தமிழ்நாடு செய்திகள்

'கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-03-02 21:55 IST   |   Update On 2026-03-02 21:55:00 IST
  • தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே நடைபெறும்.
  • 2025-2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வீணடிக்கும்.

கடந்தாண்டு தமிழ்நாட்டின் 12 இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. இதில் 4 திட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 இடங்களுக்கான இறுதி அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நிலுவையில் உள்ள மீதமுள்ள 8 அகழாய்வு திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி தரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

"கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களுக்கான தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு கோரியுள்ளது. இதற்கான முன்மொழிவுகள் 2025 ஜூலை மாதமே சமர்ப்பிக்கப்பட்டு, நவம்பர் மாதம் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இருப்பினும், கடந்த 8 மாதங்களாக இதற்கான அனுமதி நிலுவையில் உள்ளது. நாங்கள் மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை எழுப்பி வருகிறோம், ஆனால் தொடர்ந்து இது புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே நடைபெறும். இந்த காலக்கட்டத்தைத் தவறவிட்டால், பருவமழை காரணமாக களப்பணிகள் முடங்கிவிடும்; இது முக்கியமான ஆராய்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்துவதுடன், 2025-2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியையும் வீணடிக்கும்.

நான் கேட்க விரும்புவது இதுதான், ஏன் இந்த தயக்கம்? தமிழ் நாகரிகத்தின் தொன்மை இந்தியாவைக் குறைத்து மதிப்பிடாது; அது இந்தியாவின் நாகரிகப் பெருமைக்கு மேலும் வலு சேர்க்கும். பாஜக அரசு எதைக் கண்டு பயப்படுகிறது? அகழ்வாராய்ச்சிகளுக்கு ஒப்புதல் அளியுங்கள், வரலாறு பேசட்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஆய்வுகளுக்காக பட்ஜெட்டில் ரூ.7 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 

Tags:    

Similar News