உலகம்

செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை அழிப்போம் - ஹவுதி போராளிகள் சூளுரை

Published On 2025-06-22 07:19 IST   |   Update On 2025-06-22 08:18:00 IST
  • உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது.
  • செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது

இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், ஹவுதி ஆயுதப் படைகள் செங்கடலில் உள்ள அமெரிக்க சரக்குக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைக்கும்" என்று ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் சஹ்யா சாரி கூறினார்.

முன்னதாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பின்னர், ஹவுதிகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கப்பல்களைத் தாக்கினர். இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹவுதிகள் மீது அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதலை நடத்தியது.

மே மாதம் அமெரிக்காவும் ஹவுதிகளும் ஓமானின் மத்தியஸ்தத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டினர். இந்த ஒப்பந்தம் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று கூறுகிறது.

உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையாகும்.

செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து, கப்பல்கள் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டு ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையிலிருந்து சில காலம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News