என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் செந்தில்நாதன், சாண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் சின்னஞ்சிறு கிளியே படத்தின் விமர்சனம்.
    நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில்நாதன். பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்துவிடுகிறார்.

    தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். 6 வயதில் இருக்கும் போது, செந்தில்நாதனின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இறுதியில், செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மகளை செந்தில்நாதன் கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பளிச்சிடுகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார். தந்தையை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார். பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்துக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். முதல்பாதி திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம்பாதி மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார். கதையில் இருக்கும் வலு, திரைக்கதையிலும்,  கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அதிகம் இல்லை. இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது. பல விருது படங்கள் ஆவணப் படங்கள் போல் இருக்கும். ஆனால், இப்படம் அதுபோல் இல்லாமல் இருப்பது சிறப்பு.

    மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ ரசிக்கலாம்.
    தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகர் வடிவேலுவின் நிலத்தை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டு இருக்கிறார்கள்.
    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காட்டுப்பரமக்குடி கிராமத்தில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சேத்தூர் கிராமத்தில் உள்ளது. அந்த நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

    அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஆய்வாளர் முருகானந்தம், சேத்தூர் கிராம கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து, அவர்களது முன்னிலையில் கோவில் நிலம் மீட்கப்பட்டது. 

    வடிவேலு

    மேலும் அந்த இடத்தில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சிண்ட்ரெல்லா படத்தின் விழாவில் பிரபல நடிகர் ஒருவர் ராய் லட்சுமியின் கையை பிடித்து இழுத்து பேச விடாமல் தடுத்து இருக்கிறார்.
    ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் ரோபோ சங்கர் பேசும், ‘ராய் லட்சுமி பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேகமாக வந்து பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டேன்’ என்றார். பின்னர் ராய் லட்சுமி மைக்கில் பேசுவதற்காக எழுந்து செல்லும்போது, போகாதே என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டார். 

    ராய் லட்சுமி பேசும்போது, சிண்ட்ரெல்லா ஒரு திகில் படம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும். காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற எனது வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இந்த வகை திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் சிண்ட்ரெல்லா தலைப்பின் முக்கியத்துவத்தும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

    ராய் லட்சுமி - ரோபோ சங்கர்
    ராய் லட்சுமி - ரோபோ சங்கர்

    சிண்ட்ரெல்லாவின் வெற்றி இயக்குனர் வினோவின் கடின உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த காட்சி சவாலானது. பல நேரங்களில், அது மிகவும் கடினமாக இருந்தது. இந்த கடினமான காட்சிகள் முடிந்தவுடன், நகைச்சுவை காட்சிகளில் ரோபோ சங்கருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.
    18 வயது இளைஞர் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குநர் பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.
    பதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய 'காற்றினிலே' என்ற 50- நிமிட-திரைப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

    சமீபத்தில் காற்றினிலே படம் திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு தனது கருத்துகளைப் பகிர்ந்த பாக்யராஜ், “ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முதல் காட்சி மிகவும் முக்கியமானது, அதை இந்த இளம் குழு அற்புதமாக செய்துள்ளது. இயக்குநர் ஈஸ்வர் கோபால கிருஷ்ணனின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டும். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் நண்பர்களையும் பாராட்டுகிறேன். தங்கள் மகனின் ஆர்வத்தை அடையாளம் காட்டியதற்கும், அவர் விரும்பிய பாதையில் தொடர ஊக்குவிப்பதற்கும் ஈஸ்வரின் பெற்றோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்றார்.

    இவ்வளவு இளம் வயதிலேயே சிறப்பான ஒரு ஒரு படத்தை ஈஸ்வர் உருவாக்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறினார். “இந்த இளம் குழுவினரின் திரைப்படத்தின் தரம் உண்மையில் பாராட்டத்தக்கது. முழு அணியின் கடின உழைப்பும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

    அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா
    அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா

    இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கிய ஈஸ்வர் திரைப்பபடத்தைப் பற்றி பேசுகையில், “ஆறாம் வகுப்பிலிருந்து நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை உருவாக்க தொடங்கினேன். பின்னர் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க விரும்பினேன், இதன் விளைவாக இப்போது 'காற்றினிலே' உருவாகியுள்ளது. என் பெரியப்பா ஒளிப்பதிவாளர் எம் வி பன்னீர்செல்வம் எனக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை எனது முன்மாதிரியாக கருதுகிறேன். இந்தப் படத்தில் அவரால் ஈர்க்கப்பட்டு, அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில காட்சிகளும் உள்ளன” என்றார்.

    அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் காற்றினிலே திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஈஸ்வரின் தாயார் விஜி பாலசந்தர் தயாரித்துள்ளார். யோகான் மனு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை சுதர்ஷன் ஆர் செய்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர், பிரபல நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
    ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

    இதில் ரோபா சங்கர் பேசும் போது, சிண்ட்ரெல்லா திரைப்படம் சிறப்பாக இருக்கும். இப்படம் தியேட்டரில் வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் ராய் லட்சுமியுடன் ஒரு காட்சி இருக்கிறது. அதில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும். நான் பேசும் போது, எந்த நடிகையாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ராய் லட்சுமி
    ராய் லட்சுமி

    ஆனால், ராய் லட்சுமி அந்த வசனங்களை ரசித்தார். ஒரு மெழுகு சிலை போல் அழகாக இருக்கிறார் ராய் லட்சுமி. அவரை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது என்றார்.
    ராய் லட்சுமி, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் முன்னோட்டம்.
    உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் 'சிண்ட்ரெல்லா'. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது. இதில் ராய்லட்சுமி, சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர், 'கல்லூரி' வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

    இப்படத்தில் ராய் லட்சுமி மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளாராம். சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும், இது தவிர மூன்றாவதாக நடிக்கும் வேடம் சஸ்பென்சாக வெளியிடப்படாமல் வைத்திருக்கிறார்கள்.

    ரோபோ சங்கர், ராய் லட்சுமி
    ரோபோ சங்கர், ராய் லட்சுமி

    இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர். 'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். 

    போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அஜித்

    இந்நிலையில், வலிமை படத்தின் முன்னோட்ட காட்சிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டு உள்ளன. இந்த வீடியோவில் அஜித்தின் அசத்தல் வசனங்கள் மற்றும் மாஸான பைக் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த முன்னோட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    மோகன் ஜி இயக்கி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

    ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

    இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில்  இன்று  நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ்  உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில், “இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை. 

    ருத்ர தாண்டவம் படக்குழு
    ருத்ர தாண்டவம் படக்குழு

    இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன் ஜி என்னை சந்தித்தார். நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார். அதன் பின் நடித்தேன்.

    இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம். படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்” என்றார்.
    சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தை இயக்கியுள்ள சிபி சக்ரவர்த்தி, இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயன் டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படம்
    சிவகார்த்திகேயன் டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படம்

    இந்நிலையில், டான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். மேலும் அவர் டப்பிங் பேசும்போது எடுத்த புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 
    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘மாமனிதன்’ படம் குறித்த சுவாரஸ்ய தகவலை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.
    சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.

    இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி மாமனிதன் படத்தின் கதையை வடிவேலு, பிரபுதேவா, மம்முட்டி ஆகியோரிடம் சொன்னதாகவும், இறுதியில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சீனு ராமசாமி, விஜய் சேதுபதி
    சீனு ராமசாமி, விஜய் சேதுபதி

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மாமனிதன் படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே" என்றார். பிரபுதேவா கண்கலங்கினார். ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை. 

    மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. மிக அருகில் நல்ல சேதி” என சீனு ராமசாமி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி, அடுத்ததாக தலைநகரம் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
    ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    வி.இசட்.துரை, சுந்தர்.சி
    வி.இசட்.துரை, சுந்தர்.சி

    இப்படத்திலும் சுந்தர்.சி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை வி.இசட்.துரை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

    ‘தலைநகரம்’ படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது வடிவேலுவின் காமெடி தான். அந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் ‘தலைநகரம் 2’ படத்தில் வடிவேலு நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய், அர்ச்சனா, காளி வெங்கட், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
    கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கு ‘வருண் டாக்டர்’ என பெயரிட்டுள்ளனர். 

    சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பதிவு
    சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பதிவு

    இப்படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தான் தெலுங்கிலும் வெளியிட உள்ளார்களாம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, சீமராஜா, ஹீரோ ஆகிய படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×