என் மலர்tooltip icon

    கார்

    ஹோன்டா நிறுவனம் தனது சிவிக் கார் மாடலுக்கு ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்திருக்கிறது.



    ஹோன்டா நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்த சிவிக் கார் முந்தைய வெர்ஷன்களை போன்ற வரவேற்பை பெறவில்லை. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.

    அறிமுகமானது முதல் இதுவரை ஹோன்டா நிறுவனம் 3459 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. இது இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். இந்தியாவில் ஹோன்டா சிவிக் துவக்க விலை ரூ. 17.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 22.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விற்பனை சரிவை காரணம் காட்டி ஹோன்டா நிறுவனம் சிவிக் காரை வாங்குவோருக்கு ரூ. 2.5 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. ஹோன்டா சிவிக் பேஸ் பெட்ரோல் V (ரூ. 17.94 லட்சம்) காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதுதவிர சிவிக் VX மற்றும் ZX  வேரியண்ட்கள் (முறையே ரூ. 19.45 லட்சம் மற்றும் ரூ. 21.25 லட்சம்) வாங்குவோருக்கு ரூ. 25,000 வரை எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. டீசல் சிவிக் VX மற்றும் ZX  (முறையே ரூ. 20.55 லட்சம் மற்றும் ரூ. 22.35 லட்சம்) கார் வாங்குவோருக்குரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    புதிய ஹோன்டா சிவிக் கார் 141 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.8 லிட்டர் பெட்ரோல்-சிவிடி என்ஜின், 120 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.6 லிட்டர் டீசல் மேனுவல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய சி கிளாஸ் கார் அதிநவீன மேம்பட்ட சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.



    சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றான ‘சி-கிளாஸ்’ கார்களை மேம்படுத்தி பல்வேறு புதிய வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது. 

    முன்னதாக சி-கிளாஸ் மாடலை மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இதே காரில் டீசலில் இயங்கும் மாடல்களும் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.49.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.1 லட்சம் வரை விலை அதிகமாகும்.

    புதிய சி கிளாஸ் மாடலின் முன்புற மற்றும் பின்புற பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 18 இன்ச் ஸ்போக் அலாய் சக்கரம் உள்ளது. வயர்லெஸ் போன் சார்ஜர், இனிய இசையை வழங்க 225 வாட் ஆம்ப்ளிபயருடன் 9 ஸ்பீக்கர்கள் உள்ளன. அதேசமயம் 12 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. 

    மெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ்

    மெர்சிடிஸ் சி கிளாஸ் காரில் சி300.டி. மாடல் கார் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பி.எஸ்6. விதி சோதனைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 245 ஹெச்.பி. திறனும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியைக் கொண்டது. 

    புதிய மெர்சிடிஸ் கார் பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ், ஆடி ஏ4, ஜாகுவார் எக்ஸ்.இ. ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    டொயோட்டா இந்தியா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் ஜி-ஆப்ஷனல் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 9.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் ஜி-ஆப்ஷனல் எனும் புதிய வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. இது முந்தைய வேரியண்ட்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    முந்தைய ஆப்ஷனல் மாடல்களை போன்றே புதிய ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில் மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் சி.வி.டி. ஆப்ஷன் விலை ரூ. 10.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டொயோட்டா யாரிஸ்

    புதிய யாரிஸ் ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், குரோம் கிரில், ORVMகள், 15-இன்ச் சில்வர் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் டூயல்-டோன் கேபின், வாட்டர்ஃபால் டிசைன் கொண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 4.2 இன்ச் TFT கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, கூல்டு கிளவ்-பாக்ஸ், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஏர்-வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், 3 ஏர்பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடலிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு சி.வி.டி.-ஐ ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.


    ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

    இந்திய ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் வாகன உற்பத்தியை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் விற்பனையை அதிகப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன.

    அசோக் லேலண்ட்

    இந்நிலையில், கனரக வாகனங்களை உற்பத்தி செய்து வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

    பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் டொயோட்டோ, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்களது உற்பத்தியை நிறுத்தின. அங்கு பணியாற்றுபவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் புதிய கார்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தத் தொடங்கியுள்ளன.
    எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் நேரடி இணைய வசதியை பெற்ற கார் என்ற பெருமையுடன்  யாரும் எதிர்பாராத விதமாக மிக சவாலான ஆரம்ப விலையிலும் களமிறக்கப்பட்டது.

    இதனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை இந்தியர்கள் வேகமாக முன்பதிவு செய்தனர். எதிர்பாராத அளவுக்கு முன்பதிவு குவிந்தது. கிட்டத்தட்ட 28,000 பேர் முன்பதிவு செய்த நிலையில், ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை திடீரென எம்ஜி மோட்டார் நிறுவனம் நிறுத்தியது.

    மாதத்திற்கு 2,000 கார்கள் மட்டுமே என்ற உற்பத்தி இலக்குடன் வர்த்தகத்தை துவங்கியதால், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுவே முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணம்.

    குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் இறங்கியுள்ளது. இரண்டாவது ஷிஃப்டிலும் கார் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், முன்பதிவை மீண்டும் துவங்குவதற்கான திட்டம் குறித்து எம்ஜி மோட்டார் அதிகாரி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

    எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார்


    அதில்,"ஹெக்டர் டெலிவிரி குறித்த முறையான செயல்திட்டத்தை வகுக்கும் வரை புக்கிங்கை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை. முதலில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

    ஹெக்டர் உற்பத்தியை அதிகரிக்கும்போது மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கான திட்டம் உள்ளது. எனது கூற்றுப்படி, அடுத்த மாதம் முன்பதிவு மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.

    தற்போது 16,000 பேர் இதுபோன்ற காத்திருப்போர் பட்டியலில் பெயர் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் இருப்பதால், பலர் அண்மையில் வந்த கியா செல்டோஸ் காரின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

    இதனால், தகுதியுடைய வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாமல், காத்திருப்போர் பட்டியலில் பெயர் சேர்த்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. இந்த சாதனம் நேரடி இணைய வசதியையும் அளிக்கிறது.

    ரூ.12.18 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் மிகச் சிறப்பான இடவசதியுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு புக்கிங் செய்து வருகின்றனர்.
    பொருளாதார மந்த நிலையின் காரணமாக டொயோட்டா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
    ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ, தென்கொரியாவின் ஹூண்டாய் ஆகியவை சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தியுள்ளன. அங்கு பணியாற்றுபவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    கார் உற்பத்தி தொழிற்சாலை

    பொருளாதார மந்தநிலை நீடிக்கும் நிலையில் டொயோட்டோ, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்களது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன. அங்கு பணியாற்றுபவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் புதிய கார்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தத் தொடங்கியுள்ளன.

    இந்திய ஆட்டோ மொபைல் துறையை பொருத்தவரை தற்போதுவரை 3.5 லட்சம்பேர் பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயணிகள் வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்திருக்கிறது.

    இதனால், ஆட்டோ மொபைல் துறையில் பணியாற்றுபவர்கள் வேலை இழந்து வருகின்றனர். இந்த நிலை இன்னும் சில காலம் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிரபல ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ, தென்கொரிய நிறுவனம் ஹூண்டாய் ஆகியவை சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன.

    டொயோட்டோ தனது பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளது. கார்களுக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும், விற்பனையாகாமல் 7 ஆயிரம் கார்கள் தேங்கி நிற்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

    பண்டிகை நாட்களில் கார்களின் விற்பனை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டார்க் எடிசன் வேரியன்டை ரூ. 16.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
    எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களின் வரவால், டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த நெருக்கடியை போக்கும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இரட்டை வண்ண தேர்வு மற்றும் சன்ரூப் வசதிகளை அண்மையில் அறிமுகம் செய்தது.

    இதையடுத்து, அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஹாரியர் எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலானது விசேஷமான கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் அறிமுகமானது. பண்டிகை காலத்திற்கு முன்னதாக வர இருக்கும் இந்த புதிய மாடலை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில், இந்த புதிய ஹாரியர் டார்க் எடிசன் மாடலுக்கு ரூ.16.76 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே விலையில்தான் டாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்இசட் டியூவல் டோன் என்ற டாப் வேரியண்ட் விற்பனையில் உள்ளது.

    ஹாரியர் டார்க் எடிசன் மாடல் கார்

    டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்படுகிறது. இதில், 17 அங்குல கருப்பு வண்ணத்திலான அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கிட் பிளேட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பேட்ஜ் மற்றும் கைப்பிடிகள் மட்டுமே க்ரோம் பூச்சுடன் இடம்பெற்றுள்ளன.

    தற்போது விற்பனையில் உள்ள மாடலில் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்படுகிறது. ஆனால், டார்க் எடிசனில் கருப்பு வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும், மர அலங்கார வேலைப்பாடுகளுடன் மிகவும் பிரிமீயமாக வர இருக்கிறது. மேலும், டாப் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கிடைக்கும்.

    இந்த காரில் பிரத்யேக கருப்பு வண்ணத்தை தவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. அப்போது, இந்த எஞ்சின் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றதாக மாற இருக்கிறது.

    இந்த டார்க் எடிசன் தவிர்த்து, காலிஸ்ட்டோ காப்பர், தெர்மிஸ்ட்டோ கோல்டு, ஏரியல் சில்வர், டெலிஸ்டோ க்ரே, ஆர்கஸ் ஒயிட் மற்றும் இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.16.76 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஹுண்டாய் மோட்டாரின் இந்தியா நிறுவனம் தங்களது கார்களின் விலையை ரூ.9,200 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
    இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது மிக பெரிய மாற்றத்தை காண உள்ளது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதையடுத்து பல கார் நிறுவனங்கள் அதற்கு ஏற்ப தங்களது கார்களை மாற்றுகின்றன.

    இந்த மாற்றங்களுக்கு ஏற்ப கார்களை அமைப்பதால் கார் நிறுவனங்கள் அதிக செலவு செய்து வருகிறது. இதனை ஈடுசெய்ய கார்களின் விலைகளை ஏற்ற கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தங்களது கார்களின் விலையை 9,200 ரூபாய் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஹுண்டாய் கார்

    இந்த விலை ஏற்றம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்  அறிமுகம் செய்யப்பட்ட கார்களுக்கு BNVSAP நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபர் 2019 முதல் அனைத்து மாடல்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுகிறது. இரண்டு ஏர் பேக், ஸ்பிட் அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், பின்பக்க பார்க்கிங் சென்சர் முதலியானவை கட்டாயமாக்கப்படுகிறது.

    ஹூண்டாய் வென்யூ மற்றும் சாண்ட்ரோ கார்கள் கே1 பிளாட்பார்மில் தயாராகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ ஹாட்ஸ்பேக் காரானது புது கே1 பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டது. இது முந்தைய பிஏ பிளாட்பார்மை விட 63 சதவிகிதம் பலமானதாகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோனா எலக்ட்ரிக் மற்றும் வென்யூ கார்களுக்கு இந்த விலை ஏற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.  

    கடந்த ஜூலை மாதத்தில், டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் 3 மாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வேகன் ஆர் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
    ஜூலை மாதத்தில், டாப் 10 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 21 சதவீதம் குறைந்து 1.07 லட்சம் கார்களாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1.35 லட்சம் கார்களாக இருந்தது.

    மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அது 14,339-ஆக இருந்தது. இதன்படி டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மாருதி செடன் டிசையர் கார்கள் விற்பனை (25,647-ல் இருந்து) 12,923 கார்களாக குறைந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மாருதி சுவிப்ட் கார்கள் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தக் கார் விற்பனை 12,677-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இதன் விற்பனை 19,993 கார்களாக இருந்தது.

    ஹூண்டாய் வென்யூ கார்கள்

    மாருதி ஆல்டோ கார்கள் விற்பனை 11,577-ஆக இருக்கிறது. இது நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 23,371-ஆக இருந்தது. மாருதியின் பேலினோ கார்கள் 5-வது இடத்தில் உள்ளது. இந்தக் கார் விற்பனை (17,960-ல் இருந்து) 10,482-ஆக குறைந்துள்ளது. மாருதி ஈகோ கார்கள் விற்பனை 9,814-ஆக இருக்கிறது. இந்த பட்டியலில் இது ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ கார்கள் விற்பனை 9,585-ஆக உள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாருதி எர்டிகா விற்பனை (4,764-ல் இருந்து) 9,222-ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்தக் கார்கள் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் (9-வது இடம்) விற்பனை 9,012 கார்களாக குறைந்து இருக்கிறது. மாருதியின் கிரெட்டா கார்கள் விற்பனை 6,585-ஆக குறைந்துள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 10-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இதன் விற்பனை 10,423 கார்களாக இருந்தது.

    ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி.கார், டிரைபர் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    ரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. சர்வதேச சந்தையில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிரைபர் காரில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன. புதிய டிரைபர் கார் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் கார் இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் என அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. புதிய டிரைபர் காரில் பம்ப்பர் சற்று தடிமனாகவும், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்டவை அதிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் பார்க்க பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங், பிளேர்டு வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டெயில் லேம்ப்கள், சிக்னல் இன்டிகேட்டர்கள், ரிவர்ஸ் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன.

    ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல் டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரெனால்ட் டிரைபர் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 4 வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. இதன் விற்பனை விலை ரூ.4.95 லட்சம் முதல் ரூ.6.49 லட்சம் வரை ஆகும். இந்த காரின் வேரியண்டுகளின் விற்பனை விலை பின்வருமாறு:

    RXE -ரூ.4.95 லட்சம்

    RXL -ரூ.5.49 லட்சம்

    RXT -ரூ.5.99 லட்சம்

    RXZ -ரூ.6.49 லட்சம்

    டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.
    கார் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சொகுசு மற்றும் பிரீமியம் கார்களை ‘லெக்சஸ்’ என்ற பெயரில் தயாரிக்கிறது. லெக்சஸ் தனி நிறுவனமாகவே செயல்படுகிறது. இந்நிறுவனம் தற்போது பிரீமியம் வரிசையில் ஹைபிரிட் காரை தயாரித்து வருகிறது.

    இது 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 300 ஹெச்.பி. திறன் 348 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை வெளிப்படுத்த கூடியது. இதன் மொத்த திறன் 354 ஹெச்.பி. ஆகும். இது 4 கியர்களைக் கொண்டது. இந்த காரை ஸ்டார்ட் செய்த 4.7 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும். இது மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. இது 10 கியர்களைக் கொண்டது.

    லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார்

    இந்தக் காரின் வெளிப்புற மற்றும் உள்புற தோற்றங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. இதில் 10.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 10 கோணங்களில் ஏற்ற இறக்கமாக டிரைவர் சீட்டை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1.5 கோடியாக இருக்கும் என தெரிகிறது.

    இந்த கார் ஜாகுவார் எப் டைப் 2.0 (விலை ரூ.90 லட்சம் முதல் ரூ.94 லட்சம் வரை), ஆடி ஆர்.எஸ். கூபே (ரூ.1.12 கோடி), பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கலாம். இதில் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் ரகக் கார்கள் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
    ரெனால்ட் நிறுவனத்தின் பிரபலமான க்விட் ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய க்விட் கார் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்றே பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கும். க்விட் கே.இசட்.இ. போன்ற ஹெட்லேம்ப் செட்டப் புதிய க்விட் காரிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் கிரில் அருகில் பொருத்தப்படலாம் என்றும், ஹெட்லேம்ப் பம்ப்பரின் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் டெயில் லேம்ப்களிலும் எல்.இ.டி.க்கள் வழங்கப்பட்டு, முன்புறம் மற்றும் பின்பக்கங்களில் புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    க்விட் கே.இசட்.இ.

    புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 800சிசி என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் 54 ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.0 லிட்டர் என்ஜின் 65 ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. முதற்கட்டமாக ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டு, அதன்பின் பி.எஸ்.6 என்ஜின்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு புதிய க்விட் மாடலில் டூயல் ஏர்பேக் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது அக்டோபர் 2019 முதல் அமலாக இருக்கும் கிராஷ் டெஸ்ட் விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் க்விட் மாடலில் ஒற்றை ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் புதிய ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
    ×