search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இரண்டு 350சிசி பைக்குகளை அறிமுகம் செய்யும் ராயல் என்பீல்டு?
    X

    இரண்டு 350சிசி பைக்குகளை அறிமுகம் செய்யும் ராயல் என்பீல்டு?

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனையில் ஹண்டர் மற்றும் கிளாசிக் 350 மாடல்கள் அமோக வரவேற்பை பெற்றன.
    • இது தவிர பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ராயல் என்பீல்டு ஈடுபட்டு வருகிறது.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புது மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் 350சிசி மற்றும் 650சிசி மாடல்கள் விரிவுப்பட இருக்கிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் 450சிசி பிரிவில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக 2022 நவம்பர மாதத்தில் சூப்பர் மீடியோர் 650 மாடலை இத்தாலியில் காட்சிப்படுத்தி இருந்தது.

    இதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ரைடர் மேனியா நிகழ்விலும் சூப்பர் மீடியோர் 650 மாடலை காட்சிப்படுத்தியது. புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது. வினியோகம் 2023 பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது. ஃபிளாக்‌ஷிப் குரூயிசர் மாடலான சூப்பர் மீடியோர் 650 மாடலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய 350 சிசி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி 2023 மத்தியில் புதிய தலைமுறை புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், இந்த மாடல் கிட்டத்தட்ட உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவே தெரிகிறது. எனினும், இதன் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனில் மாற்றங்கள் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

    2023 புல்லட் மாடலில் கிளாசிக், ஹண்டர் மற்றும் மீடியோர் மாடல்களில் பயன்படுத்தப்படும் புதிய டபுள் கிராடில் வழங்கப்படுகிறது. இது தற்போதைய மாடலில் உள்ளதை விட குறைந்த அதிர்வுகள் மற்றும் சிறந்த ஸ்டீரிங் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. புல்லட் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது மாடல் எப்படி நிலைநிறுத்தப்படும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    புதிய எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளில் 349சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புல்லட் 350 மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் 450 சிசி அட்வென்ச்சர் டூரர் மாடலையும் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×