நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. ஈரான் மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா!
- மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- ஈரானின் முன்னாள் நிதியமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி புதிய மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈரானிய நாணயமான 'ரியால்', அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
நிலைமை மோசமடைந்ததையடுத்து, மத்திய வங்கி ஆளுநராக இருந்த முகமது ரெசா ஃபர்சின் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஏற்றுக்கொண்டார்.
அவருக்குப் பதிலாக, ஈரானின் முன்னாள் நிதியமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி புதிய மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் போன்றவை இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.