தமிழ்நாடு செய்திகள்

சிவகங்கை பேருந்து விபத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Published On 2025-11-30 20:25 IST   |   Update On 2025-11-30 20:25:00 IST
  • 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

மேலும், நிவாரணத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News