தமிழ்நாடு செய்திகள்

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்... அமித்ஷா கூறியதை ஆதரித்து பேசிய டி.டி.வி.தினகரன்

Published On 2025-06-28 12:15 IST   |   Update On 2025-06-28 12:15:00 IST
  • தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.
  • எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்.

திருச்சி:

திருச்சியில் நிருபர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா பல முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார்.

தேர்தல் நேரத்தில் விஜய் கூட்டணியில் இணைவது குறித்து தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார் காத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.

தமிழகத்தின் இன்றைய நிலையை பார்த்தால் 2036 ல் அல்ல 2026- லேயே தி.மு.க. ஆட்சிக்கு வராது.

பா.ம.க. நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை. முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக தான் பதில் அளித்துள்ளார்.

தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார். 2021லும் அவர் முயற்சி செய்தார். 2026-ல் அது பலன் அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையூறு வரும் வகையில் ஏதாவது கருத்து சொன்னால் அது நாகரீகமாக இருக்காது.

உரிய தொகுதிகளை தேர்தல் நேரத்தில் பெற்று நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பா.ம.க., தே.மு.தி.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்பது குறித்தான ஜோசியம் எனக்கு தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News