நவராத்திரி 4-வது நாளில் வழிபட வேண்டிய தெய்வம்
- கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார்.
- கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும்.
நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம்.
கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார். வடமொழியில் "கூ" (சிறியது), "உஷ்மா" (வெப்பம்), "அண்டா" (உருண்டை) என்ற சொற்களின் சேர்க்கையே கூஷ்மாண்டா என்பதாகும், இது "சிறிய வெப்பமான உருண்டை வடிவத்தில் இருக்கும் பிரபஞ்சத்தை உருவாக்கியவள்" என்று பொருள்படும்.
கூஷ்மாண்டா தேவி
புராணங்களில் சொல்லப்பட்டபடி, காலத்தின் தொடக்கத்தில் எங்கும் இருள் மட்டுமே இருந்தது. சிருஷ்டி எதுவும் இல்லாமல், பிரபஞ்சம் வெறுமையாகக் காணப்பட்டது. அப்பொழுது, மகா சக்தியான ஆதி பராசக்தி தனது சிரிப்பின் ஒளியால் பிரபஞ்சத்தை உருவாக்கினாள்.
அவள் சிரித்தபோது வெளிப்பட்ட ஒளி, சூரிய மண்டலத்தின் ஒளியாக பரவியது. அந்த ஒளியிலிருந்தே உலகம் தோன்றியது.
கூஷ் என்றால் புன்சிரிப்பு என்றும், அண்டம் என்றால் உலகம் என்றும் பொருள். இவர், சூரியனின் மையப்பகுதியில் வசிப்பவர் என்றும், உலகத்திற்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்குபவர் என்றும் நம்பப்படுகிறது.
கூஷ்மாண்டா தேவி அஷ்டபுஜ (எட்டு கைகள்) உடையவள். கைகளில் கமண்டலம், தாமரை, அமிர்தக் கலசம், சங்கு, சக்கரம், அம்பு, வில் ஆகியவை உடையவள். இவரது வாகனம் சிங்கம். அவரது முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒளிர்கிறது. சூரிய மண்டலத்தின் நடுவில் திகழ்கிறாள்.
கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும். பக்தர்களுக்கு ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செழிப்பு, ஆனந்தம் வழங்குகிறாள். படைப்பின் தெய்வமாக கருதப்படுவதால், அவர் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரியவளாகக் கருதப்படுகிறார்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி கூஷ்மாண்டாயை நமஹ' என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.