என் மலர்tooltip icon

    பைக்

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக S1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 வெளியிட்டது.
    • 2023 ஆண்டு இந்திய சந்தையில் மேலும் புது வாகனங்களை அறிமுகப்படுத்த ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு புது மைல்கல்களை இந்த ஆண்டு எட்டியது. முன்னதாக ஒலா S1 ஏர் பெயரில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூவ் ஒஎஸ் 2 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டது. இதுதவிர இந்திய விற்பனையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. சமீபத்தில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை ஒலா எலெக்ட்ரிக் தற்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்கு வந்துவிட்ட நிலையில், ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் 2023 ஆண்டுக்கான ஒலா எலெக்ட்ரிக் நிறுவன திட்டங்கள் பற்றி தெரிவித்து இருக்கிறார். இது குறித்த பதிவில், புது எலெக்ட்ரிக் வாகனங்களை 2023 ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மாஸ் மார்கெட் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவைகளை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    "இருசக்கர வாகன உற்பத்தி சீராக நடைபெற்று வருவது, மிக முக்கிய எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்கள், மென்பொருள், எலெக்டிரானிக்ஸ், பேட்டரி மற்றும் பவர்டிரெயின் உள்ளிட்ட பிரிவுகளில் அதிக போட்டியை ஏற்படுத்தும் வாய்ப்பை கொடுக்கும். இதன் மூலம் உலக தரம் மிக்க நான்கு சக்கர வாகனங்களை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலை பிரிவில் அறிமுகம் செய்ய வழி வகுக்கும்," என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    இதுதவிர புது எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீட்டு காலம் பற்றியும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். அதில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2027 இறுதியில் ஆறு வெவ்வேறு வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்திருக்க ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புது வாகனங்கள் மட்டுமின்றி, ஒலா எலெக்ட்ரிக் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

    • கைனெடிக் நிறுவனத்தின் புதிய லூனா மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • இதற்காக இரு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    லூனா பிராண்டு இந்திய சந்தையில் ரி எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்முறை லூனா மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கைனெடிக் நிறுவனம் எலெக்ட்ரிக் லூனா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்காக இரு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. கைனெடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யுஷன்ஸ் சார்பில் இந்த ஸ்கூட்டர் வெளியிடப்பட இருக்கிறது. இதனை அசெம்பில் செய்யும் பணிகளை கைனெடிக் என்ஜினியரிங் லிமிடெட் மேற்கொள்ள இருக்கிறது. புது எலெக்ட்ரிக் வாகனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் நடைபெறும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் லூனா மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இது மொபெட் போன்ற மாடலாக இருக்கும் என்றும் இது குறைந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் லூனா பிராண்டு மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கியது.

    எனினும், இந்த மாடல் நிலை நிறுத்தப்பட்ட பிரிவு பெருமளவு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. அந்த வகையில் இந்த மாடலின் வெற்றி பெறுமா என்பது எதிர்கால நடவடிக்கைகளை பொருத்தே அமையும்.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனையில் ஹண்டர் மற்றும் கிளாசிக் 350 மாடல்கள் அமோக வரவேற்பை பெற்றன.
    • இது தவிர பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ராயல் என்பீல்டு ஈடுபட்டு வருகிறது.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புது மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் 350சிசி மற்றும் 650சிசி மாடல்கள் விரிவுப்பட இருக்கிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் 450சிசி பிரிவில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக 2022 நவம்பர மாதத்தில் சூப்பர் மீடியோர் 650 மாடலை இத்தாலியில் காட்சிப்படுத்தி இருந்தது.

    இதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ரைடர் மேனியா நிகழ்விலும் சூப்பர் மீடியோர் 650 மாடலை காட்சிப்படுத்தியது. புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது. வினியோகம் 2023 பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது. ஃபிளாக்‌ஷிப் குரூயிசர் மாடலான சூப்பர் மீடியோர் 650 மாடலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய 350 சிசி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி 2023 மத்தியில் புதிய தலைமுறை புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், இந்த மாடல் கிட்டத்தட்ட உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவே தெரிகிறது. எனினும், இதன் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனில் மாற்றங்கள் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

    2023 புல்லட் மாடலில் கிளாசிக், ஹண்டர் மற்றும் மீடியோர் மாடல்களில் பயன்படுத்தப்படும் புதிய டபுள் கிராடில் வழங்கப்படுகிறது. இது தற்போதைய மாடலில் உள்ளதை விட குறைந்த அதிர்வுகள் மற்றும் சிறந்த ஸ்டீரிங் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. புல்லட் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது மாடல் எப்படி நிலைநிறுத்தப்படும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    புதிய எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளில் 349சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புல்லட் 350 மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் 450 சிசி அட்வென்ச்சர் டூரர் மாடலையும் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • யமஹா நிறுவனத்தின் புதிய அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் அறிமுகமாகி இருக்கிறது.
    • வாகனத்தை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் திறன் கொண்ட புது தொழில்நுட்பம் அதன் துவக்க கால உற்பத்தியில் உள்ளது.

    யமஹா நிறுவனம் இருசக்கர வாகன பாதுகாப்பை கருத்தில் கொண்டு புது தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் (AMSAS) என அழைக்கப்படும் புது தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் R3 டம்மி யூனிட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    எலெக்ட்ரிக் R3 மாடலின் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலை போன்றே ட்சியளிக்கிறது. எனினும், இதன் முன்புறம் இரண்டு மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. முன்புற சக்கரம் மற்றும் ஸ்டீரிங் ஹெட் உள்ளிட்டவைகளில் இவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. மோட்டார்சைக்கிளுக்கு இவற்றில் உள்ள ஆக்டுவேட்டர்கள் வாகனம் கீழே விழாமல் இருக்க வலது, இடது, முன்புறம் மற்றும் பின்புறம் என எந்த பக்கம் சாய வேண்டும் என்ற தகவலை வழங்குகிறது.

    இதில் உள்ள AMSAS பைக்கை பேலன்ஸ் செய்து அதிகபட்சம் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகம் வரை நிலையாக வைத்துக் கொள்கிறது. இதில் 6-ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது யமஹா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும். முன்னதாக 2015 மோட்டோபாட் மற்றும் 2017 மோட்டோராய்டு நிகழ்வுகளில் இந்த தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    தற்போதும் இந்த AMSAS தொழில்நுட்பம் அதன் துவக்க கட்டத்திலேயே உள்ளது. யமஹா மட்டுமின்றி ஹோண்டா நிறுவனமும் பாதுகாப்பை வழங்கும் சிஸ்டம்களை உருவாக்கி வருகிறது. ஹோண்டா நிறுவனம் செமி ஆட்டோனோமஸ் ரைடிங் மற்றும் ஏர்பேக் சிஸ்டம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே புது மோட்டார்சைக்கிள் மாடல்களை வெளியிட இருக்கிறது.
    • புது மாடல்கள் வெளியீட்டுக்கு முன் அவற்றின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2023 மோட்டார்சைக்கிள் மாடல்களை ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நைட்ஸ்டர் S மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் S மாடலும் நைட்ஸ்டர் மாடல் உருவான பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், புதிய நைட்ஸ்டர் S மாடலின் வெளிப்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அதன்படி புதிய நைட்ஸ்டர் S மாடலில் பில்லியன் சீட் மற்றும் பில்லியன் ஃபூட்ரெஸ்ட் வழங்கப்படுகிறது. நைட்ஸ்டர் ஸ்டாண்டர்டு எடிஷன் மாடலில் இவை இரண்டும் இடம்பெற்று இருக்காது. மேலும் புதிய நைட்ஸ்டர் S மாடல் சற்றே வித்தியாசமான வீல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த மாடல் கிலாஸ் பெயிண்ட் மற்றும் அசத்தலான கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. வெளிப்புறம் மாற்றப்பட்டு இருக்கும் நிலையில், நைட்ஸ்டர் S மாடலில் 975சிசி, வி ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 94 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

    Photo Courtesy: motorcycle.com

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு இம்மாத இறுதி வரை அசத்தல் சலுகைகளை வழங்குகிறது.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கூடுதல் அம்சங்களை வழங்க தொடர்ந்து புது ஒஎஸ் அப்டேட்களை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் வழங்கி வருகிறது. மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஸ்கூட்டர்களின் செயல்திறன், ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதோடு புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் புது அப்டேட் மூவ் ஒஎஸ் 3 ஆகும். இந்த அப்டேட் தீபாவளி சமயத்தில் வெளியாக இருந்த நிலையில், திடீரென வெளியீடு தாமதமானது.

    முன்னதாக மூவ் ஒஎஸ் 2.0 வெளியீடும் பலமுறை தாமதமானது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஒலா S1, S1 ஏர் மற்றும் S1 ப்ரோ என மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்கூட்டர்கள் வரிசையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஸ்கூட்டர்களுக்கு 50 புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.

    இதில் ஹில் ஹோல்டு, மூட்ஸ், ரிஜென் வி2, பிராக்சிமிட்டி லாக், கீ ஷேரிங், காலிங், ஹைப்பர் சார்ஜிங் உள்ளிட்டவை ஒலா எலெக்ட்ரிக் ஏற்கனவே அறிவித்து தற்போது வழங்கி இருப்பவை ஆகும். புது அம்சங்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் ஸ்கூட்டரின் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்தி இருப்பதாக ஒலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. இந்த அப்டேட் ஆக 4.5 நொடிகள் ஆகும்.

    புது அப்டேட்டை தொடர்ந்து ஒலா ஸ்கூட்டர்களை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதோடு ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த ரேன்ஜ் இரண்டில் இருந்து அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை சிறப்பாக அதிகரித்து இருக்கிறது. இவை தவிர இந்த அப்டேட் ஸ்கூட்டரில் ஏராளமான அம்சங்களை வழங்கி இருக்கிறது.

    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நின்ஜா 300 மாடலுக்கு குறுகிய கால விலை குறைப்பை அறிவித்துள்ளது.
    • நின்ஜா 300 மாடலில் 38.88 ஹெச்பி பவர் கொண்ட 296சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் செயல்பட்டு வரும் கவாசகி விற்பனையாளர்கள் நின்ஜா 300 மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர். இந்த விலை குறைப்பு குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு0 டிசம்பர் 31, 2022 தேதி வரை அமலில் இருக்கும். 2023 மாடலை அறிமுகம் செய்யும் முன், தற்போதைய மாடல்களை விற்று முடிக்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கவாசகி நின்ஜா 300 விலை இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட கிராஃபிக்ஸ் உடன் அறிமுகமான போதிலும், நின்ஜா 300 மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 13 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    பின் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இதன் விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டது. விலை உயர்வு காரணமாக வாங்காமல் இருந்த வாடிக்கையாளர்களை தூண்டும் வகையிலும், விலை குறைப்பு மூலம் வாகன விற்பனையை அதிகப்படுத்தவும் கவாசகி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய விலை குறைப்புக்கு முன் கவாசகி நின்ஜா 300 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    நின்ஜா 300 மாடலில் 296சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 38.8 ஹெச்பி பவர், 26.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீல் டியூப் சேசிஸ், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பிரீலோடு-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக், இருபுறமும் ஒற்றை டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளில் கன்வென்ஷனல் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், செமி டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கவாசகி நின்ஜா 300 மாடல் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அபாச்சி RR310, பிஎம்டபிள்யூ G310 RR மற்றும் கீவே K300 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்குகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 200சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது மாடலின் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் மெக்கானிக்கல், காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை முந்தைய வெர்ஷனை விட சிறிதளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல் தற்போது ஸ்போர்ட் தோற்றம் பெற்று இருக்கிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் முன்புற ஃபோர்க்குகள், எல்இடி ஹெட்லைட்டின் மேல் சிறிய ஃபிளைஸ்கிரீன், பாடி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ஹெட் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பின்புற டெயில் ரேக் மீது டியுபுலர் கிராப் ரெயில் உள்ளது. இதன் அலாய் டிசைன், ஸ்கூப்டு சீட் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புது மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக சற்றே சக்திவாய்ந்த 200சிசி, சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 2 வால்வுகளுக்கு பதில் 4 வால்வுகள் கொண்ட செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 18.83 ஹெச்பி பவர், 17.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கால் அலெர்ட்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஸ்டாண்டு சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரு வீல்களிலும் ஒற்றை டிஸ்க் மற்றும் அலாய் வீல் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 726, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய 2V மாடலின் விலையை விட ரூ. 1036 அதிகம் ஆகும். புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல்- ஸ்போர்ட்ஸ் ரெட், மேட் ஃபன்க் லைம் எல்லோ மற்றும் மேட் ஷீல்டு கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா 110 சீரிசில் ABS பிரேக்கிங் கொண்ட புது மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
    • புது பிளாட்டினா 110 மாடலின் ஸ்பீடோமீட்டரில் ABS இண்டிகேட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ABS வசதி கொண்ட தனது பிளாட்டினா 110 ABS மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடலின் விலை ரூ. 72 ஆயிரத்து 224, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எண்ட்ரி லெவல் கம்யுட்டர் பிரிவில் இத்தகைய பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் ஒரே மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை புதிய பிளாட்டினா 110 ABS பெற்று இருக்கிறது.

    புதிய பிளாட்டினா 110 மாடலில் பஜாஜ் நிறுவனம் சிங்கில் சேனல் ABS வழங்கி இருக்கிறது. இதன் மூலம் மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பு அதிகரித்து இருக்கிறது. இத்துடன் புதிய பிளாட்டினா 110 ABS மாடலில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ABS இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கியர் கைடன்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் இது பிளாட்டினா சீரிசில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 110 ABS மாடல் எபோனி பிளாக், கிளாஸ் பீவ்டர் கிரே, காக்டெயில் வைன் ரெட் மற்றும் சஃபயர் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர புதிய பிளாட்டினா 110 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 115.45சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.44 ஹெச்பி பவர், 9.81 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இவை தவிர 17 இன்ச் அளவில் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள், ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், 11 லிட்டர் ஃபியூவல் டேன்க், செமி டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடல் இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ், ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா CD 110 டிரீம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் ஏராள மாற்றங்கள் செய்யப்படுகிறது.
    • இந்த மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்படுவதோடு, விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளின் புது டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதற்கான டீசர்கள் அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளுக்கான புது டீசரில் முன்புற தோற்றம் அம்பலமாகி இருக்கிறது. அந்த வகையில் புது மாடல் மீண்டும் மேம்படுத்தப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் ஸ்டைலிங் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. எனினும், இதன் ஹெட்லேம்ப் பொசிஷண் மாற்றப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பாடி நிறத்தால் ஆன ஃபிளை ஸ்கிரீன், ரிடிசைன் செய்யப்பட்ட பெல்லி பேன் வழங்கப்பட்டு உள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட செட்டப் வழங்கப்படலாம். புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் 199.6சிசி சிங்கில் சிலிண்டர், ஆயில்/ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை 18.8 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் வழங்கப்பட்டு இருந்த இரண்டு வால்வுகள் கொண்ட வேரியண்ட் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்திவிட்டது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு அந்நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருந்தது.
    • தற்போது ஒலா S1 ஸ்கூட்டருக்கு புதிய கேஷ்பேக் சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று ஒலா S1 மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த சலுகைகளில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் நிலையில், கேஷ்பேக் சலுகை டிசம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 97 ஆயிரத்து 999 என மாறி விடும், அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் போது மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் முறை, குறைக்கப்பட்ட வட்டி, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளில் தள்ளுபடி, பிராசஸிங் கட்டணத்தில் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சலுகைகள் மட்டுமின்றி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்க இருக்கிறது. தற்போது இந்த ஒஎஸ் பீட்டா முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இறுதி வெர்ஷன் OTA முறையில் வழங்கப்பட இருக்கிறது. புதிய மூவ் ஒஎஸ் 3.0 ஸ்கூட்டரை ஓட்டும் போது சவுண்ட்-டிராக், ஹில் ஹோல்டு, ரிஜெனரேடிவ் பிரேக்கிங் மற்றும் சில அம்சங்களை ஸ்கூட்டர்களில் வழங்க இருக்கிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் விலை உயர்த்தப்பட்டன.
    • இரு ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் அவ்வப்போது உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹீரோ பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை தற்போது அதிகரித்து இருக்கிறது.

    எனினும், தற்போதைய விலை உயர்வில் டெஸ்டினி 125 மாடல் பாதிக்கப்படவில்லை. பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. விலை உயர்வின் படி ஹீரோ பிலெஷர் பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 982 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 79 ஆயிரத்து 522 என மாறி இருக்கிறது. இதே போன்று மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 816 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 92 ஆயிரத்து 760 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய விலை விவரங்கள்:

    ஹீரோ பிலெஷர் பிளஸ் LX ரூ. 70 ஆயிரத்து 982

    ஹீரோ பிலெஷர் பிளஸ் VX ரூ. 72 ஆயிரத்து 738

    ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ரூ. 76 ஆயிரத்து 228

    ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ஜூபிலண்ட் எல்லோ ரூ. 79 ஆயிரத்து 522

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிரம் ரூ. 69 ஆயிரத்து 816

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிஸ்க் ரூ. 74 ஆயிரத்து 910

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 83 ஆயிரத்து 440

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 88 ஆயிரத்து 240

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் ரூ. 88 ஆயிரத்து 660

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் / கனெக்டெட் ரூ. 92 ஆயிரத்து 760

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    விலையை உயர்வை அடுத்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், தொடர்ந்து நிதி சார்ந்த சலுகைகளை வழங்குவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் குறுகிய காலத்திற்கு எக்சேன்ஜ் மற்றும் நிதி சலுகைகளை அறிவித்து இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

    ×