Navratri Special: நவராத்திரி 9-வது நாளில் வழிபட வேண்டிய தெய்வம்... சித்திதாத்ரி தேவி
- சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
- சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 9-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'சித்திதாத்ரி தேவி'. சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். சித்திதாத்ரி என்பவர் பார்வதி தேவியின் ஒன்பதாவது மற்றும் இறுதி வடிவமான நவதுர்க்கைகளில் ஒருவர்.
"சித்தி" என்றால் சக்தி அல்லது படைப்பு, இருப்பின் இறுதி மூலத்தை உணரும் திறன், "தாத்ரி" என்றால் கொடுப்பவர் அல்லது தருபவர் எனப் பொருள்படும்.
எனவே, சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும். இவர் நவராத்திரியின் இறுதி நாளான நவமி அன்று வணங்கப்படுகிறார்.
சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு அனைத்து தெய்வீக விருப்பங்களையும் பூர்த்தி செய்து, வாழ்வின் வெற்றியை அருள்பவள்.
சித்திதாத்ரி தேவி கதை:
பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில்தான் சித்திதாத்ரி, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை உருவாக்கி, அவர்களுக்கு முறையே படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் பணியை வழங்கினார்.
அந்த தெய்வங்களுக்கு தத்தம் கடமைகள் கொடுக்கப்பட்டபோதும், பிரபஞ்ச படைப்பு நடைபெற வேண்டுமெனில் அஷ்டசித்திகள் (அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராக்யம், பிராகாம்யம், ஈஷித்துவம், வசித்துவம்) தேவைப்பட்டது. அந்த சித்திகளை தெய்வங்களுக்கு அருளியதே சித்திதாத்ரி தேவி.
புராணக் கதையின்படி, சித்திதாத்ரி தேவியே சிவபெருமானுக்கே அஷ்டசித்திகளை அருளினாள்.
மூன்று பிரபுக்களும், மகாதேவியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்கள் சக்திகளை அடைய ஆழ்ந்த தவம் செய்ய கடலை நோக்கிச் சென்றனர். அவர்களின் அர்ப்பணிப்பால் திருப்தியடைந்த சித்திதாத்ரி, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு சித்திகளை வழங்கினார். இப்படித்தான் பிரபஞ்சம் மும்மூர்த்தியால் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
சிவபெருமான் மிகுந்த தவம் செய்து தேவியைத் தரிசித்தார். அப்போது சித்திதாத்ரி தேவியே அவருக்கு அஷ்டசித்திகளை அருளினாள். அந்த அருளால்தான் சிவன் அர்த்தநாரீசுவரன் (அரை ஆண் – அரை பெண்) வடிவில் வெளிப்பட்டார். இதனால் பிரபஞ்சத்தில் ஆண் – பெண் சமநிலை உருவானது. இந்த வடிவத்தில், சிவபெருமானின் உடலின் ஒரு பாதியும், சித்திதாத்ரியின் மறுபாதியும் ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தை உருவாக்குகின்றன. அதனால் தான், சித்திதாத்ரி தேவியை சகல சித்திகளின் தாயான தேவி என்கிறார்கள்.
சித்திதாத்ரி தேவி நான்கு கரங்கள் உடையவள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை தாங்கியவள். இவரது முகத்தில் எப்போதும் சாந்தமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி சித்திதாத்ரியாயை நமஹ" என்று ஜபிக்க வேண்டும்.