தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?- செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம்
- தமிழகத்தில் ஜெயலலிதா காலத்திலேயே கோவில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள்.
- ஜெயலலிதாவை பழித்து பேசியவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் இயக்கத்தை சீரமைக்க, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கிராம கமிட்டி முதன்மை பயிற்சியாளர்கள் 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 12,525 பஞ்சாயத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
கிராம கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு 72 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் முழுமை பெறும். அனைத்து மாவட்டங்களிலும் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை முழுமையாக செய்து வருகிறோம்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூடுதல் தொகுதிகளை கேட்டது அவரது சொந்த கருத்து.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வலிமையை நாங்கள் மேலிடத்தில் தெரிவிப்போம். கூடுதல் தொகுதி பெறுவது, ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். அவர்களின் அனுமதி பெற்று தான் நான் எதுவும் சொல்ல முடியும். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பேசும்போது தொண்டர்களின் மனசாட்சியாக நான் செயல்படுவேன்.
தமிழகத்தில் ஜெயலலிதா காலத்திலேயே கோவில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள். அதனை தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.
அ.தி.மு.க. திராவிட கட்சி அல்ல. அந்த காலம் மலையேறி போச்சு.. ஜெயலலிதாவை பழித்து பேசியவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகால போலீஸ் காவலில் மரணம் அடைந்தவர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திப்பதாக வரும் செய்திகளை பார்த்தால் அவர் அரசியல் செய்வதாக தெரிகிறது. அவரது அரசியல் வேறு, எங்கள் அரசியல் வேறு.
பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற குடியாத்தத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் 13-ந்தேதி சென்னையில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதை சிறப்பாக நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்க பாலு, திருநாவுக்கரசர், மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அசன்மவுலானா, துரை சந்திரசேகர், பொதுச்செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், மற்றும் வழக்கறிஞர் நரேஷ் குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.