என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உடல்நலக்குறைவு காரணமாக தீப்பெட்டி கணேசன் மரணமடைந்த நிலையில், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

    கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து திரையுலகைச் சேர்ந்த சிலர் இவருக்கு உதவிக்கரம் நீட்டினர். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேசன், கடந்த திங்களன்று (மார்ச் 22) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    தீப்பெட்டி கணேசன்

    மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது: “நடிகர் ‘தீப்பெட்டி’ கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வறையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”. இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அமீர்கான், சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்.
    பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். 

    அமீர்கான்

    அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  
    ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக திரில்லர் கதையம்சம் கொண்ட வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
    75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. அதன்படி திரில்லர் கதையம்சம் கொண்ட "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற வெப்தொடரை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

    ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் உருவாகிறது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த தொடரை வெளியிட உள்ளனர். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது.
    நடிகரும், பொழுதுபோக்கு கலைஞருமான அல்லு சிரீஷ், மக்களை கவரும் வகையில் புதுபுது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
    ராதா மோகன் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கவுரவம் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அல்லு சிரீஷ். நடிகரும், பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது முயற்சிகளை மேற்கொள்ள தயங்கியதில்லை. தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள இவர், தனது நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.  

    நடிகர் அல்லு சிரீஷ், திரைப்படங்களைத் தவிர, உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். மேலும் இணையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் ஆதரவை பெற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகரும் இவர் தான், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார்.  

    அல்லு சிரீஷ்

    தற்போது பாலிவுட்டில் மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய, ‘விலாயதி ஷரப்’ என்ற இந்தி மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். இதன்மூலம், இந்தி மியூசிக் வீடியோவில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார் அல்லு சிரீஷ். 
    கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுல்தான்’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
    நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள, இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். 

    பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    சுல்தான் படக்குழு

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது: சுல்தான் படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்து, பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்க முயன்றோம். பின்னர் படத்தின் மீதிருந்த நம்பிக்கையாலும், மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்ததாலும் முடிவை மாற்றிவிட்டோம்.

    ஆரம்பத்தில் சுல்தான் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டோம். பின்னர் பாகுபலி படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் கொடுத்த அறிவுரையின் படி, தற்போது அதனை ஒரே படமாக எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
    நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.
    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ. 

    இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள அட்லீ

    இந்நிலையில், சமீபத்திய தகவல் படி இயக்குனர் அட்லீ, தற்போது ஷாருக்கான் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    அண்மையில் அட்லியின் மனைவி பிரியா, தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இயக்குனர் அட்லீ, ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு தனது உதவி இயக்குனர் குழுவுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன்மூலம் ஷாருக்கான் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அட்லீ இறங்கியிருப்பது தெரிகிறது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சியான் 60’ படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர்.
    விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘சியான் 60’ படத்தில் விக்ரம், துருவ் இருவருமே இணைந்து நடிக்கின்றனர். 

    தந்தை, மகன் இருவரின் கதாபாத்திரங்களையும் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக கூறப்படுகிறது. 

    துருவ் விக்ரம், விக்ரம்

    இதில் துருவுக்கு, விக்ரம் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தந்தை, மகன் இணைந்து நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

    அடுத்து பரியேறும் பெருமாள் மற்றும் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் அவர் கபடி வீரராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாகி உள்ளது.
    ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில் நடிகை ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி அளித்த பேட்டி வருமாறு: “என் படங்களான தீரன் ஒரு ரகம், கைதி ஒரு ரகமா இருக்க, அடுத்து சுல்தான் வருகிறது. சுல்தான் படத்தில் ராஷ்மிகா எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். ராஷ்மிகா சரியான விளையாட்டுப் பெண். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் எல்லாம் ஒரே மாதிரியா இருக்க. ஒரு கிராமத்து கதாபாத்திரத்துக்காக காத்திருந்து இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். நான்கு மொழிகள் பேசுகிறார். 

    கார்த்தி, ராஷ்மிகா

    ராஷ்மிகாவுக்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். படப்பிடிப்பில் லூட்டி அடித்தபடி இருப்பார். ஆனால், என்ன ஆச்சரியம்னா ஷாட்டுக்குள்ள வந்ததும், அது வரைக்கும் அடிச்ச லூட்டி மறைஞ்சு கேரக்டரா மாறி சரியா வசனம் பேசி அசத்துவார். அவரது நடிப்பு மலைக்க வைத்தது. ராஷ்மிகாவுக்கு இந்திய சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது”. இவ்வாறு கார்த்தி கூறினார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.
    தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இது சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. இதில் நடித்த தனுஷுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இயக்குனர் வெற்றி மாறனுக்கு ஆளுயர மாலை அணிவித்து தயாரிப்பாளர் தாணு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தேசிய விருது கிடைத்தது பற்றி வெற்றிமாறன் கூறியதாவது: அசுரனுக்கு தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு இதுபோன்ற விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கும். எப்போதுமே விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை. அந்தக் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். இந்த விருதையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

    வெற்றிமாறன், தாணு

    அசுரன் சமூக நீதிக்கான கதை, அது மக்களிடையே போய் சேர வேண்டும் என்பது தான் என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிகரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிகவும் முக்கியமானது.

    சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் வென்றிருப்பது மகிழ்ச்சி. 35 வயது நடிகர், 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை அவர் மிகவும் இலகுவாக நடித்தது, ரொம்பவே ஸ்பெஷலான விஷயம். அப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.
    நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற சிறப்பான பாடல்களுக்காக டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2019-ம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த திங்களன்று அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய விருதை வென்று, தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் இசையமைப்பாளர் டி.இமானும் ஒருவர்.

    நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற சிறப்பான பாடல்களுக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் ‘கண்ணான கண்ணே’, ‘வானே’, ‘அடிச்சி தூக்கு’ போன்ற சூப்பர்ஹிட் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டி.இமானுக்கு அவரது ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    டி இமானின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், தனக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்ததாக டி.இமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய இசைப் பயணம் விஜய்யின் தமிழன் படம் மூலம் தான் தொடங்கியதாக தெரிவித்துள்ள இமான். தற்போது விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது வென்றதற்கு, விஜய் வாழ்த்தியது நெகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
    படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் லெஜண்ட் சரவணன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
    தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். 

    இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி மணாலியில் படமாக்கப்பட்டது. அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

    ரஜினிகாந்த், லெஜண்ட் சரவணன்

    இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் லெஜண்ட் சரவணன் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருகிறதாம். அப்போது இருவரும் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.
    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.

    தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:

    "சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா

    வெட்கங்கெட்ட காளை ரெண்டு

    முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது

    மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''

    என்று பாடினார்.

    பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.

    இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.

    `இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!

    நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,

    அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.

    அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.

    எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை அமைத்தது.

    மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.

    கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.

    அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

    அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.

    அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:

    "பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.

    அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.

    பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?

    ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.

    அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.

    "அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.

    அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.

    பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.

    அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.

    மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.

    என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.

    அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.

    இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.
    ×