நவம்பர் மாத மழைப்பொழிவு இயல்பைவிட மிகவும் குறைவு - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
- தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 181.77 மிமீ ஆகும்.
- சென்னையில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 373.6 மிமீ ஆகும்.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிகனமழையை கொடுத்த டிட்வா புயல், டெல்டா பகுதிகளில் கனமழை கொடுத்தது. அதே சமயம் இப்புயலால் சென்னையில் கனமழை எதுவும் பெய்யவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்திற்கான மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டில் நவம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் சென்னையில் நவம்பர் மாத மழைப்பொழிவு கடந்த 25 ஆண்டுகளில் 5வது மோசமான நவம்பர் மாதமாக முடிவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 181.77 மிமீ என்றிருக்கும் நிலையில் இந்தாண்டு 149.2 மிமீ மட்டுமே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
சென்னையில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 373.6 மிமீ என்றிருக்கும் நிலையில் இந்தாண்டு 104.77 மிமீ மட்மே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.