என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.
    பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக கலக்கியிருப்பார். அதைத்தொடர்ந்து அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வந்த நெடுமுடி வேணு இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார். 

    1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

    73 வயதாகும் நெடுமுடி வேணு, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று பின் குணமாகினார். இந்த நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.
    அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
    ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஓ மணப்பெண்ணே’. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

    தெலுங்கில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பெல்லி சூப்பலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகி உள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டுள்ளார். 

    ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
    ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22-ந் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஹரீஷ் கல்யாண் நடித்த ‘கசட தபற’ படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
    தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை
    தெலுங்கு சினிமாவின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார். பிரகாஷ் ராஜூக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் பிரகாஷ்ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.

    பிரகாஷ் ராஜ், விஷ்ணு மஞ்சு
    பிரகாஷ் ராஜ், விஷ்ணு மஞ்சு

    மொத்தம் உள்ள 900 உறுப்பினர்களில் 833 பேருக்குத்தான் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. இதில் 655 ஓட்டுக்கள் பதிவானது.  விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் பெற்றார். இதன்மூலம் 113 ஓட்டு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்தார் பிரகாஷ்ராஜ். ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார். சமீபத்தில் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. 

    ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் போஸ்டர்
    இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் போஸ்டர்

    கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயம் சூர்யா கவனத்திற்கு சென்றதும், அவர் இயக்குனரை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார் சூர்யா. 
    விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

    சிவகார்த்திகேயன், நெல்சன்
    சிவகார்த்திகேயன், நெல்சன்

    இந்நிலையில், டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அண்மையில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின் தற்போது முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் சமந்தா.

    சமந்தா, ஜூனியர் என்.டி.ஆர்
    சமந்தா, ஜூனியர் என்.டி.ஆர்

    அதன்படி தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், நடத்தி வரும் ‘உங்களில் யார் கோடீஸ்வரர்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் ரூ.25 லட்சம் வென்றதாக கூறப்படுகிறது. 

    இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இதில் அவர் விவாகரத்து விவகாரம் குறித்து பேசினாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நமீதா, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வெளியேறினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை. 

    கடந்த வாரம் நடந்த டாஸ்கில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இவ்வாறு முதல் வாரமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார். அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

    நமீதா மாரிமுத்து
    நமீதா மாரிமுத்து

    அவர் பிக்பாஸ் வீட்டில் தகராறு செய்ததால் ரெட் காட்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவி வந்தது. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வலம் வந்தன.

    இந்நிலையில், நமீதா வெளியேறியதற்கான உண்மை காரணம் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவ காரணங்களுக்காக தாமாக வெளியேறியதாக அவரின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி, முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து டூயட் பாடி உள்ளார்.
    பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். 

    அந்த வகையில், தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார் சிவாங்கி. ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

    சிம்பு, சிவாங்கி
    சிம்பு, சிவாங்கி

    ‘மாயன்’ திரைப்படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
    கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

    திரிஷா பகிர்ந்த புகைப்படம்
    திரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மங்காத்தா, மன்மதம் அம்பு உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடிகை திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார் திரிஷா. 
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில், இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. 

    இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

    கவுதம் மேனன், விடுதலை படத்தின் போஸ்டர்
    கவுதம் மேனன், விடுதலை படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
    கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

    பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன்
    பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன் 

    இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் டாக்டர் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் (ரூ.25 கோடி) படமும், இரண்டாவது இடத்தில் தனுஷின் கர்ணன் (ரூ.11 கோடி) படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
    நடிகை சமந்தா இந்த ஆண்டு இறுதியில் நாக சைதன்யாவுடன் குழந்தைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததாக ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “சகுந்தலம் படத்திற்காக நானும் எனது தந்தை குணசேகரும் சமந்தாவை அணுகியபோது அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது, ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா? என்று கேட்டார். 

    நான் ஏன் என்று கேட்டேன், அதற்கு ‘நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தாயாக விரும்புவதற்குத் தான் முன்னுரிமை அளிப்பேன். குழந்தை பிறந்தால் அதுதான் என் உலகமாக இருக்கும்’ என்றார். 

    நீலிமா, சமந்தா
    நீலிமா, சமந்தா

    அதோடு, ‘சாகுந்தலம்’ சரித்திர கதையம்சம் கொண்ட படம், முடிவடைய நீண்டகாலம் ஆகும் என்பதால், சமந்தா ஆரம்பத்தில் இந்த படத்தில் கையெழுத்திட தயங்கினார். ஆனால், திட்டமிட்டப்படி படத்தை முடித்துவிடுவோம் என்ற பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

    இதுதான் அவரது கடைசிப் படம் என்றும் அதன் பிறகு நீண்ட இடைவெளி எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இதனால், நாங்கள் ஓய்வு எடுக்காமல் படத்தை விரைவாக முடிக்க உழைத்தோம்” என்று கூறினார்.
    ×