காதல் பகடை' தொடர்கள் சாட்சி.
1990களில் "நீதிமான்'' தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்தபோது, "என்ன சார்! இத்தனை வருஷமா சினிமாவிலே ஹீரோவா நடிச்சிட்டு `டிவி'க்கு வந்திட்டீங்களே!'' என்று சில துணை நடிகர்கள் கேட்டனர். நான் சொல்லும் சமாதானம் அவர்களை திருப்திபடுத்தாது என்பதை உணர்ந்து, மவுனப் புன்னகை செய்தேன்.
1999-ல் `சித்தி' தொடர் உருவாக ஆரம்பித்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் `சித்தி' தொடரை பார்த்ததாக புள்ளி விவரங்கள் கூறின.
"அண்ணாமலை'', உலகின் பெரிய நாடுகளில் எல்லாம் ஒளிபரப்பு ஆயிற்று.
உலகில் எல்லாத் துறைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழும். அந்த மாறுதல்கள், திரை உலகிலும் நிகழும். கதாசிரியன், சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, பேனா முனை மதிப்பு பெறும் காலம் விரைவில் வரும். அப்போது அர்த்தமுள்ள கதைகள், ஆழமான கருத்துக்கள் மீண்டும் திரை மூலம் உயிர் பெறும். அதுவரை சின்னத்திரையில் தற்காலிகமாக பவனி வருவேன்.''
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
சிவகுமார் - லட்சுமி தம்பதிகளுக்கு சூர்யா, கார்த்திக் தவிர, ஒரே மகள் பிருந்தா.
பிருந்தா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து "பி.ஏ'' பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயரும் சிவகுமார்தான். இவர் "பி.ஈ'',"எம்.பி.ஏ'' பட்டங்கள் பெற்றவர். சென்னையில், "கிரானைடு''களை வெட்டப் பயன்படும் "டயமண்ட் டூல்ஸ்'' கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.
சிவகுமார் பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதேபோல் அனல்காற்று, 2கே அழகான காதல் போன்ற படங்களிலும் வனிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் பிரபலம் ஒருவர் குதிரையுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி இந்தியில் பிக்பாஸ் 9-வது சீசனில் போட்டியாளராகப் பங்கு பெற்றார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார். தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். மற்ற வளரும் நடிகைகளைப் போல டிகங்கனாவும் அதிக போட்டோஷூட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது குதிரையுடன் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எலி ரோத் இயக்கத்தில் லாரன்ஸா, டேரில் சபரா, ஏரியல் லெவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தி கிரீன் இன்பெர்னோ’ படத்தின் விமர்சனம்.
தொழிற்சாலை அமைப்பதற்காக வனப்பகுதியில் ஒரு கும்பல் மரங்களை வெட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாயகி லாரன்ஸாவும், தனது கல்லூரி நண்பர்களுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறாள்.
இதையடுத்து மரம் வெட்டுபவர்கள் போல் உடையணிந்து, நண்பர்களுடன் காட்டுக்குள் செல்லும் நாயகி, அங்கு நடப்பவற்றை வீடியோ எடுத்து அனுப்புகிறார். இதையடுத்து அந்த தொழிற்சாலை அமைப்பதற்கான பணி நிறுத்தப்படுகிறது.
பின்னர் காட்டை விட்டு வெளியே வரும்போது நாயகியும், அவரது நண்பர்களும், மனிதர்களை கொன்று தின்னும் காட்டுவாசிகளிடம் சிக்குகிறார்கள். இவர்களை காட்டுவாசிகள் சிறைபிடிக்கின்றனர். பின்னர் அந்த காட்டுவாசிகளிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அட்வெஞ்சர் ஹாரர் படமான இதை எலி ரோத் இயக்கி இருக்கிறார். காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் 6 நண்பர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை விறுவிறுப்பாக காட்டி இருக்கிறார். காட்டு வாசிகள் கதாபாத்திரத்தை மிகவும் கொடூரமாக வடிவமைத்துள்ளார். பார்க்கும் நமக்கே அவர்கள் மீது பயம் வரும் அளவுக்கு காட்டி இருக்கிறார்கள்.
லாரன்ஸா, டேரில் சபரா, ஏரியல் லெவி ஆகியோரது நடிப்பு பிரமாதம். கதாபாத்திரங்களின் தேர்வு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

ஆண்டனியோ கேர்சியாவின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காடுகளின் எழில் கொஞ்சும் அழகை திரையில் ரசிக்க முடிகிறது. மானுவேல் ரிவெய்ரோவின் பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.
மொத்தத்தில் ‘தி கிரீன் இன்பெர்னோ’ திகிலூட்டுகிறது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம்-2 ’ படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.
மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம்-2’ திரைப்படம், தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா, பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலையாளத்தில் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் ஐஜி கதாபாத்திரம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார். தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், அதுகுறித்து நடிகர் ராணா விளக்கம் அளித்துள்ளார். திரிஷ்யம் 2 ரீமேக்கில் தான் நடிக்கவில்லை. அதுகுறித்து பரவும் தகவல் உண்மையில்லை எனக்கூறி உள்ளார். இதன்மூலம் அவர் திரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கவில்லை என்பது உறுதி ஆகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் அசுரன், இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்நிலையில், அசுரன் படம் ஜப்பானில் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும் சிறந்த தமிழ் பட பிரிவிலும் நாமினேட் ஆகி உள்ளது. இந்த விருது விழா வருகிற மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சகுந்தலம் படத்தின் பூஜையில் கலந்துகொண்டார்.
சகுந்தலை புராண கதை, சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.
சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில், மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, “சினிமாவில் நான் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளேன். வில்லி, ஆக்ஷன் நாயகி என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறி உள்ளது. இத்தகைய கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகி உள்ளது. இப்படத்திற்காக 100 சதவீதம் உழைப்பேன்” என கூறினார்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி ‘சூரரைப்போற்று’ படம் உருவாக்கப்பட்டிருந்தது.
சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதனிடையே ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் இப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் இறுதிப் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனசும் இந்த பட்டியலை அறிவித்தனர். ஆனால் அவர்கள் அறிவித்த இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
ஏஆர் ரகுமான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாகியுள்ள மாஜா என்ற தளத்தின் தயாரிப்பில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் உருவாகியுள்ளது.
பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பு. இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் ஏஆர் ரகுமான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாகியுள்ள மாஜா என்ற தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் மகளான தீ பாடிய இந்தப் பாடலுக்கு அவர் இசையமைத்ததோடு தயாரிப்பையும் செய்துள்ளார். இந்தப் பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து சந்தோஷ் நாராயணன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “என்ஜாய் எஞ்சாமி பாடல் மீது மிகுந்த அன்பு செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. தீ, அறிவு, முழு குழுவும் நானும் உங்கள் நிபந்தனையற்ற ஆதரவுக்கு உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாடல் அனைத்து இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்களுக்கானது, அதன் வெளிப்பாடுகள் மகிமைப்படுத்தப்பட வேண்டும்.
ஆதரவு மற்றும் அங்கீகாரம் பெறப்படவேண்டிய குரல்களையும், கலைஞர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியை நாங்கள் தொடருவோம். நாம் முன்னேறும்போது இந்த புரட்சியில் சேர பல சிறந்த கலைஞர்கள் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் செய்யும் அனைத்தும் உங்களுக்காக, என் அன்பான மக்களே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார், தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார்.
கொரோனா லாக்டவுனுக்கு பின் மக்கள் திரையரங்குகளுக்கு வர தயக்கம் காட்டினர். அதேபோல் மாஸ்டரை தவிர, லாக்டவுனுக்கு பின் வெளியான எந்த படங்களும் சரிவர ஓடாததால் திரையரங்குகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால், மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் நோக்கில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் மீண்டும் வெளியாகி வரவேற்பை பெற்றன. கடந்த வாரம் அஜித்தின் பில்லா படம் ரீ ரிலீஸ் ஆனது, இந்த வாரம் சிம்புவின் மன்மதன் படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், அஜித் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தை, வருகிற மே 1-ந் தேதி அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று மீண்டும் வெளியிடுமாறு அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அஜித் ரசிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று மங்காத்தா படம் ரீ-ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






