என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தகன் படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக் 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
    பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசாந்த் சிம்ரன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்த்திக்

    இந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கார்த்திக் ஏற்கனவே முதல் டோஸ் போட்டுக் கொண்டதால் தற்போது இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

    ஜகமே தந்திரம்

    சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
    தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
    கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை விந்தியா 1999-ம் ஆண்டு வெளியான 'சங்கமம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

    படங்களில் நடித்த விந்தியா நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    விந்தியா போஸ்டர்

    இந்நிலையில் திமுகவினர் தான் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும் உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கும் அவர் திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அலுத்து போய்விட்டார்கள் போல என்றும் ஆண்டவனைத் தவிர தனக்கு யாராலும் என்ட் கார்டு போட முடியாது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
    சமீபத்தில் மாரடைப்பால் காலமான நடிகர் விவேக், நினைவாக அவரது உறவினர்கள் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தி மரக்கன்று நட்டு இருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

     விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உறவினர்கள் அஸ்திக்கு மரியாதை செய்த பின் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    விவேக்

    அதில் மலர்கள் தூவி மரக்கன்றுகளை அவருடைய உறவினர்கள் நட்டனர். இந்த மரம் விவேக்கின் நினைவாக அந்த கிராமத்தில் இருக்கும் என்றும் அவருடைய உறவினர்கள் நெகழ்ச்சியாக கூறியுள்ளனர். 
    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, சமீபத்தில் அளித்த பேட்டியில் கொரோனா முன் எச்சரிக்கைகள் பற்றி கூறி இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, கொரோனா முன் எச்சரிக்கைகள் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘‘மக்கள் அனைவரும் கொரோனா முன் எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முக கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். கொரோனா தொடர்ந்து நம்மை வேதனைப்படுத்தி வருகிறது. பலர் நெருங்கியவர்களை இழந்து நிற்கிறார்கள். இதை மனதில் வைத்து எச்சரிக்கையாக இருங்கள். 

    கொரோனா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். நானும் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன். ஆனால் அனைத்து முன் எச்சரிக்கையையும் எடுத்துக்கொள்கிறேன். என் அருகில் இருக்கும் உதவியாளர்களும் ஜாக்கிரதையாக உள்ளனர். படப்பிடிப்பு அரங்கில் எல்லோரும் முக கவசம் அணிகிறார்கள். சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறார்கள். 

    அஞ்சலி

    எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவை சாப்பிடுங்கள். சாப்பிடுவது, தூங்குவது என்று இல்லாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். கொரோனாவால் எல்லா துறையும் நஷ்டம் ஆகி விட்டது. சினிமா உயிர்த்தெழுந்த நேரத்தில் இரண்டாவது அலை வந்து வீழ்த்தி இருக்கிறது. நோய் தொற்றோடு சேர்ந்து நாம் பயணம் செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.''

    இவ்வாறு அஞ்சலி வருத்தத்தோடு கூறினார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா ஐதராபாத் சென்றுள்ளார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. 

    இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா இன்று ஐதராபாத் சென்றுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    நயன்தாரா

    அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், காமெடி நடிகர் யோகி பாபுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
    அஜித்துக்கு பிடித்த காமெடி நடிகராக யோகிபாபு மாறிவிட்டார். அஜித் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, இப்போ ‘வலிமை’ன்னு 4 படங்களில் அவருடன் நடித்துள்ளேன். முதல் 3 படங்களுடைய ஷூட்டிங்கில் என்னிடம் அவர் அடிக்கடி ‘யோகிபாபு ஏன் இன்னும் பொண்ணு பார்க்கலை, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை’ன்னு கேட்டுட்டே இருப்பார். 

    அஜித் - யோகி பாபு

    ‘நான் பொண்ணைப் பார்க்குறேன். பொண்ணுதான் என்னைப் பார்க்கமாட்டிங்குது சார்’னு சொன்னேன். ‘கவலைப்படாதே, சீக்கிரம் உனக்குக் கல்யாணம் ஆகும் பாரு’ன்னு சொன்னார். ‘வலிமை’ ஷூட்டிங்ல பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு கட்டிப் பிடிச்சு, ‘குடும்பம்தான் முக்கியம்’னு நிறைய அறிவுரை சொன்னார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கெவின் இயக்கத்தில் அபி சரவணன், மஹானா, ஜான் விஜய், மதுமிதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கும்பாரி’ படத்தின் முன்னோட்டம்.
    ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் 'பறம்பு' குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் 'கும்பாரி'. யோகிபாபு நடிப்பில் 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்கி உள்ளார். 

    நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய பிரகாஷ் மற்றும் ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள். ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். 

    கும்பாரி படக்குழு

    படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது: “இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் திடீரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. 

    இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு,  முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக  ஒரே கட்டமாக  நடத்தி முடித்துள்ளோம்”. இவ்வாறு அவர் கூறினார்.
    விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. 

    இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComing என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர். 

    மாஸ்டர் பட போஸ்டர்

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் 150 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய முதல் வீடியோ பாடல் என்ற சாதனையையும் வாத்தி கம்மிங் பாடல் படைத்துள்ளது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ‘வாத்தி கம்மிங்’ பாடலை அனிருத், கானா பாலசந்தர் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து  ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

    இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

    மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் போஸ்டர்

    இப்படத்தை வருகிற மே 13-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, சூர்யா 40 படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம்.
    நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய சண்டைக் காட்சியை 100-க்கும் அதிகமான துணை நடிகர்களை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, அந்த சண்டைக் காட்சியை தற்போது படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    சூர்யா

    இதனால், அந்தக் காட்சியை கொரோனா பரவல் முடிவுக்கு வந்தபின் எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ள படக்குழு, இதர காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்களாம். முதற்கட்டமாக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார்களாம்.
    நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 68.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க போன்ற படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். அருண் விஜய்யின் மாமனாரான இவர், சமீப காலமாக மூச்சுத் திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் இயக்குனர் தாமிரா, தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் என அடுத்தடுத்து இருவர் மறைந்தது, தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×