தமிழ்நாடு செய்திகள்

சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும் - விஜயகாந்தை அண்ணன் என குறிப்பிட்டு பேசிய விஜய்

Published On 2025-08-21 17:09 IST   |   Update On 2025-08-21 17:09:00 IST
  • மதுரைக்கு வந்தவுடன் என் மனதில் எம்.ஜி.ஆர். தான் ஓடிக்கொண்டிருந்தார்.
  • என்னுடைய அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் பழக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. இதனைத்தொடர்ந்து "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.

இதனையடுத்து மக்களிடம் உரையாற்றிய விஜய், "சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிமீ தூரம் சத்தம் கேட்கும். சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். இறந்து போன மிருகங்களை சிங்கம் தொட்டு கூட பார்க்காது. காட்டில் எல்லை வகுத்து காட்டையே தனது கட்டுப்பாட்டில் சிங்கம் வைத்திருக்கும். சிங்கம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் தனியே வரவேண்டும் என்று நினைத்தால் தனியே வந்து அத்தனைக்கும் தண்ணீ காட்டும். சிங்கம் எப்போதுமே சிங்கம் தான்.

மதுரை என்றால் வீரம் தான். மதுரை என்றாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் நினைவுக்கு வரும். மதுரை உணர்வு பூர்வமான மண். இந்த மண்ணில் வாழ்பவர்களும் உணர்வுபூர்வமானவர்தான்.

மதுரைக்கு வந்தவுடன் என் மனதில் எம்.ஜி.ஆர். தான் ஓடிக்கொண்டிருந்தார். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரை போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் பழக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் மதுரை மண்ணை சேர்ந்தவர் தானே" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News