என் மலர்
சினிமா செய்திகள்
திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுள்ள சஜி - சங்கீதா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மலையாளத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘இவ விவஹிதரயால்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சஜி சுரேந்திரன். இவர் இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், குஞ்சலியன், ஷீ டாக்ஸி போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். இயக்குனர் சஜி கடந்த 2005-ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

சங்கீதா, சஜி சுரேந்திரன்
இந்நிலையில், சஜி - சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி வெளியிட்டுள்ள பதிவில், “சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக வரும். இரட்டை குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளதால், இத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை டாப்சி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் 'சபாஷ் மிது', 'ராஷ்மி ராக்கெட்', 'டூபாரா', 'லூப் லபேடா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகை டாப்சி புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது 11 வருட சினிமா வாழ்க்கையில் ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் அளித்துள்ளனர். என்னைப்போல் எந்த பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு எனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த 1981-ம் ஆண்டு வெளியான ராஜ பார்வை படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் விக்ரம் படத்திற்காக அத்தகைய சவாலான வேடத்தை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வெளியானால் பாகுபலி பட சாதனைகளை நிச்சயம் முறியடிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
கொரோனா 2-வது அலை காரணமாக இரண்டு மாதங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு முடங்கியதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என இந்த மேக்கிங் வீடியோ மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
The effort behind creating the ultimate theatrical experience is here!
— RRR Movie (@RRRMovie) July 15, 2021
Watch the making of #RRRMovie here 🔥🌊 https://t.co/A27oTfLPp1#RoarOfRRR@ssrajamouli@tarak9999@AlwaysRamCharan@mmkeeravaani@ajaydevgn@aliaa08@oliviamorris891@DVVMovies
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுடன் கமல்ஹாசன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுடன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காணொலி வாயிலாக கலந்துரையாடி உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகை சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்” என கமல் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் எப்போதுமே பல ஏழை மக்களுக்கு ரியல் ஹீரோவாகத்தான் இருக்கிறார் என பிரபல நடிகை தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு, நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நடிகர் விஜய் எப்போதுமே பல ஏழை மக்களுக்கு ரியல் ஹீரோவாகத்தான் இருக்கிறார். பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி இருக்கிறார். ஏராளமான மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி இருக்கிறார். அவரது ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார். ஒருவரின் குணத்தை அவதூறு செய்யக் கூடாது.

காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பதிவு
நீதிமன்றத்தில் நடந்த விஷயம் நீதிமன்றத்தோடு முடிந்துவிட்டது. விஜய் செய்த உதவிகளை நாம் மறக்க கூடாது. கோர்ட்டு விஷயத்தை வைத்து அவர் செய்த நல்லவைகளை அசிங்கப்படுத்தக் கூடாது. காருக்கு நுழைவு வரியில் இருந்துதான் விலக்கு கேட்டார். நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் வரியை கட்டப்போகிறார். அவ்வளவுதான்’’ என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார்.
தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ்
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்க உள்ள தெலுங்கு படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளாராம். இது முழுக்க முழுக்க அரசியல் கதை என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மற்றொரு இயக்குனரின் கதையை படமாக்குவது இதுவே முதன்முறை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல பாடகர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங். இவர் சுபி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். சுபி பாடல்களால் பிரபலமான செய்ன் பிரதர் இசைக்குழுவிலும் இடம்பெற்று இருந்தார் மன்மீத் சிங். இவர் தனது நண்பர்கள் சிலருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்றார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு கரேரி ஆற்றுப் பகுதிக்கு சென்றனர்.
அப்போது கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரேரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மன்மீத் சிங் நண்பர்களுடன் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். அப்போது மழைநீரில் வழுக்கி திடீரென்று ஆற்றுக்குள் விழுந்தார்.

மன்மீத் சிங்
மன்மீத் சிங்கை வெள்ளம் அடித்து சென்றது. கரையில் நின்றவர்கள் அலறி துடித்தார்க்ள. ஆனால் காப்பாற்ற முடியவில்லை. போலீசார் விரைந்து வந்து தீவிர தேடுதலுக்கு பிறகு கங்க்ரா மாவட்டத்தில் ஆற்றின் கரையோரத்தில் மன்மீத் சிங்கை பிணமாக மீட்டனர்.
நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர், பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பிரபல மலையாள நடிகை அம்பிலி தேவி. இவர் மம்முட்டியுடன் விஸ்வதுளசி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பல மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சீதா தொடரில் தன்னுடன் நடித்த ஆதித்யன் ஜெயனுடன் அம்பிலி தேவிக்கு இரு வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4-வது மனைவி ஆவார். இதுபோல் அம்பிலிக்கும் ஆதித்யன் 2-வது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவர்கள் திருமணத்துக்கு விமர்சனங்கள் கிளம்பின. திருமணம் பற்றி கேள்விப்பட்டதும் அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடியது பரபரப்பானது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்பிலிக்கும் ஆதித்யனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆதித்யன் நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர்.

ஆதித்யன் ஜெயன், அம்பிலி தேவி
இந்நிலையில் ஆதித்யன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அம்பிலி தேவி, போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரபல தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.
அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு... அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

வருடத்திற்கு ரஜினியின் இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.
ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன்.

கே.டி. குஞ்சுமோன் - ரஜினி
என்னைப் போலவே ரஜினியின் படங்களால் பலர் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.! வெல்டன் அண்ணாத்த.! என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இப்படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். தற்போது தமிழில் மாதவன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது இவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இந்நிலையில் சமந்தா, செல்ல நாய்க்குட்டியுடன் துள்ளி குதித்து பலூன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில மணி நேரத்திலேயே பல லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.






