என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

    அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். 

    இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். 

    தனுஷ்

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதனை இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் கடந்த மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார். 

    இப்படத்தை வருகிற 2022-ம் ஆண்டு நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வாலின் சமீபத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

    சாக்‌ஷி அகர்வால்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபல நடிகை, புல்லட் ஓட்டும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரகதி. விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார். சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

    பிரகதி

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரகதி, அவ்வப்போது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் புல்லட் ஓட்டும் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டிருந்தார். நடிகை பிரகதி புல்லட் ஓட்டும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர். அவர் புல்லட் ஓட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    அமீர்கான் நடிப்பில் உருவாகும் ‘லால் சிங் சட்டா’ திரைப்படத்தில் பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
    ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார். 

    நாகசைதன்யா, சமந்தா

    இந்நிலையில், அக்கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனும், பிரபல சினிமா இசையமைப்பாளருமான அம்ரிஸ் ரூ.26 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    சென்னை:

    பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஸ் (வயது 33). இவர் பிரபல சினிமா இசையமைப்பாளர். நடிகர் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், பிரபுதேவா நடித்த சார்லிசாப்ளின்-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

    இவர் சென்னை போயஸ் கார்டனில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை, இவர் சென்னை தியாகராயநகர் கிருஷ்ணா தெருவில் உள்ள ஒரு வீட்டில் சினிமா இசை அமைப்பு பணியில் இருந்த போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்றனர். அவரை விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அவரை எதற்காக விசாரணைக்கு அழைத்து வந்தனர் என்பது மர்மமாக இருந்தது.

    நடிகை ஜெயசித்ரா நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, தனது மகனை சீருடை அணியாமல் வந்த சிலர் போலீஸ் என்று கூறி அழைத்து சென்று விட்டனர் என்றும், தற்போது அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றும் புகார் கூறினார்.

    அப்போதுதான் மோசடி வழக்கில், உங்கள் மகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என்று நடிகை ஜெயசித்ராவிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயசித்ரா மகனை காப்பாற்ற பல்வேறு முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அதில் பலன் கிடைக்காமல் போகவே நேற்று இரவு ஜெயசித்ரா மிகவும் வருத்தமுடன் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அம்ரிஸ் மீது ரூ.26 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு செய்திக்குறிப்பு வெளியிட்டனர்.

    சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரைச் சேர்ந்த நெடுமாறன் (68) என்பவரிடம், அரிய வகை இரிடியம் என்ற பொருளை தருவதாகவும், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் அது விலை போகும் என்று கூறி அம்ரிசும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.26 கோடி வாங்கிக்கொண்டு, போலியான இரிடியம் பொருளை கொடுத்து மோசடி செய்து விட்டதாகவும் புகார் எழுந்தது.

    கடந்த 2013-ம் ஆண்டு அம்ரிஸ் இந்த மோசடியில் ஈடுபட்டதாக நெடுமாறன் கொடுத்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த வழக்கில் அம்ரிஸ் தலைமறைவாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

    "அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

    இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

    தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

    அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

    எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

    1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

    அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

    அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

    பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

    எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

    நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

    பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

    இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

    அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

    என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

    இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

    அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.
    மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதற்கான செலவுகள் அனைத்தையும் விஜய்சேதுபதி ஏற்று இருக்கிறார்.
    இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணியின் போது உடல் நலக்குறைவு காரணமாக எஸ்.பி.ஜனநாதன் காலமானார். 

    இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு கண்ணீர் மல்க விடைக்கொடுத்தார் விஜய் சேதுபதி.

    இந்நிலையில் ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நடிகர் விஜய் சேதுபதி செலுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
    மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை பிரபல இயக்குனர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.
    மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 14ஆம் தேதி இவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். 

    லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களான மணிரத்னம், சங்கர், கவுதம் மேனன், சசி, வசந்தபாலன், லிங்குசாமி ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தனது பிறந்தநாளில் அவர்கள் கலந்துகொண்டதற்கு லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
    டோனி ஜா, ரான் பெர்ல்மேன், டால்ப் லன்ட்க்ரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் வீர தீரன் படத்தின் விமர்சனம்.
    தாய்லாந்தில் பெண்களை கடத்தி விற்கும் தொழில் செய்து வருகிறார் ரான் பெர்ல்மேன். இவரை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் அதற்கான முயற்சியில் இறங்குகிறார் ஹாங்காங் போலீஸ் அதிகாரி டோனி ஜா. இந்த நிலையில், தொழில் விஷயமாக அமெரிக்கா வருகிறார் ரான் பெர்ல்மேன். அவருக்கு தண்ணி காட்டி, அவரை எப்படியாவது கைது செய்ய திட்டமிடுகிறார் அமெரிக்க போலீஸ் அதிகாரி டால்ப் லன்ட்க்ரன்.

    மேலும் தனது திட்டப்படி ரான் பெர்ல்மேனை கைது செய்கிறார். இருவருக்குமிடையேயான சண்டையில் ரானின் கடைசி மகனை டால்ப் லன்ட்க்ரன் சுட்டதில் அவரது மகன் உயிரிழக்கிறார்.

    விமர்சனம்

    இதனால் கடும் கோபத்திற்குள்ளாகும் ரானின் மூத்த மகன்கள் டால்ப்பின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்து விடுகிறார்கள். டால்ப் மயிரிழையில் உயிர் தப்புகிறார். இதற்கிடையே ரான் பெர்ல்மேன் விடுதலையாகி தாய்லாந்துக்கு திரும்புகிறார்.

    தனது குடும்பத்தையே அழித்த ரானை கொல்வதற்காக டால்ப் லன்ட்க்ரனும் தாய்லாந்துக்கு வருகிறார். டால்ப்பை கண்காணிக்கும்படி டோனி ஜாவுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    கடைசியில் தனது குடும்பத்தை கொன்ற ரான் பெர்ல்மேனை, டால்ப் லன்ட்க்ரன் பழி வாங்கினாரா? டோனி ஜா அவரை தடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    டால்ப் லன்ட்க்ரன், டோனி ஜா என இருவருமே அதிரடியாக போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் இருவருமே தங்களது திறமையை நிரூபித்திருக்கிறார்கள். ரான் பெர்ல்மேன் இருவருக்கும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். பீட்டர் வெல்லர், செலினா ஜேட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

    டோனி ஜா, டால்ப் லன்ட்க்ரன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து அதிரடி கலந்த த்ரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எகச்சாய் உக்ரோந்தம். அமெரிக்கா, தாய்லாந்து என காட்சிகளை நகர்த்தி திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

    ஜேக்கப் குரோத்தின் இசையும், பென் நாட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் `வீர தீரன்' வீரமானவன்.
    நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரைசா, ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். சமீபத்தில் நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். தற்போது ரைசாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

    ரைசா

    ஒருவர் மடியில் ரைசா உட்கார்ந்துக் கொண்டு நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ரைசா காதலில் விழுந்துவிட்டதாகவும், காதலர் வெளிநாட்டை நேர்ந்தவர் என்றும் கூறி வருகிறார்கள்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

    தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    ஜெகபதி பாபு

    இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் பிரபல நடிகர் ஜெகபதி பாபு இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    சமீபத்தில் வெளியான சக்ரா படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது உருவாகி வரும் படத்திற்காக 50 அடி உயரத்தில் இருந்து குதிக்க இருக்கிறார்.
    விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

    எனிமி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக துபாயில் நடைபெற்று வருகிறது. 

    விஷால்

    இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. துபாயில் நடக்கும் படப்பிடிப்பில், 50 அடி உயரத்தில் இருந்து விஷால் குதிப்பதற்கு முன்பான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ×