என் மலர்
கார்
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2019 நவம்பர் மாத அடிப்படையில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மாருதி சுவிப்ட் முதலிடத்தில் நீடிக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் நவம்பர் மாதத்தில் 19,314 சுவிப்ட் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மொத்தம் 22,191 யூனிட்களை மாருதி விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தில் நீடிக்கிறது.
மாருதி பலேனோ விற்பனை 3 சதவீதம் குறைந்து (18,649-ல் இருந்து) 18,047 கார்களாக குறைந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மாருதி செடன் டிசையர் கார் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தக் கார் விற்பனை 17,659-ஆக குறைந்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 21,037 கார்களாக இருந்தது.

மாருதி ஆல்டோ விற்பனை 15,086-ஆக குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 18,643-ஆக இருந்தது. இது நான்காவது இடத்தில் நீடிக்கிறது. மாருதி வேகன் ஆர் 6-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தக் கார் விற்பனை (11,311-ல் இருந்து) 14,650-ஆக உயர்ந்துள்ளது.
கியா செல்டாஸ் கார் விற்பனை 14,005-ஆக இருக்கிறது. இந்த கார் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மாருதியின் விடாரா பிரெஸ்ஸா விற்பனை 12,033-ஆக இருக்கிறது. இந்த கார் ஏழாவது இடத்திற்கு சென்று இருக்கிறது. மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ விற்பனை 11,220-ஆக உள்ளது. இந்த கார் 8-வது இடத்திற்கு வந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் விற்பனை 1 சதவீதம் சரிவடைந்து 10,446-ஆக உள்ளது. இது டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 7-வது இடத்தில் இருந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்டு ஐ10 கார்கள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து (9,252-ல் இருந்து) 10,186-ஆக உயர்ந்து இருக்கிறது. இந்தக் கார் 10 இடத்தில் இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி ஒன்பது மாதங்களுக்கு பின் அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நவம்பர் மாதத்தில் தனது வாகனங்கள் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது.
விற்பனை குறையத் தொடங்கிய நிலையில், நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் மாருதி சுசுகி நிறுவனம், இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உள்பட தனது வாகனங்கள் உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து 1,47,669 வாகனங்களை மட்டுமே தயாரித்தது. மே மாதத்தில் உற்பத்தியை சுமார் 18 சதவீதம் குறைத்து 1,51,188 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்தது.
ஜூன் மாதத்தில் அதன் உற்பத்தி 15.6 சதவீதம் சரிந்து 1,11,917-வாகனங்களாக இருந்தது. ஜூலை மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1.33 லட்சம் வாகனங்களை தயாரித்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் அது 25 சதவீத சரிவாக இருந்தது. ஆகஸ்டு மாதத்தில் அதன் உற்பத்தி 34 சதவீத சரிவுடன் 1,11,370-ஆக இருந்தது.

செப்டம்பர் மாதத்தில் 1,32,199 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,60,219-ஆக இருந்தது. அந்த வகையில் உற்பத்தி 17 சதவீதம் சரிவடைந்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் உற்பத்தி சுமார் 21 சதவீதம் குறைந்து 1,19,337 வாகனங்களாக இருந்தது.
மாருதி சுசுகியின் வாகனங்கள் உற்பத்தி 9 மாதங்கள் தொடர் சரிவுக்குப் பின் நவம்பர் மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த மாதத்தில் இந்நிறுவனம் 1,41,834 வாகனங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,35,946-ஆக இருந்தது. ஆக, உற்பத்தி 4.33 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தி்ன் மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 கோடி வரையிலான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபோர்டு கார் நிறுவனம் சார்பில் மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனையின் அங்கமாக கார்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ.5 கோடி வரை பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. மிட்நைட் சர்ப்ரைஸ் திட்டத்தின் படி ரூ.5 கோடி மதிப்புள்ள மேம்பட்ட வசதி, தவிர்க்கமுடியாத ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இந்த சலுகை அறிவிப்பையொட்டி ஃபோர்டு கார் விற்பனை மையங்கள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கார்களை இயக்கி பார்த்தல், முன்பதிவு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

சலுகை அறிவிக்கப்பட்ட நாட்களில் ஃபோர்டு காரை முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசு வவுச்சர் கிடைக்கும். இந்த மாதத்துக்குள் கார்களை டெலிவரி செய்யும்போது உறுதியான பரிசுகளையும் அவர்கள் பெறுவார்கள். மிட்நைட் சர்ப்ரைஸ் சலுகை திட்டத்தின்போது செய்யப்பட்ட கார் முன்பதிவுகளுக்கான பரிசுகளில் பிரீமியம் வீட்டு உபகரணங்கள், இசை அமைப்பு, சர்வதேச அல்லது உள்நாட்டு விடுமுறை வவுச்சர்கள் மற்றும் தங்க நாணயம் ஆகியவை அடங்கும்.
ஃபோர்டு பிகோ, ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோர்டு ஃபிரீஸ்டைல், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகியவற்றை உள்ளடக்கிய போர்டின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை விரைவில் மாற்றம் செய்ய இருக்கிறது. முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை ஜனவரி 1, 2020 முதல் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செலவீனங்கள் உயர்ந்து இருப்பதால் கார் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை மாருதி நிறுவன கார்களின் மாடல்களுக்கு ஏற்ப வேறுபடும். விலை உயர்வு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவன வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு விலை உயர்வுக்கு பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கூறப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் வாகன விலை உயர்வு ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையான ஒன்றாக மாறிவருகிறது.
தற்சமயம் மாருதி சுசுகி இந்தியாவின் வாகனங்கள் விலை ஆல்டோ மாடல் ரூ. 2.88 லட்சத்தில் துவங்குகிறது. இந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான எக்ஸ்.எல்.6 விலை ரூ. 9.79 லட்சத்தில் துவங்கி 11.46 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2019 நவம்பர் விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் 2019 நவம்பர் மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி டொயோட்டா நிறுவனம் நவம்பர் 2019-ல் மொத்தம் 9,241 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆண்டு நவம்பர் மாதத்தில் டொய்ட்டா நிறுவனம் 11,390 கார்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு விற்பனை 19 சதவீதம் குறைந்துள்ளது.

அதாவது 10,721 கார்களில் இருந்து 8,312 கார்களை இந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்து இருப்பதால் உள்நாட்டில் இதன் விற்பனை 22 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் டொயோட்டா நிறுவனம் 929 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 669 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது.
அந்த வகையில் டொயோட்டாவின் ஏற்றுமதி 39 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்சமயம் வாகன விற்பனை சரிவை சந்தித்து இருந்தாலும், வரும் மாதங்களில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படலாம் என டொயோட்டா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பி.எஸ்.6 எக்ஸ்.யு.வி.300 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.300 இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 கார் ஆகும்.
பி.எஸ். 6 எக்ஸ்.யு.வி.300 விலை ரூ. 8.3 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 11.84 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.300 பெட்ரோல் என்ஜினை மட்டுமே பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்துள்ளது. இதன் டீசல் மாடல் பி.எஸ்.4 ரகத்திலேயே இருக்கிறது. மற்ற மாடல்களை பி.எஸ். 6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் மஹிந்திரை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ரக பெட்ரோல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர எக்ஸ்.யு.வி.300 கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் 2019 நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 50.34 சதவீதம் சரிந்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 2019 நவம்பர் மாதத்தில் 50.34 சதவீதம் சரிந்துள்ளது. உள்நாட்டில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 6,459 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 50 சதவீத சரிவாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 13,006 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2018-19-ஆம் நிதி ஆண்டில், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,83,787-ஆக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 1,70,026-ஆக இருந்தது.

ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் சிட்டி, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிவிக் மற்றும் சி.ஆர்.-வி போன்ற வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை 3.2 சதவீதம் சரிந்துள்ளது. 2019 நவம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 1,41,400 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பர் 2019-ல் இந்நிறுவனம் மொத்தம் 44,600 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
நவம்பர் 2019-ல் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தம் 105 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது நவம்பர் 2018 உடன் ஒப்பிடும் போது 80.66 சதவீதம் சரிவாகும். நவம்பர் 2018-ல் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மொத்தம் 534 யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்தது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் இரண்டு கோடி கார்களை விநியோகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய சந்தையில் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை மொத்தம் இரண்டு கோடி வாகனங்களை இந்தியாவில் விநியோகம் செய்துள்ளது.
இரண்டு கோடி யூனிட்கள் என்பது ஒட்டுமொத்த விற்பனை விவரம் என்றபோதும், இத்தகைய மைல்கல்லை இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனமும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை மாருதி சுசுகி நிறுவனம் 37 ஆண்டுகளில் எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் கார் டிசம்பர் 1983 ஆண்டில் விற்பனை செய்யப்பட்டது.

இந்திய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை எட்ட 27 ஆண்டுகளை மாருதி சுசுகி எடுத்துக் கொண்டது. பின் அடுத்த ஒரு கோடி யூனிட்களை கடக்க மாருதி சுசுகி நிறுவனம் வெறும் எட்டு ஆண்டுகளையே எடுத்துக் கொண்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி 800 மாடலின் மூலம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இந்த கார் இன்றுவரை அதிக பிரபல மாடலாக விளங்கி வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் சிறிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் மாருதி நிறுவனம் சுமார் 50 எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தையில் சிறப்பான எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அட்ரோஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஜனவரி 2020 வாக்கில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு டிசம்பர் 4-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் அறிவிப்பு புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய அல்ட்ரோஸ் காரினை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் முன்பதிவு செய்யலாம்.



டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் காரின் விளம்பர நோட்டீஸ் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என லீக் ஆன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.
புகைப்படம் நன்றி: Team BHP
ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா கார் இந்தியாவில் டிசம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்குகிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் ஏற்கனவே விற்பனையாகும் எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது.
புதிய ஆரா கார் ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் வெர்னா மாடல்களை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் மூன்று-பெட்டி வடிவமைப்பு, ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர காரின் இதர வடிவமைப்பு அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டீசர் மற்றும் 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜக்ஷன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஹூண்டாய் ஆரா கார் மாருதி சுசுகி டிசையர், ஃபோர்டு ஆஸ்பையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செஸ்டோஸ் எஸ்.யு.வி. காரின் விலையை விரைவில் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. காரை ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. கியா செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கியா செல்டோஸ் காரின் விலையை ஜனவரி 1, 2020 முதல் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு வேரியணட்டிற்கு ஏற்ப மாறுபடும் என தெரிகிறது.
ஜனவரி 1, 2020 முதல் செல்டோஸ் காரை பெறும் வாடிக்கையாளர்கள் காருக்கு கூடுதல் கட்டணம் வேண்டியிருக்கும் என்றும் டிசம்பர் 31, 2019 வரை காரை பெறுவோர் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்யிருக்காது என கூறப்படுகிறது.

கியா செல்டோஸ் கார்: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மொத்தம் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
செல்டோஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கின்றன. இதுதவிர 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட்டில் சி.வி.டி., டீசல் மாடலில் ஐ.வி.டி. மற்றும் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் கிடைக்கிறது.
கியா செல்டோஸ் கார் ரெட், ஆரஞ்சு, கிளேசியர் வைட், க்ளியர் வைட், கிரே, சில்வர், புளு மற்றும் பிளாக் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ-பேஸ் பேட்டரி எஸ்.யு.வி. கார் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா நிறுவனத்தின் அங்கமான ஜாகுவார் நிறுவனம் தயாரித்துள்ள ஐ-பேஸ் பேட்டரி கார்தான் இந்த ஆண்டில் மிகச்சிறந்த பேட்டரி எஸ்.யு.வி. காராகும். பேட்டரியில் இயங்கும் எஸ்.யு.வி. கார்களில் அதிக வேகம் செல்லும் காராகவும் இது விளங்குகிறது.
இந்த காரை ஸ்டார்ட் செய்து 4.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ‘லிஸ்டர்’ என்ற பெயரில் அறிமுகமாகும் இந்தக் காரின் விலை சுமார் ரூ. 1.16 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் காரில் கார்பன் பைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் எடை 100 கிலோவாக குறைந்துள்ளது. இது வாகனத்தின் செயல்திறன் மேம்பட உதவியுள்ளது. டைட்டானிய உலோகத்தில் ஆன அலாய் சக்கரங்கள் மற்றும் செராமிக் பிரேக் ஆகியனவும் வாகனத்தின் எடையைக் குறைப்பதற்கு மிகவும் உதவியுள்ளன.
ஜாகுவார் நிறுவனம் இந்த எஸ்.யு.வி. பேட்டரி காரை கண்கவர் வண்ணங்களில் தயாரித்து அடுத்த ஆண்டில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது.






