என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
    இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி இருந்தார். இவர் அடுத்ததாக ஹனு-மான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

    முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். இப்படத்தின் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டு இருக்கிறார்.

    இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்தின் மேல் நின்று கொண்டு தனது இலக்கை ஒரு உண்டிகோல் மூலம் குறி பார்ப்பதை காணலாம். சூப்பர் ஹீரோவாக நடிப்பதற்காக கடும் பயிற்சிகளை அவர் மேற்கொண்டு இருக்கிறார்.

    ஹனு மான்

    இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளிவரவுள்ளது. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று உள்ளார். 

    இந்நிலையில், நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் பாலிவுட் திரைப்படங்கள் மூலமாக சோனு சூட் சொந்த நிதி நிறுவனம் மூலம் வந்த பணம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சோனு சூட்

    சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நீடித்த சோதனை குறித்து வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி நன்கொடை பெற்றதில் விதிமீறல் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்ட அவரது இலாப நோக்கற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்து உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. மீதி ரூ.17 கோடி லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 
    நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதை அறிந்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும், கனிமொழி, சௌந்தர்யா ஆகிய மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘மாணவர்கள் அனைவரும் அச்சம் இல்லாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஒரு பரீட்சை உங்க உயிரைவிட பெருசு இல்ல.. மனசு கஷ்டமா இருந்தா, உங்களுக்கு பிடித்தவங்க... நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசை விட்டு பேசுங்க... பயம், விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்துல மறைந்துவிடும். 

    சூர்யா

    தற்கொலை செய்வது, உங்களை பிடித்தவர்களுக்கு மற்றும் அப்பா, அம்மாவுக்கு வாழ்நாள் தண்டனை. நான் நிறைய தேர்வில் தோல்வி அடைந்து இருக்கிறேன். கேவலான மார்க் எடுத்து இருக்கிறேன். மதிப்பெண், தேர்வை விட சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்பிக்கை, தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் பெருசா ஜெயிக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.
    விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் இராவணகோட்டம் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், கண்ணன் ரவி குரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கும் திரைப்படம் “இராவணகோட்டம்”. இதில் சாந்தனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் பிரபு, இளவரசு, தீபா, அருள்தாஸ், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இராவண கோட்டம் படக்குழுவினர்
    இராவண கோட்டம் படக்குழுவினர்

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் நிறைவு நாளில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட உள்ளனர். 
    பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வரும் சங்கர், அடுத்ததாக இயக்க இருக்கும் புதிய படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என்றும் சங்கர் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். 

    அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து சங்கர் கூறும்போது, “அந்நியன் கதை என்னுடையது. எனவே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் கேட்க தேவை இல்லை'' என்றார். பட வேலைகளையும் தொடங்கினார்.

    அந்நியன்

    இந்த நிலையில் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக ஆஸ்கார் ரவிச்சந்திரனும் தற்போது அறிவித்து உள்ளார். அந்நியன் இந்தி ரீமேக்கில் இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் தெரிவித்து உள்ளார். ஒரே படத்தை இரண்டு பேர் எடுக்க இருப்பதாக அறிவித்திருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வரும் கமல்ஹாசன், கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல என்று கூறியிருக்கிறார்.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

    கமல்

    ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல...’ என்று பேசும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் அஜ்மல் அமீர், பிரபல இயக்குனர் படத்தில் இணைந்து இருக்கிறார்.
    மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் நயன்தாராவுடன் அஜ்மல் அமீர் நடித்து வருகிறார்.

    அல்போன்ஸ் புத்திரன் - அஜ்மல்
    அல்போன்ஸ் புத்திரன் - அஜ்மல்

    ‘பிரேமம்’, ‘நேரம்’ படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்தில், பிரித்விராஜ், நயன்தாரா நடித்து வருகிறார்கள். ‘கோல்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜ்மல் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் இணைந்து இருப்பதாக அஜ்மல் அமீர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    தலைவி படத்தை தொடர்ந்து அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாகவும், ரெஜினா நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார்.

    கள்ளபார்ட் பட போஸ்டர்
    கள்ளபார்ட் பட போஸ்டர்

    என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாயில் சிகரெட்டுடன், கையில் பேண்ட் கட்டும் அரவிந்த்சாமியின் லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ், லாஸ்லியா நடிப்பில் வெளியாகி இருக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் விமர்சனம்.
    ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் லாஸ்லியா.

    சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

    விமர்சனம்

    இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் முழுக்க அதிக வசனம் பேசாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சதீஷ். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.

    விமர்சனம்

    நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா சுட்டித்தனமாக, இளமை துள்ளளுடன் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் அர்ஜுன். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே.சதீஷ்.

    நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா. அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது. ஹர்பஜன் சிங்கை அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கென்று கிரிக்கெட் காட்சிகள் வைத்திருப்பது போல் இருக்கிறது. அந்த காட்சியை கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியதற்கு வாழ்த்துகள்.

    விமர்சனம்

    உதயகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். சாந்த குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.


    மொத்தத்தில் ‘பிரண்ட்ஷிப்’ நமத்துப்போன 'சிப்'ஸ்!
    சலங்கை துரை இயக்கத்தில் எம்.ஆர் தாமோதர், விதிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடத்தல்’ படத்தின் முன்னோட்டம்.
    கரண், வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 படங்களுக்கு பிறகு சலங்கை துரை இயக்கும் படம் ‘கடத்தல்’.  நிர்மலா தேவி நல்லாசியுடன் சௌத் இண்டியன் புரடெக்‌ஷன்ஸ் தயாரிக்க கதாநாயகனாக எம்.ஆர் தாமோதர் அறிமுகமாகிறார். 

    கடத்தல் படக்குழு
    கடத்தல் படக்குழு

    கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். சுதா,சிங்கம் புலி, பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம், நிழல்கள் ரவி க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண் ரெட்டி, பிரவீன்  மற்றும் பலர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி திருப்பங்களுடன் கூடிய ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கிறது ‘கடத்தல்’.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விளம்பர படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். புகையிலையை விளம்பரப்படுத்த தடை உள்ளதால் அந்த புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதில் மகேஷ்பாபு நடிக்க பலரும் எதிர்த்து வருகிறார்கள். 

    சாய்பல்லவி ரூ.2 கோடி கொடுத்தும் முக அழகு கிரீம் விளம்பர படமொன்றில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் கிரீம் போட்டு கருப்பாக உள்ள நிறத்தை சிவப்பாக மாற்ற முடியாது. எனவே இந்த விளம்பர படம் மூலம் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று காரணமும் சொன்னார்.

    மகேஷ்பாபு
    மகேஷ்பாபு

    அவரே அப்படி இருக்கும்போது மகேஷ்பாபு பெரிய கோடீஸ்வரர். அவரது தந்தை நிறைய படங்களை தயாரித்து இருக்கிறார். பெரிய அளவில் சொத்து இருக்கிறது. இப்படி புகையிலை நிறுவன விளம்பர படத்தில் நடிப்பது சரியா என்று வலைத்தளத்தில் கடுமையான கண்டனங்களை பலரும் பதிவு செய்து வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படம் வருகிற நம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது.

    சிம்பு டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
    சிம்பு டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும், அப்பாடல் விரைவில் வெளியிட உள்ளதை தான் அவர் இவ்வாறு சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    ×