என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தனது ஒரே ஒரு பதிலால் ரசிகர் ஒருவரை நல்வழிப்படுத்தி இருக்கிறார்.
    சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

    நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    யுவன் சங்கர் ராஜாவின் பதிவு

    இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவு செய்தனர். ஆனால் ஒருவர், நீங்கள் எனக்கு Hi என்று ஒரு பதில் அளித்தால் நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்று கூறினார். அதற்கு உடனே யுவன் சங்கர் ராஜா Hi என்று பதில் அளித்தார். இந்த பதிவு பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.
    பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கி இருக்கிறார்.
    பிரபல தெலுங்கு நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு மே 31-ந்தேதியான இன்று பிறந்த நாள். அவரது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மகேஷ்பாபு நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர்களை அவரது பட தயாரிப்பாளர்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அலை காரணமாக கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள்

    மேலும் தந்தையின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து, தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கி இருக்கிறார். கிராம மக்களும் இன்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இதனை, மகேஷ் பாபு பெருமையுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள்.
    தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது பொது மக்களுக்கு பல உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருவார்கள். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் ரசிகர்கள் பலர் ஆங்காங்கே தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    விஜய் ரசிகர்கள்

    தற்போது மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களை பாராட்டி புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க நாணயங்களை வழங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

    அஜித்

    இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    இயக்குனர்-தயாரிப்பாளர் லிங்குசாமி கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் பத்து லட்சம் வழங்கி இருக்கிறார்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

    முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். 

    லிங்குசாமி

    இந்நிலையில் இயக்குனர்-தயாரிப்பாளர் லிங்குசாமி கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி இருக்கிறார்.
    பல படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் தனது மகனின் முதல் பிறந்தநாளை மிகவும் விமரிசையாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    அஜித் நடித்த ’கிரீடம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ’மதராசப்பட்டினம்’ ’தெய்வத்திருமகள்’ ’தலைவா’ ’சைவம்’ உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கினார். இவர் அமலாபாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.

    மனைவி மகனுடன் விஜய்

    அதன்பின் 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். விஜய்-ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2020ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    மனைவி மகனுடன் விஜய்

    இந்த குழந்தைக்கு ’துருவா’ என்று பெயர் வைத்தனர். இந்தநிலையில் நேற்று விஜய்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், சமூக வலைத்தள பக்கத்தில் ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம் என்று பதிவு செய்து இருக்கிறார்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    இந்நிலையில் தனது பெயரில் நிறைய போலி சமூக வலைத்தள பக்கங்கள் இருப்பதை பதிவு செய்திருக்கிறார். மேலும், நான் அதிக கணக்குகளில் இல்லை. இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து சமூக வலைத்தளத்தில் என்னை ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என்று பதிவு செய்து இருக்கிறார்.


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நாம் எல்லோருக்கும் தெரியும் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் நாம் இருக்கின்றோம். முதல் அலையை விட இரண்டாவது அலை மிக அதிக நபர்களை பாதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா உள்பட ஒருசில நோய்கள் உள்ளவர்களை அதிகமாக பாதித்து வருகிறது. எனவே தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். ஒருவேளை அவசர காரியமாக வெளியே வர வேண்டுமென்றால் 2 மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். அது மட்டுமின்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம், நாட்டையும் காப்போம்’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
    சூர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
    சூர்யா நடித்த ’மாசு’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

    கணவருடன் பிரணிதா
    கணவருடன் பிரணிதா

    மேலும் பிரணிதா சுபாஷின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கொரோனா காலம் என்பதால் திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. அதனால் என்னை மன்னிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்" என்று இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

    காஜல் அகர்வால்

    படத்தை பற்றி தயாரிப்பாளர் மனுகுமரன் கூறியதாவது: "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிணாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்" என்றார். 
    ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நடிகை ஷகிலா, உணவு வழங்கி உள்ளார்
    மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவரது, இமேஜை குக் வித் கோமாளி நிகழ்ச்சி முற்றிலும் மாற்றியது. 

    இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷகிலா, தற்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

    நடிகை ஷகிலா ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய போது எடுத்த புகைப்படம்
    நடிகை ஷகிலா ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய போது எடுத்த புகைப்படம்

    அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஷகிலா குறிப்பிட்டுள்ளார். ஷகிலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
    நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. 

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவரது அமைதிக்கான காரணம் வெளியாகி உள்ளது. 

    சமந்தா
    சமந்தா

    நடிகை சமந்தா, சர்ச்சைகளுக்கு பதிலளித்தால், அது இந்த தொடருக்கு, எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என இந்த தொடரின் தயாரிப்பு நிறுவனம் சமந்தாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். அதனால் தான் அவர் இந்த விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறாராம். 
    ×