இந்தியா

சிறுமியை ஆபாசமாக பேசி கேலி செய்த 4 சிறுவர்கள்.. ஒழுக்கம் கற்பிக்காத தாய்மார்களை கைது செய்த போலீஸ்!

Published On 2025-12-21 14:46 IST   |   Update On 2025-12-21 14:46:00 IST
  • 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர்.
  • கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், சிறுமி ஒருவரை கேலி செய்த சிறுவர்களின் தாயாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்களுக்குச் நல்லொழுக்கம் கற்பிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களது 4 தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.

காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங் பேசுகையில், "இந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். சிறுவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய பெற்றோரைத் தண்டிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். குழந்தைகளுக்குச் சிறந்த மதிப்புகளைப் போதிக்காத பெற்றோர்களே இதற்குப் பொறுப்பு," என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.    

Tags:    

Similar News