என் மலர்
சினிமா செய்திகள்
- விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான்
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

டேனியல் கால்டகிரோன் - பா.இரஞ்சித்
இந்நிலையில் தங்கலான் படத்தில் நடித்து வரும் நடிகர் டேனியல் கால்டகிரோன் படப்பிடிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, உண்மையில் ஒரு தகுதியான இடைவெளி! இந்த அற்புதமான நாட்டை, இங்குள்ள அனைத்து அழகான முகங்களையும், எனது அற்புதமான சக ஊழியர்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக தலைசிறந்த இயக்குனரையும் விட்டு விடைபெற போகிறேன். ஒரு மாதத்தில் சந்திப்போம் என்று பதிவிட்டிருக்கிறார்.
இவரின் இந்த பதிவிற்கு இயக்குனர் பா.இரஞ்சித் பதிவிட்டிருப்பது, இந்த படத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை முற்றிலும் மதிக்கிறேன், விரைவில் சந்திப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
Absolutely respect your dedication and hard work towards this flim,see you soon!?@DanCaltagirone https://t.co/7AU6cLCOx6
— pa.ranjith (@beemji) March 25, 2023
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
- இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

பொன்னியின் செல்வன் - 2 டிரைலர் அறிவிப்பு
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் - 2 இசை வெளியீட்டு அறிவிப்பு
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மார்ச் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை மற்றும் டிரைலர் நிகழ்ச்சி எங்கு நடக்கப்போகிறது என்பது குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The #MozartOfMadras is coming to transport us back to the 10th century with the music of #PS2!
— Lyca Productions (@LycaProductions) March 25, 2023
A spell-binding musical storm is on its way!
29th March-Mark your calendars!
#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @Tipsofficial @primevideoIN pic.twitter.com/euRDadBmAo
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.
- இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை நிகழ்த்தியது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லவ் டுடே
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இந்தி ரீமேக் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் இந்தி ரீமேக்கை பாந்தோம் ஃபிலிம்ஸ் (Phantom Films) உடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

குஷி கபூர் - ஜுனைத்
இந்நிலையில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான யோகிபாபு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
- அங்கு அவர் தாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் புதிய படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் யோகிபாபு திடீரென திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அவர் கோவிலில் உள்ள மூலவர், சுவாமி சண்முகர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

நடிகர் யோகி பாபுவை கண்டதும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். கோவில் சண்முக விலாஸ் மண்டபம் முதல் விருந்தினர் மாளிகை வரையிலும் நடிகர் யோகிபாபு செல்லும் வரை அவரை பின்தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இடையில் கோவில் வளாகத்தில் நின்ற திருநங்கைகளிடத்திலும், யாசகம் பெறுபவர்களிடமும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.
- சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பத்து தல
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பத்து தல போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பத்து தல' படத்தில் இடம்பெற்றுள்ள 'ராவடி' படத்தின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சாயிஷா ஆர்யா நடனமாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- பாலிவுட் நடிகை பூஜா பட் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- இதனால் தனிமைப்படுத்திக்கொண்ட அவர் அனைவரையும் முககவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா நோயின் தாக்கம் இன்னும் மறையாத நிலையில் மீண்டும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளருமான பூஜாபட்டிற்குப் பரிசோதனை நடத்தியதில் அவருக்கு கொரோனா நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

பூஜா பட்
இதனால் தனிமைப்படுத்திக்கொண்ட அவர் அனைவரையும் முககவசம் அணியுமாறும், கொரோனா இன்னும் நாட்டை விட்டு மறையவில்லை அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொண்டி ருந்தாலும் நோய் உங்களைத் தாக்கலாம். அதனால் எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டதோடு பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பும் பழைய வீடியோவை பகிர்ந்திருக்கிறார் பூஜா பட்.
- இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'VNRT trio'.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'VNRT trio'. இந்த படத்தில் நிதின், ராஷ்மிகா மந்தனா, ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பை சுவாரஸ்யமான வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மூலம் இந்த படம் பொழுதுபோக்கு மற்றும் சாகம் நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். மேலும், இப்படத்தின் துவக்க விழாவின் முதல் காட்சிக்கு நடிகர் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இயக்குனர் பாபி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார்.

கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார். ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா முவரின் கூட்டணியில் வெளியான 'பீஷ்மா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை.
- இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.
படத்தில் நடிப்பது குறித்து விஜயலட்சுமி கூறியதாவது:-"சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்" என்று கூறினார்.
- பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங்.
- இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங் தம்பதியிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
இதையடுத்து இருவரும் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அதில், இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால் தீபிகா, ரன்வீரின் கையை பிடிக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல் அவரின் முகத்தையும் பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
இதனால் கோபமான ரன்வீர் சிங் முன்னால் வேகமாக நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் இடையே எதாவது பிரச்சினையா..? இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்களா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர்.
- அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர். விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து அவர்கள் கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்தனர்.
இந்த நிலையில் பொம்மன், பெள்ளி ஆகியோர் இந்த விமானத்தில் வருவது, விமானிக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் என்ன சொல்கிறார் என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர்.

பொம்மன் -பெள்ளி
தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்தின் முதல் இருக்கையில் இருந்து எழுந்தனர். உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர்.
இதை பார்த்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு அவர்களுக்கு கை கூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர். அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். நிஜ ஹீரோக்கள். இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என தெரிவித்தார். மேலும் கோவை வரும் வரை பொம்மன், பெள்ளியிடம் பயணிகள் அனைவரும் பேசி கொண்டு வந்தனர். கோவையில் விமானம் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வரிசையாக நின்று கொண்டனர்.
பொம்மன், பெள்ளி விமானத்தை விட்டு இறங்கி வரும் போது வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து அதனை தங்கள் சமூக வலைதளங்களில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு என தலைப்பிட்டு பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். பின்னர் பொம்மன், பெள்ளி ஆகியோர் கோவையில் இருந்து கார் மூலமாக நீலகிரி புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோவை சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவும் பகிர்ந்துள்ளார்.

பொம்மன் -பெள்ளி தம்பதியை பாராட்டிய விமான பயணிகள்
இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பொம்மன், பெள்ளி பயணித்த வீடியோவை பகிர்ந்து, அதில் எங்கள் விமானத்தில் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த கலைஞர்கள் பயணித்தது எங்களுக்கு பெருமையான தருணமாகும் என தெரிவித்துள்ளது.
நாங்கள் மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு நேற்று ஊர் திரும்புவதற்காக விமானத்தில் பயணித்தோம். அப்போது எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை வெகுவாக பாராட்டினர். இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காட்டுக்குள் இருந்த எங்களுக்கு அங்கிருந்து வெளியில் வந்து நகர பகுதியை பார்வையிட்டதும், அங்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் மிகவும் அளப்பரியது.
எங்களுக்கு கிடைத்த இந்த பெருமை எல்லாம் குட்டி யானைகளான ரகு, பொம்மியைவே சாரும். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளோம். எங்களை எங்கு பார்த்தாலும் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டு தெரிவிப்பதோடு எங்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்தாலும் அவர்கள் 2 பேரும் எவ்வித கர்வமும் இல்லாமலும், அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சர்வ சாதாரணமாக அதனை கடந்து செல்கின்றனர். அத்துடன் மீண்டும் தங்கள் பணியை தொடங்கி விட்டனர். ஆம் அவர்கள் 2 பேருக்கும் தற்போது வனத்துறையினர் வேறு ஒரு குட்டி யானையை பராமரிக்கும் பணியை கொடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது. அந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தும் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குட்டி யானையை பராமரிக்கும் பணி ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு ள்ளது. அவர்கள் அந்த யானையை தங்கள் பிள்ளையை போல் பாவித்து பராமரித்து வளர்க்க தொடங்கி உள்ளனர்.
- அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
- இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஏ.வி.எம்.நிறுவனம் அறிக்கை
இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம் அஜித் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அஜித் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தன் தந்தையின் மறைவை சமாளிக்கும் வலிமையை பெற பிரார்த்திக்கிறோம். அஜித்தின் தந்தை ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Our deepest condolences to #Ajith Sir & his family. We at AVM Productions pray that they find the strength to come to terms with the passing away of their father. May his soul rest in peace. pic.twitter.com/E8pmqgVV3G
— AVM Productions (@avmproductions) March 25, 2023
- பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- இவரின் உடல்நிலை குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர். தமிழில் இவர் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

பாம்பே ஜெயஸ்ரீ லண்டனிற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதென அவரது குடும்பத்தார் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், "பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






