என் மலர்
சினிமா செய்திகள்
தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் மூலமாக ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர் பக்தவச்சலம் முன்னிலையில் நானும் எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம்.

இயக்குனர் அமீர்
நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு கோவிட்19 நோயிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கும் நடிகர் தனுஷ் கோலிசோடாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள தனுஷ், அதன்பின் சென்னை திரும்ப இருக்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ஹே கோலி சோடாவே’ என்ற பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் குவிந்து உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர். ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா சத்தமின்றி வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறார். நேற்று மட்டும் 250 ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இக்கட்டான நேரத்தில் உதவி செய்யும் வகையில் சூர்யா அனுப்பிய பணம் தங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள்.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் முன்னோட்டம்.
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
மறைந்த இயக்குனர் சொர்ணம் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பிரபல திரைப்பட இயக்குனர் சொர்ணம், இவர் சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக சொர்ணத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மரணம் அடைந்த சொர்ணம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கதை எழுதிய ஒரே ரத்தம் படத்தை இயக்கி பிரபலமானார். தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.
மேலும் சிவகுமார், கமல்ஹாசன் நடித்த தங்கத்திலே வைரம், முத்துராமன் நடித்த சீர்வரிசை, ஜெய்சங்கர் நடித்த ஆசை மனைவி, நீ ஒரு மகராணி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் சொர்ணம்.
இதுதவிர, எம்.ஜி.ஆர். நடித்த தாயின் மடியில், நம்நாடு, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, என் அண்ணன், குமரி கோட்டம், இதயவீணை, ராமன் தேடிய சீதை, பட்டிக்காட்டு பொன்னையா உள்ளிட்ட 11 படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

திரைப்பட இயக்குனர் சொர்ணத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்
மறைந்த இயக்குனர் சொர்ணம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சொர்ணத்தின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.
தமிழில் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

ராம்சரண், மாளவிகா மோகனன்
இந்நிலையில், இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது அமையும். நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது அவர் கைவசம் தனுஷின் ‘டி 43’ என்கிற தமிழ் படமும், யுத்ரா என்கிற இந்தி படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.
நடிகை சமந்தா, அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக அவர் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு இரண்டு சீசன்களுக்கும் சேர்த்து ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகை பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.இரஞ்சித்.

பா.இரஞ்சித்
இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் பா.இரஞ்சித். தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடித்தபின் பா.இரஞ்சித் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இந்தி படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் ரூ.12 கோடி கேட்கிறாராம். படக்குழுவினர், அவர் கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், தற்போது அவரது கணவர் நாக சைதன்யாவும் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு பதிலாக அக்கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடிக்க உள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை, ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

நாகசைதன்யா
நடிகர் நாகசைதன்யா நடிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும். அண்மையில் நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், தற்போது அவரது கணவர் நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், தற்போது பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சுருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனை போன்று, நடிகை சுருதிஹாசனும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் பாடுவது என சினிமாவில் பல துறைகளில் கால்பதித்த சுருதிஹாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன் தொகுத்து வழங்கிய சுருதிஹாசன், தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம்.
அதன்படி, இவர் ஓடிடி தளத்துக்காக உருவாகும் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான டாப்சியும், டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலித்து வருகின்றனர்.
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி, பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு டாப்சியும், டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் டாப்சி வெளியிட்டு வந்தார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் காதலர் குறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்தியாஸ் எனக்கு நெருக்கமான வளையத்துக்குள் இருக்கிறார்.

டாப்சி
அதனாலேயே அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறேன். திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள் என்று நடிக்கும் எண்ணிக்கை 2 அல்லது 3 படங்கள் என்று குறையும்போது திருமணத்துக்கு தயாராவேன்'' என்றார்.






