திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியிடுமா? - நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்
- டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதையடுத்து கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஏற்கனவே திருப்பரங்குன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தான் உள்ளார். ஆகவே இந்த மாதிரியான கோரிக்கைகளை நாங்கள் எழுப்பவில்லை என்றார்.
இதையடுத்து முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்டுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அத்தகைய எந்த தொகுதிகளையும் நாங்கள் அதிமுகவிடம் கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.