உலகம்

இஸ்ரேல் மீது 100 டிரோன்களை ஏவிய ஈரான்.. ஆபரேஷன் 'ரைசிங் லயன்' தாக்குதலுக்கு பதிலடி!

Published On 2025-06-13 12:50 IST   |   Update On 2025-06-13 12:50:00 IST
  • ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
  • இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது "ரைசிங் லயன்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் நாடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் மையம் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இருக்கும் இடம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்ட தளங்கள் ஆகியவற்றைத் தாக்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலை நீக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த டிரோன்களை இடைமறிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி, ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஈரானிய அரசு தொலைக்காட்சியின்படி, இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இஸ்ரேல்- ஈரான் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News