என் மலர்
சினிமா செய்திகள்
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவில் வெளியீட்டில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அரண்மனை 3’ படத்தின் விமர்சனம்.
ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்துவிடுகிறார். அந்த குழந்தை தான் ராஷி கன்னா.
மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத். பள்ளிப் பருவத்தை எட்டிய ராஷி கன்னா, தனது அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி ஹாஸ்டலில் தங்குகிறார். படிப்பு முடிந்தபிறகே அரண்மனைக்கு திரும்புகிறார்.

இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் ஆர்யா. ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறுவிறுப்படைகிறது. அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதை அறியும் இவர்கள், இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்கு அரண்மனையில் தங்கி இருக்கின்றன? பேய்களை விரட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நாயகியாக வரும் ராஷி கன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அழகால் கவரும் ஆண்ட்ரியா, பின்னர் பேயாக வந்து மிரட்டவும் செய்கிறார்.

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி ஆகியோரின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஜமீன்தார் சம்பத், மந்திரவாதி வேலராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. முந்தைய பாகங்களை விட இப்படத்தை பிரம்மாண்டமாக கொடுத்து இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடித்தும் அசத்தி இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். பல இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக உருவாக்கி அதகளப்படுத்தி இருக்கிறார் சுந்தர்.சி.

சத்யா இசையில் பாடல்கள் சிறப்பாகவும் பின்னணி இசை மிரட்டலாகவும் அமைந்திருக்கிறது. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை.
மொத்தத்தில் ‘அரண்மனை 3’ பேய் வெற்றி.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
அமராவதி:
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதன்படி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதன்படி தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதன்படி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
முன்னதாக தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாநில அரசை 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்குமாறு வலியுறுத்தி வந்தனர். மேலும் தெலங்கானா மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட்டு வருவதால், ஆந்திராவில் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டன. தியேட்டர்கள் இன்று முதல் நூறு சதவிகித இருக்கைகளுடன் செயல்பட ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்ததற்கு அம்மாநில தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரகனி, ஜோதிகா, கலையரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘உடன் பிறப்பே’ படத்தின் விமர்சனம்.
சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, ஒரு பிரச்சனையில் ஜோதிகாவை அழைத்து சென்று விடுகிறார். இதனால், அண்ணன் சசிகுமாரும், தங்கை ஜோதிகாவும் பிரிந்து பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.
இறுதியில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? பிரிய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சசிகுமார். ஊர் மக்கள் பிரச்சனையில் தலையிடுவது, அடிதடி என்று கெத்தாகவும், தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் பாசமிகு அண்ணனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கையாக வரும் ஜோதிகா பல இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரது அறிமுக காட்சி சிறப்பு. அண்ணன் மீதான பாசத்தில் இவரது செயல்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.

ஆசிரியராக மனதில் பதிகிறார் சமுத்திரகனி. சாதுவாக இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வழக்கமான சமுத்திரகனியாக இல்லாமல் வித்தியாசமாக நடித்து கவர்ந்திருக்கிறார். சூரியின் காமெடி காட்சிகள் படத்திற்கு பலம். அதுபோல் கலையரசன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக வரும் சிஜா ரோஸ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். பல இடங்களில் சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் என்னப்பா இது என்று சலிப்படைய வைக்கிறது. ஒரு கட்டத்தில் மெகா சீரியல் போல் திரைக்கதை நகர்கிறது.

இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். கிராமத்து அழகு மாறாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் வேல்ராஜ்.
மொத்தத்தில் ‘உடன்பிறப்பே’ சீரியல்.
சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தன்னுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மணல் சிற்பம்
இந்நிலையில் ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதையொட்டி மெரீனா கடற்கரையில் ஜோதிகாவின் மணல் சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோதிகாவின் புகைப்படத்துடன் ‘உடன்பிறப்பே’ படத்தின் வெளியிட்டு தகவல் இடம்பெற்றுள்ளது. அதோடு வாழ்த்துக்கள் ‘ஜோதிகா 50’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.
தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.

நானே வருவேன் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு பிரபல நடிகர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது நடிகர் சிவகுமார், ஸ்ரீகாந்த்தின் நினைவுக்குறிப்புகளை பகிர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது அருமை நண்பர் ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர், மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும் போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார்.

ஸ்ரீகாந்துடன் சிவகுமார்
நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள், ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார்.
என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை, நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த், லீலாவதி, மீரா கணவர் ஷக் அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு காபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன். இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு பிரபாஸ் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜே ஹெக்டே தெலுங்கில் பிரபாசுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இன்று இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கு ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை 3 திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சி.சத்யா கூறியதாவது: “இது எனது 25-வது படம். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.

அரண்மனை 3 படத்தின் போஸ்டர்
ஆனால் இந்த லாக்டவுன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிட இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்கும்” என தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், உடன்பிறப்பே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.

உடன்பிறப்பே, எம்.ஜி.ஆர் மகன் படங்களின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘உடன்பிறப்பே’ படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீரா ஜாஸ்மின், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வருகிறார்.
மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின், கடந்த 2002-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த ‘சண்டைக் கோழி’ படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த அவர், 2014ம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார்.

மீரா ஜாஸ்மின்
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக நடிகை மீரா ஜாஸ்மின், தன் உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து இருக்கிறாராம்.
எஸ்.டி.புவி இயக்கத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஜயன்’ படத்தின் முன்னோட்டம்.
ஓகே சினிமாஸ் வழங்க சுப்பிரமணிய சக்கரை, செந்திலரசு சுந்தரம், தொல்காப்பிய புவியரசு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் விஜயன். இப்படத்தை எஸ்.டி.புவி இயக்கி இருக்கிறார். இவர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சங்கர், ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அலிமிர்ஷாக் இசையமைத்துள்ளார். ராஜேந்திரன், திருச்செல்வம் படத் தொகுப்பையும், ச.முருகானந்தம் இணை தயாரிப்பையும் கவனித்திருக்கிறார்கள்.
தலித் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
சமுத்திரகனி இயக்கத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘விநோதய சித்தம்’ படத்தின் விமர்சனம்.
நடிகர் தம்பி ராமையா, ஒரு கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி சிடு சிடுவென இருக்கிறார். அவரது 25-வது திருமண நாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். அந்த சமயத்தில் அவருக்கு அலுவலகத்தில் அவசர வேலை ஒன்று வருகிறது.
இதற்காக வெளியூர் செல்லும் அவர், வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது விமானத்தை தவறவிடுகிறார். இதையடுத்து காரில் சென்னைக்கு வரும் தம்பி ராமையா, விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.
அந்த நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் சமுத்திரகனி. அவர் தன்னை நேரம் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர் தம்பி ராமையாவிடம் ‘நீங்கள் இறந்துவிட்டதால் உங்களின் நேரம் முடிந்துவிட்டது, அதனால் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்’ என சொல்கிறார்.

தனக்கு முடிக்க வேண்டிய கடமைகள் இருக்கு, அதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என சமுத்திரகனியிடம் வேண்டுகோள் விடுக்கிறார் தம்பி ராமையா. இதையடுத்து அவருக்கு 90 நாட்கள் அவகாசம் தருகிறார் சமுத்திரகனி. அந்த 90 நாட்கள் என்ன நடந்தது? தம்பி ராமையா என்னவெல்லாம் செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமுத்திரகனி, தம்பி ராமையா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமாக புரட்சிகரமான வசனங்களை பேசும் சமுத்திரகனி, இந்த படத்தில் வாழ்க்கையின் நிதர்சனங்களை சொல்லி ஸ்கோர் செய்து இருக்கிறார். இவர்களை தவிர சஞ்சிதா ஷெட்டி, தீபக், ஷெர்லினா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

இப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது வசனம் தான். ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி ஆகிய மூவரும் வசனம் எழுதி உள்ளனர். திரைக்கதையையும் திறம்பட கையாண்டிருக்கிறார்கள். காமெடிகள் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. படத்தின் திரைக்கதைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பாடல்கள் இன்றி படத்தை எடுத்துள்ள விதம் அருமை.
படத்தில் பாடல்கள் இல்லாததால், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் ‘விநோதய சித்தம்’ காலத்தின் கண்ணோட்டம்.






