வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் அழிந்திருக்கும் - நேதன்யாகுவை பாராட்டிய டிரம்ப்
- ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.
- இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜனாதிபதி டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது இஸ்ரேல்-காசா போர், ஈரானின் அணுசக்தி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி உற்பத்தி நிலையங்களை குறிவைத்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதனால் ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது ஈரான் அணுசக்தி திறன்களை கட்டமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு அணுசக்தி திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கினால் அதனை முற்றிலும் அழித்து சின்னாபின்னமாக்கப்படும். பின்னர் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் உள்பட 8 போர்களை தான் நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லை எனவும் டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட முறை அவர் இதுபோல் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது தலையீட்டால் ரஷியா-உக்ரைன் போரும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தனது வீட்டை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய அதிபர் புதினே தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் பேசினார்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது. அதற்கு ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும்.
மேலும் இந்த போரின்போது வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே அழிந்திருக்கும் என பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.