என் மலர்
சினிமா செய்திகள்
முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில், மாற்றங்களை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். ஞானவேல் இயக்கும் இந்தப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. ஓடிடி தளங்களில் அதிக படங்களை வெளியிடுவது ஏன் என்ற கேள்விக்கு சூர்யா பதில் கூறும்போது, ‘சரவணன் சூர்யாவாக மாறியது தியேட்டர்களில் என்னைப் பார்த்து ரசித்து ரசிகர்கள் கொடுத்த ஆசீர்வாதம் தான்.
கொரோனா நேரத்தில் மொத்தத் தொழிலாளர்களும் முடங்கிப்போய் விட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் போய் விட்டது. ஒரு படம் எடுத்தால் முந்நூறு தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு படங்களை எடுத்திருக்கிறேன். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆறாயிரம் குடும்பங்கள் பலனடைந்திருக்கிறார்கள். தாங்கள் எப்படி வாழ நினைத்தார்களோ அப்படி வாழ்ந்தார்கள்.

ஓடிடி என்பது நிரந்தரமாக இருக்கப்போகும் ஒன்று. மாற்றங்களை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது ஒரு தலைமுறையே மாறுகிறது. அந்த மாற்றத்தைப் பக்குவத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். தியேட்டர்களில் வரக்கூடிய கதைகள் படமாகிக் கொண்டிருக்கிறது. வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் கொண்டாட்டமாக இருக்கும்’ என்றார்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சினிமா பயணங்கள் பற்றிய முழு தொகுப்பு.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. மோசமான உடல்நிலையுடன் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
46 வயதான புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். இவரது திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ரசிகர்களின் மனதை வென்ற கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்து வந்த பாதை மற்றும் மறக்க முடியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.

சென்னையில் பிறந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா ராஜ்குமாருக்கு ஐந்தாவது குழந்தையாவார். இவரது உண்மையான சிறுவயது பெயர் லோஹித். புனித் ஆறு வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது. பத்து வயது வரை அவரது தந்தை, புனித் மற்றும் அவரது சகோதரி பூர்ணிமாவையும் திரைப்பட தொகுப்புகளுக்கு அழைத்து வருவார். இவரது மூத்த சகோதரர் தான் பிரபல நடிகர் சிவ ராஜ்குமார்.
புனித் ராஜ்குமார் 1999 ஆம் ஆண்டு அஸ்வினியை மணந்தார். இவர்களுக்கு வந்திதா மற்றும் த்ரிதி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தந்தையுடன் புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார் அவரது தந்தையின் திரைப்பட செட்டுகளுக்கு அடிக்கடி சென்றதால், அவர் நடிப்பை நன்கு கற்றுக் கொண்டார். 16 படங்களுக்கு மேல் பணியாற்றிய புனித் தொழில்துறையின் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராகவும் இருந்தார்.
புனித் ராஜ்குமார் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைப்படத்தில் தோன்றினார் என்பது பலருக்கும் தெரியாது. 1976 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமதா கனிகே' என்னும் திரைப்படத்தில் அவரது தந்தை ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஆனது.

மனைவி குழந்தைகளுடன் புனித் ராஜ்குமார்
ஷெர்லி எல் அரோராவின் 'என்ன அப்புறம் ராமன்?' நாவலை அடிப்படையாகக் கொண்டு என்.லட்சுமிநாராயண் இயக்கிய 'பேட்டடா ஹூவு' திரைப்படத்திற்காக புனித் ராஜ்குமார் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதைப் பெற்றார். அப்படத்தில் அப்பாவி ராமுவாக புனித் நடித்திருந்தார்.
புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல. இவர் பழம்பெரும் நடிகர் டாக்டர் ராஜ்குமாரைப் போலவே ஒரு நல்ல பாடகர். இவர் ஆறு வயதாக இருக்கும் போதே, பிரபல இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்த 1982ம் ஆண்டு வெளியான பாக்யவந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற "பானா தாரியல்லி சூர்யா" என்ற தனது முதல் பாடலைப் பதிவு செய்தார்.
புனித் ராஜ்குமார் 1982-83 இல் வெளியான 'சாலிசுவ மொதகலு' திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக தனது முதல் கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

புனித் ராஜ்குமார்
கன்னட திரையுலகில் அப்பு மற்றும் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இதில் அப்பு என்ற பெயரானது 'அப்பு' திரைப்படத்திற்கு பிறகு அவரது ரசிகர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் புனித் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அரசு, மிலானா, வம்சி, ஜாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். கடைசியாக இவரது நடிப்பில் யுவரத்னா என்ற திரைப்படம் வெளியானது. திரைப்படங்களுக்காக பல விருதுகளையும் இவர் குவித்துள்ளார்.
இவர் நடிகர் மட்டுமில்லாமல், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர் என்று பன்முகத் திறமைக்கொண்டு விளங்கி இருக்கிறார். இவ்வளவு சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் இடம் பெற்ற புனித் ராஜ்குமார் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும், இவரது நினைவுகள் என்றும் மக்கள் மனதில் அழியாது நிலைத்திருக்கும். இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதில், ‘மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனும் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. இவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு.

திரை நட்சத்திரமாக இருந்தபோதிலும் ஒரு தாழ்மையான மனிதராகவே இருந்தார். தலைவர் கலைஞரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறுவதற்காக எங்கள் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற புனித் அவர்களின் அன்பான செயல் இன்னும் என் இதயத்தில் உள்ளது.
கன்னட திரையுலகம் மிகச்சிறந்த மனிதரை இழந்துவிட்டது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் புனித் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரஜினிகாந்த், விரைவில் நலம் பெற்று வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்து இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்றும் ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவு
இதையடுத்து ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் 11.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனித் ராஜ்குமார் உயிரிழந்த சம்பவம் தெரிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கூடி குவிந்தவண்ணம் இருக்கிறார்கள்.

இதுபோன்ற பதட்டமான சூழ்நிலை காரணமாக பெங்களூர், மைசூர் உட்பட பல்வேறு நகரங்களிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பூட்டப்பட்டு வருகின்றன. அலுவலகம் சென்றவர்கள் அவசரமாக வீடுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில், மருத்துவமனை ரஜினியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

புனித் ராஜ்குமார்
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், சாந்தனு, மனோபாலா, பிரியா ஆனந்த், தனஞ்செயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி மற்றும் நடிகையாக இருக்கும் ஜோதிகா இருவரும் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்கள்.
திரையுலகில் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடிகைகள் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதில் பானுமதி, சாவித்ரி, விஜய் நிர்மலா ஆகியோர் ஒரு திரைப்பட இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள்.


இப்போது உள்ள நடிகர்களில் சிலர்க்கு மட்டும்தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதில் கார்த்தி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தோடு இருப்பவர். இவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதோடு ஜோதிகாவும் தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும் இவரும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படங்களை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் குவிந்து வருகின்றனர்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வரும் அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று, புனித் ராஜ்குமார் உடல்நிலை குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்தார்.

புனித் ராஜ்குமார்
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் குவிந்து வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகவா லாரன்ஸ், தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2-ம் பாகம் போன்ற படங்கள் உள்ளன. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகவா லாரன்ஸ், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அவரின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் லாரன்ஸும் மாஸான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதிரடி ஆக்ஷன், காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகள் நிறைந்த படமாக இது உருவாக உள்ளதாம்.

கே.எஸ்.ரவிக்குமார், ராகவா லாரன்ஸ், எல்வின்
இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.ஆர்.என்டர்டெயிண்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ள கே.எஸ்.ரவிகுமார், ராகவா லாரன்ஸ் உடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
இதனிடையே, அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.






