உலகம்

3-ம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான்

Published On 2026-02-26 17:31 IST   |   Update On 2026-02-26 17:31:00 IST
  • அணு ஆயுத திட்டத்தை நிறுத்த ஈரானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்.
  • நெருக்கடி கொடுக்கும் வகையில் போர்க் கப்பல்களை மத்திய கிழக்குப் பகுதிக்கு அமெரிக்கா நகர்த்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதற்காக யூரேனியத்தை செறிவூட்டி வருகிறது. யூரேனியத்தை செறியூட்டும் பணியை 60 சதவீதம் முடித்து விட்டது. யூரேனியத்தை 90 சதவீதம் செறியூட்டிவிட்டால், ஈரான் அணு ஆயுதம் கொண்ட நாடாக மாறிவிடும்.

இதனால் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் ஈரான் அணுஆயுத திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஈரான் அமெரிக்கா கூறியதை கேட்கவில்லை. இதனால் கடந்த வருடம் அணுஆயுத இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அதில் இருந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உடன் ஈரான் அணுஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதன் தொடர்பாக ஈரானுக்கு அழுத்த கொடுக்க போர் விமானம் மற்றும் போர்க்கப்பல்களை அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதிக்கு நகர்த்தி வருகிறது.

இந்த நிலையில் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் அணுஆயுத ஒப்பந்தம் ஏற்படுமா? என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த வாய்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார்.

அதேவேளையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி அணுஆயுத திட்டம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் நிலையிலும் ஈரான் அதை தொடர விரும்புகிறது.

அமெரிக்கா தாக்குதலை நிகழ்த்தினால், மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தளங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். மேலும், மத்திய கிழக்கு பகுதிகள் முழுவதும் போர் பரவும் எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News