என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷுடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுசின் பட்டாஸ் படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். மெஹ்ரினுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார்.
இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில் சினிமாவை விட்டு விலக மெஹ்ரின் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர் கூறும்போது, “திருமணத்துக்கு பிறகு கணவருடன் டெல்லியில் குடியேற மெஹ்ரின் திட்டமிட்டு உள்ளார். சினிமாவை விட்டு ஒதுங்கவும் முடிவு செய்து இருக்கிறார். புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. தற்போது வருண் தேஜாவுடன் நடிக்கும் தெலுங்கு படமே அவரது கடைசி படமாக இருக்கும்” என்றார்.
80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நதியா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார்.
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது.
‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் பூர்ணாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நடிகை நதியா திரிஷ்யம் 2 ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். தனக்கு மேக்கப் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இச்செய்தியை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் ஆஷா சரத் நடித்த போலீஸ் வேடத்தில் நதியா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
தமிழில் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான தலைவி படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் கங்கனா ரனாவத் தற்போது திருட்டு கதை புகாரில் சிக்கியுள்ளார். கங்கனா சமீபத்தில் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். இதற்கு எழுத்தாளர் ஆஷிக் கவுல் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “நான் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டா என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன். கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது'' என்றார்.
கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மும்பை கார் போலீசார் கங்கனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
நந்தி இயக்கத்தில் வருண், திவ்யா ராவ் நடிப்பில் உருவாகி இருக்கும் போலீஸ்காரன் மகள் படத்தின் முன்னோட்டம்.
ஆந்திராவில் டிகிரி காலேஜ் எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தமிழில் ‘போலீஸ்காரன் மகள்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கில் வளர்ந்துவரும் நாயகியான திவ்யா ராவ் இதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.
காதல் ஜோடிகளை சித்ரவதை செய்து பிரிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளே காதலில் விழுகிறார். மகளையும் காதலனிடம் இருந்து பிரிக்கிறார். சில நாட்கள் கழித்து இவ்விருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். சாதி வெறியின் கொடூரத் தால் உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதையாக இந்த போலீஸ்காரன் மகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கொண்டையா மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார்.ஜெயவாணி, ஸ்ரீனிவாஸ், நரசிம்மன், சி.ஏ.ரவி ஆகியோர் நடித்துள்ளனர். வசனம், தமிழ் உருவாக்கத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா ஏற்றுள்ளார். கதை திரைக்கதை எழுதி நந்தி இயக்கியுள்ளார்.
அழகப்பன் இயக்கத்தில் துல்கர் சல்மான், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காதல் இது காதல்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் துல்கர் சல்மானும், நாயகி மாளவிகா மோகனனும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். காதலித்து வரும் இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். ஊட்டிக்கு செல்லும் அவர்கள், அங்கு ஜாலியாக சுற்றுகின்றனர். கையில் காசு இருக்கும் வரை ஆடம்பரமாக செலவு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொண்டுவந்த பணமெல்லாம் காலியாகிறது.
கையில் பணமில்லாத சமயத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட ஆரம்பிக்கிறது. பின்னர் அது ஈகோ மோதலாக மாறி இருவரும் பிரிந்துவிடுகின்றனர். குடும்பத்தினரிடம் நடந்ததை எடுத்துக்கூறி அவரவரவர் வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர்.

பின்னர் துல்கர் சல்மானுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைக்கிறது. அதே அலுவலகத்தில் நாயகி மாளவிகா மோகனனுக்கும் வேலை கிடைக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்கிறது. இதையடுத்து என்ன ஆனது? அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ எனும் மலையாள படமான இது, தற்போது தமிழ் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. நாயகன் துல்கர் சல்மானும், நாயகி மாளவிகா மோகனனும் திரையுலகில் அறிமுகமானபோது வந்த படம் என்பதால் அவர்களது நடிப்பு பெரிதாக கவரவில்லை. மற்றபடி ஜெயப்பிரகாஷ், சீதா, இளவரசு, லீமா பாபு ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குனர் அழகப்பன், அவர் இயக்கிய முதல் படம் இது. படத்தின் கதை, பல படங்களில் பார்த்து பழகிய கதை போல் உள்ளது பின்னடைவாக உள்ளது. திரைக்கதையும் மெதுவாக நகர்வது சோர்வைத் தருகிறது.
படத்திற்கு ஒளிப்பதிவும் இவரே செய்திருக்கிறார். வண்ணமையமான காட்சி அமைப்பால் கவர்ந்திருக்கிறார். எம் ஜெயச்சந்திரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை மூலம் ஓரளவு ரசிக்க வைத்துள்ளார்.
மொத்தத்தில் ‘காதல் இது காதல்’ சோர்வு.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கேஜிஎப் 2 படத்தில், யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் பிரசாந்த் நீல். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் யூடியூபில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது உலக அளவில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்கிற பெருமையை பெற்றுள்ளது. தற்போது இந்த டீசரை 175 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதற்கு முன், கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த முலன் படத்தின் டீசர் 175 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை கேஜிஎப் 2 டீசர் முறியடித்துள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகளான ஜான்விகபூர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தடக்’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இது ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள், ரூஹி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தோஸ்தானா 2, குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாகவும், இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் நடிகை ஜான்வி கபூர், டோலிவுட்டில் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம்.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான யாஷிகா, ஸ்கை டைவிங் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவலை வேண்டாம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இவர் பாடம், துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.
தற்போது கடமையை செய், ராஜபீமா, பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது துபாய் சென்றுள்ள யாஷிகா, அங்கு பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கும் சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார். அப்போது எடுத்த வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். நடிகை யாஷிகா, சற்றும் பயமின்றி ஸ்கை டைவிங் செய்தது பலரையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாகவும், இர்பான் பதான் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கோப்ரா படம் வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறி உள்ளார். ரம்ஜான் பண்டிகைக்குள் படத்தின் பின்னணி வேலைகள் முடிக்க முடியாது என்பதனால் ஜூலை மாதம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே என்ற தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக ‘இவன் வேறமாதிரி’ படத்தில் அறிமுகமான நடிகை சுரபி, தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் ஜெய்யுடன் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சுரபி.

இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறும்போது, “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன்.

சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என்றார். நடிகை சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே என்ற தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அமீர்கான் எடுத்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். இவர் கடந்த 14-ந் தேதி தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அமீர்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையடுத்து வாழ்த்திய அனைவருக்குமே நேற்று டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்த அமீர்கான், தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “எனது பிறந்த நாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு நன்றி. அதில் என் மனம் நிறைந்துவிட்டது. இதுதான் எனது கடைசி சமூக வலைதளப் பதிவு. சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருப்பதாகக் கருதி, நான் அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்.

இதற்கு முன் இருந்தது போலவே தொடர்பில் இருப்போம். அமீர்கான் புரொடக்ஷன்ஸ் என்கிற அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளோம். ஆகையால், என் எதிர்கால அப்டேட்கள், படங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அந்த பக்கத்தில் பதிவேற்றப்படும்’ என அமீர்கான் தெரிவித்துள்ளார்.






