செய்திகள்

காஷ்மீர் தாக்குதலில் 40 வீரர்கள் பலி: மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்

Published On 2019-02-20 10:40 GMT   |   Update On 2019-02-20 10:40 GMT
ஜம்மு காஷ்மீரில் 40 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இதற்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐநா சபையில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வர உள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack

பாரீஸ்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.

இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.

அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack

Tags:    

Similar News